Press "Enter" to skip to content

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் ஏற்படும் சிக்கல்கள்: சரி செய்யும் முனைப்பில் மிஷன் இன்னொவேஷன்

  • ரோஜர் ஹராபின்
  • பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர்

பட மூலாதாரம், Reuters

புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிக்கும் மின்சார கிரிட்களுக்கு ஏற்படும் தடையை சமாளிக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.

காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு, காற்றின் வேகத்தைப் பொறுத்து மாறுபடும், அதே போல சூரிய மின்கலங்களிலிருந்து வெளியாகும் மின்சாரம், மேகக் கூட்டம் உட்பட பல்வேறு காரணிகளால் மாறுபடும்.

இது தான் வேரியபிலிட்டி என அழைக்கப்படுகிறது. உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரிக்க, இப்பிரச்சனையைக் கடந்து வருவது அவசியமாகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் இப்பிர்ச்சனையைத் தீர்க்க, முன்னணி நாடுகள் அடுத்த தசாப்தத்துக்குள் 248 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவிருக்கிறார்கள்.

மிஷன் இன்னொவேஷன் என்கிற தூய்மையான தொழில்நுட்ப ஆராய்ச்சி திட்டத்திலிருந்து இந்த முயற்சி வெளிப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தினை தடுக்கவில்லை எனில், அதன் ஆபத்தான விளைவுகளால் ஏற்படவுள்ள பல டிரில்லியன் டாலர் சேதங்களில், இந்த முதலீட்டுத் தொகை ஒரு சிறிய பகுதி தான் என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள 23 உறுப்பு அரசுகள் ஆண்டுக்கு 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் இன்னமும் முதலீடு செய்ய முடியுமானால், மேலும் அதிக பொது நிதியை தூய்மையான தொழில்நுட்ப ஆராய்ச்சி திட்டத்துக்கு செலவழிப்போம் என கூறுகிறார்கள்.

வேரியபிலிட்டி சிக்கலுக்கான தீர்வுகளில் ஆற்றல் சேமிப்பும் ஒன்றாக இருக்கும். உதாரணத்துக்கு புதிய மின்சார அமைப்புகள் தேவைக்கு தகுந்தாற் போல எதிர்வினையாற்றும். அதில் மேம்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவைகள் பயன்படுத்தப்படும்.

2050ஆம் ஆண்டுக்குள் பருவநிலை இலக்குகளை அடைய தேவையான உலகளாவிய கார்பன் உமிழ்வு குறைப்புகளில் பாதியை இன்று இருக்கும் தொழில்நுட்பங்களை சார்ந்தே அடைய வேண்டியுள்ளது. ஆனால், அத்தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவைகள் விளக்கப்படும் நிலையிலும் அல்லது முன்மாதிரி கட்டத்திலும் மட்டுமே உள்ளன என எமிஷன் இன்னொவேஷன் திட்டத்துக்கு பின்னால் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

சோலார்

பட மூலாதாரம், EPA

ஹைட்ரஜன் எரிசக்தி, மேம்பட்ட மின்கலவடுக்கு (பேட்டரி) சேமிப்பு, பூஜ்ஜிய – உமிழ்வு எரிபொருள்கள் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.

சூரிய மின் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி திட்டங்கள் ஆகியவை ஏற்கனவே பரவலாக மலிவு விலையில் உள்ளன, ஆனால் நாடுகள் முழு ஆற்றல் அமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஹைட்ரஜன் எரிசக்தி, கப்பல் போக்குவரத்து, தொலைதூர போக்குவரத்து, கார்பன் டை ஆக்சைடு வாயுவை காற்றில் இருந்து அகற்றுவது போன்றவைகளும் இக்குழுவின் ஆராய்ச்சியில் அடங்கும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவை இந்த கூட்டாண்மை உறுப்பினர்களில் அடங்குவார்கள்.

ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் மூன்று “ஹைட்ரஜன் பள்ளத்தாக்குகளை” திறக்க ஒப்புக் கொண்டுள்ளனர் – சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளால் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிசக்தி அல்லது மின்சாரம் வழங்கப்படும்.

ஒரு சில உறுப்பு நாடுகள், ஹைட்ரஜனை இயற்கை எரிவாயுவிலிருந்து பிரிப்பதன் மூலமும், கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தால் கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வைக் தடுப்பதன் மூலமும் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள்.

புதைபடிவ எரிபொருளில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முறை அதிக செயல்திறனற்றது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இருப்பினும் அதை எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்கள். புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திலிருந்து ஹைட்ரஜனை பெற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்.

ஹைட்ரஜன்

பட மூலாதாரம், Getty Images

பச்சை ஹைட்ரஜன், பச்சை அம்மோனியா, பச்சை மெத்தனால், மேம்பட்ட உயிரி எரிபொருட்கள் போன்ற பூஜ்ஜிய – உமிழ்வு எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்ட பெரிய கப்பல்களை உருவாக்க இது உதவும் என இத்திட்டம் கூறுகிறது.

“ஜான் கெர்ரி, பில் கேட்ஸ் போன்றவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி தவறான புரிதலில் உள்ளனர். நம்மிடம் ஏற்கனவே உள்ளதைப் பயன்படுத்துவது முக்கியமானது, அதற்கே நமக்கு பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது” என பருவநிலை சிந்தனைக் குழுவான E3G-யைச் சேர்ந்த டாம் பர்க் பிபிசி செய்திகளிடம் கூறினார்.

“இன்னும் அதிக முதலீடு தேவைப்படுகிறது என்பதை பலரும் அங்கீகரிக்கிறார்கள். மிஷன் இன்னொவேஷன் திட்டத்தில் உள்ள அனைத்து நாடுகளும் செய்யும் முதலீட்டு அளவை பராமரிக்கவும், முடிந்தால் அதிகரிக்கவும் முற்படுகின்றன.” என்று மிஷன் இன்னொவேஷன் திட்ட செயலகத்தின் தலைவரான ஜென்னி டாட்சன் பிபிசி செய்திகளிடம் கூறினார்.

உள்கட்டமைப்பு செலவினங்களை விட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவீனங்கள் எப்போதும் சிறியவை. ஆனால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் எப்போதும் முதலீட்டிற்கான ஊக்கியாக செயல்படுகின்றன என அவர் கூறினார்.

அவர் இரண்டு உதாரணங்களைக் கொடுத்தார். ஒன்று குளிரூட்டும் கட்டிடங்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு என அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக, ஐந்து மடங்கு அதிக திறன் கொண்ட குளிரூட்டலை வழங்கும் தொழில்நுட்பங்களை உருவானது.

மற்றொன்று, பாரம்பரிய புதைபடிவ எரிபொருள் இல்லாத எஃகு உற்பத்தி செய்யும் தொழில் திட்டங்களுடன் ஸ்வீடன் நாட்டு அரசு இணைந்து செயல்படும் என 2016 ல் அறிவித்தது.

“அவர்கள் இந்த சிறிய அளவிலான முன்னெடுப்பு திட்டங்களை மேற்கொள்ளும் ஆலைகளுக்கு சுமார் 50 மில்லியன் யூரோக்கள் வரை வழங்கியுள்ளனர், தொழில்துறையிலிருந்து கூடுதல் நிதியுதவியும் வழங்கப்பட்டது” என அவர் கூறினார். “ஸ்வீடன் நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இந்த திட்டங்களுக்கு அரசியல் ஆதரவை அளித்தது. நிதி அபாயத்தை குறைத்தது.”

“இது இப்போது தொழில்துறையின் பில்லியன் கணக்கான டாலர் முதலீட்டிற்கு வழிவகுக்கிறது – மேலும் பாரம்பரியமான புதைபடிவ எரிபொருள் இல்லாத எஃகு உற்பத்தியை மேம்படுத்த மற்ற எஃகு உற்பத்தியாளர்கள் மற்றும் நிறுவனங்களை உந்துகிறது.”

மிஷன் இன்னொவேஷன் திட்டம் முதன்முதலில் பருவநிலை மாற்றம் தொடர்பான, 2015 பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணையாக தொடங்கப்பட்டது.

ஜி 7 நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விட புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு இன்னும் அதிக பணத்தை வழங்குகின்றன என்பதைக் காட்டுவதாக, டியர்ஃபண்ட், சர்வதேச நிலையான மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் வெளிநாட்டு மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சமீபத்திய பகுப்பாய்வு கூறுகிறது.

விமானம் மற்றும் தேர் தொழில்களுக்கு ஜி 7 நாடுகளிடமிருந்து 115 பில்லியன் அமெரிக்க டாலர் மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் கோவிட் -19 மானியங்களும் அடங்கும். அதில் 80 சதவீத மானியத்துக்கு, துறைகள் தங்கள் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முயற்சிக்காமலேயே வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »