Press "Enter" to skip to content

ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய்

பட மூலாதாரம், Reuters

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு உண்டாகியுள்ள மூளைக் கோளாறு குறித்து அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது.

ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகான காலத்தில், ‘ஹவானா சிண்ட்ரோம்’ எனும் மர்மமான மூளைக் கோளாறு போன்ற பாதிப்பு தங்களுக்கும் வந்துள்ளது என 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாதிப்பு கியூபாவில் 2016 – 17 காலகட்டத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானாவின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

இந்த மர்மமான மூளைக் கோளாறு ஏன் உண்டாகிறது என்று தெளிவாகவில்லை. நுண்ணலைகள் நேரடியாகத் தாக்குவதால் இது உண்டாகலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், தங்களுக்கு தலைசுற்றல், நிலைப்படுத்திக் கொள்ள முடியாமை, கேட்கும் திறன் குறைவது, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர்.

கியூபா தொடர்ந்து சோனிக் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதை கியூபா மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கக் கொடி

பட மூலாதாரம், Getty Images

உடல் நலம் குன்றிய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மூளையில் அசாதாரணத்தன்மை (brain abnormalities) பிரச்சனை இருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறிக்கையையும் கியூபா மறுத்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தான் முதல்முறையாக நியூயார்கர் பத்திரிகை வியன்னாவில் இருக்கும் அதிகாரிகள் ஹவானா சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படுவது தொடர்பாக செய்தி வெளியிட்டது. அதை அமெரிக்க உள்துறையும் உறுதி செய்துள்ளது. மேலும், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

“இப்பிரச்சனையின் காரணத்தைக் கண்டுபிடிக்க ஆஸ்திரியா, அமெரிக்க அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்டு வருவதாக” ஆஸ்திரிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் மேற்கோள்காட்டியுள்ளது.

நீண்ட நெடுங்காலமாக வியன்னா ராஜீய ரீதியிலான செயல்பாடுகளின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. அங்கு அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அளவில் ராஜீய அமைப்புகள் இருக்கின்றன.

2015ஆம் ஆண்டு இரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர, வியன்னா மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உலகின் பல பகுதிகளிலும் ஹவானா சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படுபவர்கள் இருப்பினும், ஹவானா நகரத்துக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் இந்நோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வியன்னாவில் தன் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நோய்க்கான காரணங்களைக் கண்டறிவது தொடர்பாக, கடந்த ஜூன் மாதம் அமெரிக்க உள்துறைச் செயலர் ஆன்டனி பிளிங்கன் பல விஷயங்களை அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »