Press "Enter" to skip to content

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: ‘காசாவில் இருந்து ஒரு வாரத்தில் 3,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன’ – இஸ்ரேல் ராணுவம்

பட மூலாதாரம், EPA

கடந்த மே 10ஆம் தேதி இஸ்ரேலுடனான மோதல் தொடங்கியதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைதான் “மிகவும் கொடூரமான” நாளாக அமைந்தது என்று காசாவில் உள்ள பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் இதுவரை தங்கள் தரப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

காசாவில் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 55 குழந்தைகள் மற்றும் 33 பெண்களும் அடக்கம் என்று கூறுகிறது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீன சுகாதார அமைச்சகம்.

பாலத்தீனர்கள் 1,230 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களில் தீவிரவாதிகளும் அடக்கம் என்று கூறுகிறது இஸ்ரேல்.

கடந்த ஒரு வார காலத்தில் காசா பகுதியில் இருந்து பாலத்தீன ஆயுதக் குழுவினர் தங்கள் பகுதியை நோக்கி 3,000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவித் தாக்கியுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

நள்ளிரவுக்குப் பின் நடந்த வான் தாக்குதல்

நள்ளிரவுக்குப் பின் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஹமாஸ் தொடர் ராக்கெட் தாக்குதல்களை நடத்திய சற்று நேரத்திலேயே திங்கட்கிழமை அதிகாலை காசா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேலிய போர் விமானங்கள் 80 வான் தாக்குதல்களை நடத்தின.

Fire and smoke rise above buildings in Gaza City

பட மூலாதாரம், AFP

இருதரப்பு மோதல் தொடர்ந்தால் அந்தப் பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத நெருக்கடி உண்டாகும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக காசாவில் எரிபொருள் பற்றாக்குறை உண்டாகும் என்றும் இதனால் மருத்துவமனைகள் மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது.

ஐநாவின் மத்திய கிழக்கு பிராந்திய அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளர் லின் ஹேஸ்ட்டிங்ஸ், ஐநா சார்பில் காசாவுக்குள் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கு அனுமதிக்குமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடம் தாங்கள் கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அது பாதுகாப்பானது அல்ல என்று தங்களிடம் சொல்லப்பட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்:ஞாயிறு என்ன நடந்தது?

காசாவின் பரபரப்பு மிகுந்த வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு பின் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது மூன்று கட்டடங்கள் சரிந்து விழுந்தன. டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலும், இரவும் இஸ்ரேல் பகுதியை நோக்கி ஹமாஸ் தரப்பால் தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதன் காரணமாக மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர்.

பாலத்தீனர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்தனர். ஆனால் மக்கள் தொகை நெருக்கம் அதிகமாகவும், வசதி வாய்ப்புகள் குறைவாகவும் உள்ள காசா பகுதியில் பெரும்பாலானவர்களுக்கு போக்கிடம் இல்லை.

தமது வீட்டிலேயே மிகவும் பாதுகாப்பான அறை என்று தாம் கருதிய இடத்தில் தமது மகள்களை தூங்க வைத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகிறார் காசாவில் உள்ள ரியாத் எஸ்குண்டானா. ஆனால் அவரது 6 வயது மகள் சுசி மட்டுமே அந்த இரவில் உயிர் பிழைத்தாள்.

அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர்.

A streak of light is seen as Israel's Iron Dome intercepts rockets launched from the Gaza strip

பட மூலாதாரம், Reuters

“குழந்தைகளுக்கு என்ன ஆனது என்பதைக் காண நான் ஓடிச் சென்றேன். குழந்தைகளை இறுக்க அணைத்துக் கொண்டு அவர்களை அறையின் வெளியே இருந்து அழைத்துவர என் மனைவி பாய்ந்தாள். ஆனால் இரண்டாவது வான் தாக்குதல் அந்த அறையைத் தகர்த்து விட்டது. நான் சிதிலங்களுக்குள் நின்று கொண்டிருந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் சுரங்கப் பாதை அமைப்பை இலக்கு வைத்துத் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அந்தச் சுரங்கம் சரிந்து விழுந்ததால் அதற்கு மேலே இருந்த வீடுகள் இடிந்து விழுந்து, எதிர்பாரா விதமாக பொதுமக்கள் உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தலைவர்கள் மற்றும் அந்த அமைப்பின் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தாங்கள் தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

ஹமாஸ் அமைப்பின் சரக்கு மற்றும் மனித வள மேலாண்மை பிரிவின் தலைவர் என்று கூறப்படும் யாயாஹ் சின்வார் மற்றும் அவரது சகோதரர் முகமது சின்வார் ஆகியோரின் வீடுகளையும் தாங்கள் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் தாக்குதல் நடந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று ஏபி செய்தி முகமை தெரிவிக்கிறது.

காசாவில் உள்ள மீட்புப் பணியாளர்கள் சிதிலமடைந்த கட்டடங்கள் நடுவில் இருந்து மக்களை மீட்கும் பணியில் நாள்முழுவதும் ஈடுபட்டனர். ஷிஃபா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஐமன் அபு அல்-அவுஃப் என்பவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர்களில் அடக்கம் என்று பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிகிச்சை குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார் என்று தெரிவிக்கப்டுகிறது.

Map showing Israel and the Gaza Strip

நடுவானில் அழிக்கப்பட்ட ஹமாஸ் ராக்கெட்டுகள்

ஹமாஸ் ஏவிய ராக்கெட்டுகள் இஸ்ரேலின் ஆஹ்கேலோன், ஆஷ்தோத், நெடிவோட் ஆகிய நகரங்களையும், மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலின் பிற பகுதிகளையும் சென்று தாக்கின.

ஆனாலும் இப்பகுதிகளில் காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த செய்தி எதுவும் வெளியாகவில்லை.

சென்ற வாரம் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதகளிலேயே ஞாயிற்றுக்கிழமை தான் அதிக எண்ணிக்கையிலான ராக்கெட்டுகள் தங்கள் பகுதிக்குள் வந்தன என்று இஸ்ரேல் கூறுகிறது.

நடுவானில் ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும் இஸ்ரேலின் அயர்ன் டோம் (iron dome) பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலான ராக்கெட்டுகளைத் தடுத்து அழித்துவிட்டது. எனினும் சில வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் ஹமாஸ் ராக்கெட்டுகளால் சேதமடைந்துள்ளன.

இஸ்ரேல் – பாலத்தீன தரப்புகள்: சமீபத்திய வன்முறை ஏன்?

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெருசலேம் நகரில் சமீப நாட்களாக வன்முறை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மே 10ஆம் தேதி ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினருடன் நடந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் காயமடைந்தனர்.

Map showing key holy sites in Jerusalem

கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள இஸ்லாமியர்கள் வாழும் பகுதி வழியாக இஸ்ரேலிய தேசியவாதிகள் கொடி அணிவகுப்பு ஒன்றை, திங்களன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனும் அச்சத்தின் காரணமாக கைவிடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜெருசலேமில் நடக்கும் ஜெருசலேம் தின கொடி அணிவகுப்பின் போது இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் வழியாக ஜியனிச (zionism) கொள்கையுடைய யூதர்கள் செல்வார்கள்.

1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதை கொண்டாடும் நிகழ்வாக இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இந்தக் கொடி அணிவகுப்பு, தங்களை வேண்டுமென்றே தூண்டிவிடும் செயல் என்று பாலத்தீன தரப்பு கருதுகிறது.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் உள்ள தங்கள் வாழ்விடங்களில் இருந்து, யூத குடியேறிகளால் பாலத்தீன குடும்பங்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ள சூழல் உருவானது பாலத்தீனர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதனால் அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.

யூத குடியேறிகளுக்கு ஆதரவாக தங்களது சொந்த இடத்திலிருந்து பாலத்தீன குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதை, எதிர்த்து 70க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் தொடர்ந்த வழக்கு பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »