Press "Enter" to skip to content

சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என வர்ணனை

பட மூலாதாரம், @NIH_PAKISTAN

சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் அரசு ‘இன்குலாப்’ என்று விவரித்துள்ளது. பாக் வேக் என்ற இந்த தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது ஒரு முக்கியமான நாள் என்று வர்ணித்த பாகிஸ்தானின் மத்திய திட்ட அமைச்சர் அசத் உமர், பாகிஸ்தானின் இந்த தடுப்பூசி ‘இன்குலாப்’ அதாவது ஒரு புரட்சிக்கு குறைவானது அல்ல என்று கூறினார்.

தடுப்பூசி உற்பத்தி செய்ய உதவிய பாகிஸ்தானின் சுகாதார குழுக்களுக்கும், சீனாவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களின் முதல் தேர்வு, சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியான ‘சினோஃபார்ம் ‘ தான், மேற்கில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அல்ல என்றும் அவர் கூறினார்.

“மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு செல்லும்போது அங்கிருப்பது அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் சினோஃபார்மைக் கேட்கிறார்கள். அது இல்லை என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் திரும்பிச் சென்று விடுகிறார்கள்,” என்று ஆசாத் உமர் குறிப்பிட்டார்.

‘எல்லா தடுப்பூசிகளின் பெயர்களும் இருந்த ஆய்வை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் பாகிஸ்தான் முழுவதிலும் மக்களின் முதல் தேர்வு சயனோஃபார்ம் தான் ‘ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“ஆனால் நாங்கள் ‘பாக்வேக்’கையும் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் அதை கூட்டாக தயார் செய்துள்ளோம். இது ஒரு புரட்சி,” என்றும் அமைச்சர் கூறினார்.

சீனா எப்படி உதவியது?

பாக்வேக்

பட மூலாதாரம், @FSLSLTN

இந்த சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் தனது தோழர்களின் உதவியுடன் கடினமான சவால்களை, வாய்ப்புகளாக மாற்ற முயற்சிக்கிறது என்று தேசிய சுகாதார திட்டம் தொடர்பான பிரதமரின் சிறப்பு உதவியாளர் மருத்துவர் ஃபைசல் சுல்தான், கூறினார்.

‘கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதில் எங்கள் நண்பரான சீனா எங்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது’ என்று மருத்துவர் ஃபைசல் சுல்தான் குறிப்பிட்டார்.

“பாகிஸ்தான் தடுப்பூசி தயாரிக்க சீனா மூலப்பொருட்களைக் கொடுத்துள்ளது. ஆனால் அதன் பிறகும் அதை உருவாக்குவது எளிதாக இருக்கவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசியின் பெருமளவிலான உற்பத்தி சில நாட்களில் தொடங்கும் என்றார் அவர்.

பாக்வேக் தடுப்பூசி, சீனாவின் அரசு மருந்து நிறுவனமான கேன்சினோவால் உருவாக்கப்பட்டது மற்றும் செறிவூட்டப்பட்ட வடிவத்தில் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் (என்ஐஎச்) இதன் இறுதி வடிவம் தயாரிக்கப்படும் என்று பாகிஸ்தானின் செய்தித்தாள் ‘Dawn’ தெரிவிக்கிறது.,

கேன்சினோ தடுப்பூசி சீனாவில் முதல் தடுப்பூசி ஆகும். இது பாகிஸ்தானில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இது 18,000 பேருக்கு வழங்கப்பட்டது என்று அது மேலும் கூறியது.

“இன்று என்ஐஎச்சில் ஒரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி கலக்கப்பட்டு, நிரப்பப்பட்டு தயாரிக்கப்படும். தற்சார்பை அடைவதற்கான பயணத்தில் இது ஒரு மைல்கல்” என்று மருத்துவர் ஃபைசல் சுல்தான் செவ்வாயன்று ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தானில் குறைந்து வரும் தொற்று

பாகிஸ்தான் கொரோனா நிலவரம்

பட மூலாதாரம், @NHSRCOFFICIAL

பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக பாஸிட்டிவிட்டி விகிதம் 4% க்கும் கீழே சென்றுள்ள இந்த நேரத்தில், உள்நாட்டு தடுப்பூசி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையன்றும் 2,000 க்கும் குறைவான புதிய தொற்றுகளே பதிவாகியுள்ளன.

புதன்கிழமை அரசு வெளியிட்ட தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் 1,843 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு நாளில், 80 பேர் தொற்று காரணமாக பலியானார்கள். இதற்கு ஒரு நாள் முன்பு, 24 மணி நேரத்தில் 1,771 புதிய நோய்த்தொற்றுகளும், 71 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

பாகிஸ்தானில் இதுவரை 10 லட்சத்திற்கும் குறைவான (922,824) மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் . பலி எண்ணிக்கை சுமார் 21 ஆயிரம் (20,930).

கொரோனா தொற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளால் பாகிஸ்தான் பெரிதாக பாதிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு மே-ஜூன் மாதத்தில் தொற்றுநோயின் முதல் அலை வந்தது, ஆனால் சில வாரங்களுக்குள் அதன் தாக்கம் குறையத் தொடங்கியது.

தொற்றுநோயின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் வந்து இந்த ஆண்டு பிப்ரவரி இறுதி வரை நீடித்தது.

சில மாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் முதல் வாரத்தில் பாகிஸ்தானில் மொத்தமாக 16,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை எட்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பரபரப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் கவலை கொண்டது. ரமலான் மாதமாக இருந்ததால், சவால் மேலும் அதிகரித்தது.

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும், ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொழுகை நடத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கிறது.

கடந்த ஆண்டு தொற்றுநோயின் முதலாவது அலையின்போது மக்கள் வீட்டில் தொழுகை செய்ய மறுத்ததை அடுத்து ரமலான் மாதத்தில் மசூதிகளை திறந்து வைத்த ஒரே நாடு பாகிஸ்தான் தான்.

இந்த ஆண்டும் இதேபோன்ற நிலைமை காணப்பட்டது. ரமலான் மாதத்தில் மசூதிகளும், இமாம்பார்கா (ஷியாக்கள் தொழுகைக்காக கூடும் இடம்) ஆகியவையும் திறந்தே இருந்தன. இருப்பினும், நமாஸின் போது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், முககவசம் அணிவதையும் உறுதி செய்யுமாறு பிரதமர் இம்ரான் கான் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

நாட்டில் 963 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அதிகமாகப்பரவினால் பயங்கர பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் இம்ரான் கான் எச்சரித்திருந்தார்.

கூலித்தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் வர்க்கத்தின் மீது மோசமான விளைவை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவிரும்பவில்லை என்று ஏப்ரல் மாத இறுதியில் இம்ரான் கான் கூறியிருந்தார். ஆனால், “இந்தியா போன்ற நிலைமை ஏற்பட்டால்” அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மார்ச் மாதத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது பற்றிப்பேசிய பாகிஸ்தான் அமைச்சர் அசத் உமர், ‘ பிரிட்டன் திரிபு’ இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் இது முந்தைய கொரோனா வைரஸை ஒப்பிடும்போது ஆபத்தானது என்றும் விளக்கம் அளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »