Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதர் மகள்: ‘கடும் சித்திரவதை’ – என்ன ஆனது?

பட மூலாதாரம், NAJIB ALIKHIL ON TWITTER

பாகிஸ்தானுக்கான ஆப்கனிஸ்தான் தூதரின் மகள் அடையாளம் அறியப்படாத நபர்களால் வெள்ளியன்று கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார் என்று ஆஃப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களால் அவருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று, சனிக்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

தூதர் நஜீப் அலிகில்-இன் மகள் சில்சிலா அலிகில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தமது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது இடை மறிக்கப்பட்டு கடத்தப்பட்டார் என்றும் பல மணிநேரம் கடத்தல்காரர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்சிலா அலிகில் ‘கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்’ என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது ஆப்கனிஸ்தான் வெளியுறவுத்துறை.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆப்கனிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உறவு பல வாரங்களாகவே மோசமாக இருக்கிறது.

இருபது வயதுகளில் இருக்கும் சில்சிலா அலிகில் தமது காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது தேருக்குள் நுழைந்து தாக்குதலாளிகளால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டார் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர் விடுவிக்கப்பட்ட பின்பு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ‘மனிதத்தன்மையற்ற தாக்குதல்’ என்று தெரிவித்துள்ள தூதர் நஜீப் அலிகில் தமது மகள் தற்பொழுது நன்றாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நஜீப் அலிகிலுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.

இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பிடிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரும்புகிறார் என்று அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார்.

'பாகிஸ்தானில் இருந்து 10,000 ஜிகாதிகள் வந்தனர்' - ஆப்கானிஸ்தான் அதிபர்

பட மூலாதாரம், Reuters

ஆஃப்கன் அரசு மற்றும் தாலிபன் அமைப்பினர் ஆகியோருக்கு இடையே சமீப வாரங்களாக மோதல் தீவிரமாகி வரும் சூழலில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உறவிலும் கசப்புணர்வு அதிகரித்து வருகிறது.

தங்களது நாட்டில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் தாலிபன்களுக்கு பாகிஸ்தான் புகலிடம் தருவதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தங்கள் நாட்டை நோக்கி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது குற்றம் சாட்டி வருகிறது.

ஆஃப்கனில் தற்போது மோதல் ஏன்?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.

பிரிட்டன் உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளின் படைகள் ஏற்கனவே தங்கள் படைகளை முழுமையாக விலக்கிக்கொண்டன.

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அமெரிக்கா தலைமையிலான படைகள் வந்தபின் இடைக்கால அரசு நிறுவப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது.

மேற்கத்திய படைகள் வெளியேறுவதால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தாலிபன்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சமீப வாரங்களில் தாலிபன்கள் ஆஃப்கனின் பல பகுதிகளையும் வசப்படுத்தி வருகின்றனர். இரான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

afghan troops

பட மூலாதாரம், EPA

எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளது தாலிபன். இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தாலிபன் – ஆப்கானிஸ்தான் அரசு படைகள் ஆகியன அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போர் சூழல் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானின் 85 சதவிகிதப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் அண்மையில் அறிவித்தனர். ஆயினும் அந்தக் கூற்றையும் கள நிலவரத்தையும் சரி பார்க்க இயலாது.

நாட்டில் மொத்தமுள்ள 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக சில கணிப்புகள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் முன்வந்துள்ளனர். ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் தாலிபன்கள் சுமார் 7,000 பேரை விடுவிக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இது “மிகப்பெரிய கோரிக்கை” என ஆப்கானிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நதீர் நதீரி கூறியுள்ளார். இருப்பினும் அரசு தரப்பில் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »