Press "Enter" to skip to content

டென்மார்கில் 400 கால்பந்து திடல்களின் அளவில் 8 கோடி டன் மண் கொண்டு செயற்கை தீவு: நிறைவேறிய சட்டம்

பட மூலாதாரம், DANISH GOVERNMENT

35,000 பேர் தங்குவதற்கான வீடு மற்றும் கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்க டென்மார்க்கின் எம்.பி.க்கள் ஒரு செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

லினெட்டெஹோம் (Lynetteholm) என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் தீவு, ரிங் ரோடு, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ பாதை வழியாக பிரதான நிலத்துடன் இணைக்கப்படும்.

டென்மார்க்கின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள இந்த 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கவிருக்கிறது.

இத்தீவின் கட்டுமானத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து, சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

லினெட்டெஹோம் திட்டத்தில் ஒரு அணை அமைப்பும் உள்ளது. துறைமுகத்தை கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அவ்வணை அமைக்கப்பட இருக்கிறது.

திட்டமிட்டபடி கட்டுமானம் தொடங்கப்பட்டால், தீவின் பெரும்பாலான அஸ்திவாரங்கள் 2035ஆம் ஆண்டுக்குள் கட்டப்படும், 2070ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

லினெட்டெஹோம்

பட மூலாதாரம், DANISH GOVERNMENT

லினெட்டெஹோம் கட்டுமானத்துக்கு எதிரான வழக்கு, சுற்றுச்சூழல் குழுக்களால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சாலை வழியாக பொருட்களைக் கொண்டு செல்லும் பிரச்னையும் இதில் அடங்கும்.

அத்தீவின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய உடன் மூலப்பொருட்களை வழங்க, கோபன்ஹேகன் வழியாக ஒரு நாளைக்கு 350 பார வண்டிகள் பயணிக்க வேண்டும் என ஒரு சுற்றுச்சூழல் மதிப்பீடு தெரிவிக்கிறது.

சுமார் 400 கால்பந்து ஆடுகளங்களின் அளவிலான செயற்கைத் தீவைக் கட்டுவதற்கு முன், தீபகற்ப நிலப்பரப்பை மட்டும் உருவாக்க 80 மில்லியன் டன் மண் அப்பகுதிக்கு தேவைப்படும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடல் படிமானங்களின் இயக்கம் மற்றும் நீரின் தரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன.

இந்த திட்டத்திற்கு 85 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் பெற்று வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து கோபன்ஹேகனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், என டென்மார்கின் தொலைக்காட்சியான டிஆர் கூறியுள்ளது.

லினெட்டெஹோம்

பட மூலாதாரம், Reuters

கோபன்ஹேகனைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஈவா லார்சன், கட்டுமான பார வண்டிகள் தினமும் நகரத்தின் வழியாகச் செல்வது குறித்து “மிகவும் கவலைப்படுவதாக” கூறியதாக டிஆர் குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு எதிர்ப்பாளர் நிக்கோலஸ் வூல்ஹெட், நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னர் லினெட்டெஹோம் குறித்த முடிவு எடுக்கப்படக்கூடாது என தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“கோபன்ஹேகனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் டென்மார்க்கின் வரலாற்றில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான இந்த திட்டம், தேர்தல் காலங்களுக்கு இடையில் நாங்கள் அதிகம் தெரிந்து கொள்ள அதிக வாய்ப்பில்லாத காலத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

டென்மார்க்கின் சாலை வழி சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவரான கெரினா கிறிஸ்டென்சன், லினெட்டெஹோம் கட்டுமானத்திற்கான பொருட்கள் போக்குவரத்தின் போது பருவநிலைக்கு உகந்த போக்குவரத்து முறைகள் ஒரு விருப்பமான தேர்வாக இருந்தன. ஆனால் அதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என கூறினார்.

“எடுத்துக்காட்டாக எலக்ட்ரிக் பார வண்டிகளில் CO2 உமிழ்வு இருக்காது, சத்தத்தைக் குறைக்கும், ஆனால் அதற்கு பதிலாக செலவு அதிகரிக்கும், அதிக டிரிப் அடிக்க வேண்டி இருக்கும்” என அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »