Press "Enter" to skip to content

தென் ஆப்பிரிக்காவில் வறுமையின் பிடியிலிருந்து தப்ப வைரத்தை தேடி அலைந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட கற்கள் வைரக் கற்கள் இல்லை வெறும் குவார்ட்ஸ் கற்கள்தான் என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் க்வாசுலு நாடல் மாகணத்தில் கால்நடை மேய்ப்பர் ஒருவர் இந்த கற்களை கண்டெடுத்தார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதனால் அந்த கிராமத்தை நோக்கி பலர் படையெடுத்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் வைரத்தை தேடி பூமியை தோண்டினர்.பலர் அது வைரமேதான் என முடிவு செய்து அதை விற்கவும் தொடங்கிவிட்டனர்.

இந்த கிராமம் ஜோஹன்னஸ்பெர்க் நகரிலிருந்து 300கிமீ தூரத்தில் உள்ளது.

இருப்பினும் அந்த கற்களை சோதனைக்கு உட்படுத்திய பின் அது வைர கற்கள் அல்ல வெறும் குவார்ட்ஸ் கற்கள் என்பது தெரியவந்துள்ளது. இது வைரத்தை காட்டிலும் விலை குறைவான ஒரு கல்.

இந்த குவார்ட்ஸ் என்பது பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கும் ஒரு தாதுப் பொருள் ஆகும்.

“கண்டெடுக்கப்பட்ட கற்கள் வைரம் அல்ல வெறும் கற்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன” என உள்ளூர் நிர்வாகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தென் ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழ்மை வாய்ந்த பகுதியில் இந்த கற்கள் கண்டெடுக்கப்பட்டன.

தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஏற்கெனவே அதிகளவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கொண்ட தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பெருந்தொற்று வேலையின்மையை மேலும் அதிகரித்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் தென் ஆப்பிரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகின. அங்கு 18 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வறுமையால் சிக்கி தவிக்கும் மக்கள்

வறுமையிலிருந்து விடுபட ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த வைரம் கண்டெடுக்கப்பட்டதாக பரவிய செய்திக்கு காரணம் என்கிறார் பிபிசியின் தென் ஆப்ரிக்க செய்தியாளர் நோம்சா மசேகோ.

தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

மேலும் அந்த கற்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் புவியியல் ரீதியாக வைரக் கற்கள் இருக்ககூடிய இடம் அல்ல.

இருப்பினும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் வேறு ஏதேனும் தாதுக்கள் அந்த பகுதியில் உள்ளதா என புவி அறிவியல் கவுன்சில் ஆராய்ந்து வருகிறது.

இது அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கின் வாழ்வாதாரத்திற்கு உதவும்.

எனவே வைரங்களை தேடி மக்கள் யாரும் பூமியை தோண்ட வேண்டாம் எனவும் அது சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு என்றும் தென் ஆப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »