Press "Enter" to skip to content

அம்பர்கிரிஸ்: ஸ்பெர்ம் திமிங்கலத்தின் வாந்தி தங்கத்தை விலை அதிகம் பெறுவது ஏன்? அதன் பயன் என்ன?

  • ஜெய்தீப் வசந்த்
  • பிபிசி குஜராத்தி

பட மூலாதாரம், Getty Images

ஒரு விலங்கின் வாந்தி தங்கத்தை விட மதிப்புமிக்கதாக இருக்க முடியுமா? ஒரு கிலோவுக்கு 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் அதன் விலை இருக்குமா? இந்த கேள்விக்கான பதில்: ஆம். ஸ்பெர்ம் திமிங்கலத்தின் வாந்தியாக இருந்தால் அதன் மதிப்பு தங்கத்தை விட அதிகம் என்பது தான்.

ஐந்தரை கிலோ ஸ்பெர்ம் திமிங்கல வாந்தியை (அம்பெர்கிரிஸ்) வைத்திருந்த மூன்று பேரை அகமதாபாத் காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய்.

இந்த மூன்று நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குஜராத்தில் கடல் விலங்குகள் மற்றும் அவற்றின் உறுப்புகளின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட மோசடி, அம்பலப்படுத்தப்படலாம் என காவல்துறை மற்றும் வனத்துறை நம்பிக்கை கொண்டுள்ளன.

முன்னதாக, மும்பை மற்றும் சென்னையிலிருந்து பெரிய அளவில் அம்பெர்கிரிஸ் கைப்பற்றப்பட்டது. குஜராத்தில் வசிக்கும் சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது அதன்பின் தெரியவந்தது.

சீனாவில், பாலியல் டானிக் தயாரிக்க அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது.

ஸ்பெர்ம் திமிங்கலம், அம்பெர்கிரிஸ் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒரு ஸ்பெர்ம் திமிங்கலம் , கட்டில்ஃபிஷ் அல்லது ஆக்டோபஸ் அல்லது வேறு எந்த கடல் விலங்கையும் வேட்டையாடும்போது, ​​தன் செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவத்தை வெளியிடுகிறது. இதனால் வேட்டையாடப்படும் விலங்குகளின் கூர்மையான உறுப்புகள் அல்லது பற்கள், திமிங்கலத்தின் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பின்னர் வாந்தியெடுப்பதன் மூலம், உடலில் இருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றும். சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி ஸ்பெர்ம் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் அம்பெர்கிரிஸை வெளியேற்றுகின்றன.

இந்த காரணத்தால்தான் சிலநேரங்களில் இரையின் கூர்மையான கால்கள் அம்பெர்கிரிஸில் காணப்படுகின்றன. ஸ்பெர்ம் திமிங்கலம் தன் உடலில் இருந்து வெளியேற்றிய அம்பர்கிரிஸ், கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் இணைந்து அம்பெர்கிரிஸை உருவாக்குகின்றன. நறுமணப் பொருள்களை தயாரிக்க இந்த அம்பெர்கிரிஸ் பயனுள்ளதாக இருக்கிறது.

அம்பெர்கிரிஸ் என்பது கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்திலுள்ள எண்ணெய் நிறைந்த பொருள். இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் உள்ளது. இது கடல்நீரில் பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது. இது எரியக்கூடிய பொருள். அதன் பயன்பாட்டிற்கு ஆல்கஹால் அல்லது ஈதர் தேவை.

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பூமியில் வாழும் பற்கள் இருக்கும் விலங்குகளில் மிகவும் பெரியது. சிறிய ‘பிக்மி ஸ்பெர்ம் திமிங்கலங்கள்’ மற்றும் இன்னும் சிறிய ‘குள்ள ஸ்பெர்ம் திமிங்கலங்களும்’ உள்ளன.

ஒரு ஸ்பெர்ம் திமிங்கலத்தின் தலையில் ‘ஸ்பெர்மாசிட்டி’ எனப்படும் ஒரு உறுப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது எண்ணெயால் நிரம்பியுள்ளது. இது திமிங்கலத்தின் விந்து என்றும் நம்பப்பட்டது. எனவே இதற்கு ‘ஸ்பெர்ம் திமிங்கலம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால் , இந்த உறுப்பு உண்மையில் ஒலி சமிக்ஞைகள் மற்றும் மிதப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.

அம்பெர்கிரிஸின் மணம் முதலில் நன்றாக இருக்காது. ஆனால் நேரம் செல்லச் செல்ல, அது காற்றோடு கலக்கும்போது, ​​அது நறுமணமாக மாறும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதைத் தடுக்க அம்பெர்கிரிஸ் ஒரு நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது.

ஸ்பெர்ம் திமிங்கலம்

பட மூலாதாரம், Getty Images

அம்பெர்கிரிஸ் அரிதாகவே கிடைக்கிறது. எனவே, அதன் விலை மிக அதிகம். தங்கத்தின் விலையை விட அதன் விலை அதிகமாக இருப்பதால் இது ‘கடல் தங்கம்’ அல்லது ‘மிதக்கும் தங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வரை இருக்கலாம்.

“வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஆகவே, ஸ்பெர்ம் திமிங்கலங்களை வேட்டையாடுவது அல்லது வர்த்தகம் செய்வது குற்றமாகும். அதன் முறையான வணிகத்திற்கான உரிமத்தைப் பெறுவது கட்டாயம்,” என ஜாம்நகர் கடல் உயிரின தேசிய பூங்காவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி , டி.டி.வசவாடா குறிப்பிடுகிறார்.

“சமீபத்தில் கைப்பற்றப்பட்ட அம்பெர்கிரிஸ் சரக்கு எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கு பொதுவாக அரபு நாடுகளில் பெரும் கிராக்கி உள்ளது. அரபு மக்கள் அம்பெர்கிரிஸுக்கு அதிக விலை கொடுக்க தயாராக உள்ளனர்,”என்றார் அவர்.

ஸ்பெர்ம் திமிங்கலங்கள், அதன் எலும்புகள், எண்ணெய் மற்றும் அம்பெர்கிரிஸ் ஆகியவற்றுக்காக அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இந்த காரணத்திற்காக, 1970 களில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் அம்பெர்கிரிஸ் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது.

அம்பர்கிரிஸ்

பட மூலாதாரம், Getty Images

நாட்டிலேயே மிக நீளமான சுமார் 1,600 கிலோமீட்டர் கடற்கரை குஜராத்தில் உள்ளது. அதனால்தான் கடல் வாழ் உயிரினங்கள் அல்லது அதன் உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தீவிரமாக செயல்படுகின்றனர். குஜராத்தைத் தவிர, ஒடிஷா மற்றும் கேரள கடற்கரையிலும் அம்பெர்கிரிஸ் அவ்வப்போது காணப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு முதல் வன பாதுகாப்புச் சட்டத்தின் 2 வது அட்டவணையின் கீழ் இந்தியாவில் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை வர்த்தகம் செய்வது சட்டவிரோதமானது.

பாலுணர்வு ஊக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது

ஸ்பெர்ம் திமிங்கலம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச பயணிகளான மார்கோ போலோ போன்றோரின் பயணக் குறிப்புகளிலும் அம்பெர்கிரிஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது.

“அம்பெர்கிரிஸ் பல நூற்றாண்டுகளாக யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது,” என லக்னெளவின் ஒருங்கிணைந்த பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறை இணை பேராசிரியர் பத்ருதீன் பிபிசியிடம் தெரிவித்தார்.

“யுனானி மருந்தான ‘மஜூன் மும்சிக் முகாவ்வி’யில், சர்க்கரை பாகு மற்றும் பிற மூலிகைகளுடன் அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. பேஸ்ட் வடிவில் உள்ள இந்த மருந்து பாலியல் பலவீனத்திற்கு, பாலியல் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர, இது ‘ ஹப்பே நிஷாத் ‘ ( விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்) மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது,” என்கிறார் பத்ருதீன்.

“இது பல அங்கீகாரம் பெற்ற மருந்தகங்களால் பயன்படுத்தப்படுகிறது. சந்தையிலும் ஆன்லைனிலும் கிடைக்கிறது.”

“அம்பெர்கிரிஸ் பாலியல் கிளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதை உறுதி செய்யும் எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை.”என டி.டி.வசவாடா கூறுகிறார்.

மருத்துவர் பத்ருதீனும் அவரது சகாக்களும் நரம்பு மண்டலத்தில் அம்பெர்கிரிஸின் தாக்கம் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்துள்ளனர். இது விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அகமதாபாத்தில் அம்பெர்கிரிஸ்

ஸ்பெர்ம் திமிங்கலம்

பட மூலாதாரம், Getty Images

“சிலர் அகமதாபாத் நகருக்கு அம்பெர்கிரிசுடன் வருவதாக தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் அவர்களைப் பிடிக்க நாங்கள் திட்டமிட்டோம். அம்பெர்கிரிசைக் கொண்டுவந்தவர்கள் உண்மையில் வர்த்தகம் செய்கிறார்களா அல்லது அதன் பெயரில் ஏமாற்றுகிறார்களா என்பது உறுதியாகத்தெரியவில்லை,” என அகமதாபாதின் 7 வது மண்டல துணை காவல் துறை கமிஷனர் பிரேம்சுக் டேலு கூறினார்.

“மூன்று பேரை நாங்கள் காவலில் வைத்தோம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் அம்பெர்கிரிஸ் என தடய அறிவியல் ஆய்வக குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.” என அவர் மேலும் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் கூட்டாளிகளும் குஜராத்தில் தீவிரமாக செயல்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது, ​​வனத்துறையும் காவல்துறையும் இணைந்து இந்த வலைப்பின்னலை கண்டுபிடிக்கும்,” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட அம்பெர்கிரிஸ், 5.35 கிலோகிராம் எடை கொண்டது என்றும் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 7 கோடி கோடி ரூபாய் என்றும் பிரேம்சுக் டேலு குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள் அம்பெர்கிரிஸ் என்பதற்கான முறையான மற்றும் விரிவான அறிக்கையை , தடய அறிவியல் ஆய்வகம் அளிக்கும். மேலும் அந்த அறிக்கை ஆதாரமாக சமர்பிக்கப்படும்.

இந்த மோசடியில் 10 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஜுனகத்தைச் சேர்ந்த இருவரையும், பவ நகரைச் சேர்ந்த ஒருவரையும், ராஜஸ்தானின் உதய்பூரைச் சேர்ந்த ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

“ஸ்பெர்ம் திமிங்கலம் தனது உடலில் இருந்து வெளியேற்றிய பிறகு அம்பெர்கிரிஸ் கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்.”என செளராஷ்டிராவில் கடல் உயிரினப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.

“அம்பெர்கிரிஸ் அந்தக் காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் பயணம் செய்கிறது. பெருங்கடல் புயல்களும் அம்பெர்கிரிஸை கரைக்கு நெருக்கமாக இழுக்கின்றன.” என்றார் அவர்.

“அம்பெர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ, அதற்கு அத்தனை அதிக விலை. நாய்கள் அம்பெர்கிரிஸின் வாசனையால் ஈர்க்கப்படுவதால், குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் அம்பெர்கிரிஸை வர்த்தகம் செய்யும் நபர்கள் பிரத்யேக பயிற்சி பெற்ற நாய்களை வைத்திருக்கிறார்கள்.”

“இங்கிருந்து அம்பெர்கிரிஸ் அகமதாபாத் அல்லது மும்பையை அடைகிறது. இது இடைத்தரகர்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து சர்வதேச சந்தையை சென்றடைகிறது. சில சமயங்களில் கடலில் மீன்பிடிக்கும்போது மீனவர்களுக்கும் அம்பெர்கிரிஸ் கிடைக்கிறது.”

“அம்பெர்கிரிஸ் வாசனை திரவியங்களிலும், பாலியல் ஊக்கியாகவும், ஆற்றலை அதிகரிக்கும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுவதால், வளைகுடா நாடுகளின் பணக்காரர்களிடையே இதற்கு அதிக கிராக்கி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சிலும் இதற்கு மவுசு உள்ளது.”

“இருப்பினும், இப்போது அம்ப்ராக்ஸன் மற்றும் அம்ப்ரின் போன்ற செயற்கை மாற்றுகள் கிடைத்துள்ளதால், வாசனை திரவியத்திற்கான அம்பெர்கிரிஸின் பயன்பாடு குறைந்து வருகிறது.”

“அசல் அம்பெர்கிரிஸ் பற்றி மக்களுக்குத் தெரியாது. எனவே ஏமாற்று பேர்வழிகள், பாரஃபின் மெழுகு அல்லது கொழுப்புப் பொருட்களை அம்பெர்கிரிஸ் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக வாங்கியிருப்பதால், புகார் கூட கொடுக்க முடியாது.”

“முன்னதாக, சென்னை மற்றும் மும்பையிலிருந்து, அம்பெர்கிரிஸ் கைப்பற்றப்பட்டது. குஜராத்தைச் சேர்ந்த சிலர் இதில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. விவரிக்க முடியாத சில காரணங்களால், காவல்துறையும் வனத்துறையும் அந்த வலையமைப்பை வெளிப்படுத்துவதில் முன்னர் வெற்றிபெறவில்லை. இந்த முறை அவர்கள் வெற்றி பெறுவார்களா என்பதுதான் கேள்வி. அதற்காக வாழ்த்துக்கள்,” என அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »