Press "Enter" to skip to content

சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா?

  • ராகவேந்திர ராவ்
  • பிபிசி செய்தியாளர், டெல்லி

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP via Getty Images

இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தனது 89ஆம் நிறுவன தினத்தை விமானப்படை இரு தினங்குக்கு முன்பு கொண்டாடியது. ஒவ்வொரு வருடத்தையும் போலவே இந்த முறையும், தலைநகரை ஒட்டிய ஹிண்டன் விமான தளத்தில் நடந்த விழாவில் தனது திறனையும் வலுவையும் வெளிப்படுத்தியது.

“இன்று நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சூழ்நிலையைப் பார்க்கும்போது, நான் ஒரு முக்கியமான தருணத்தில் இந்தப்பொறுப்பை ஏற்றுள்ளேன் என்று எனக்குத்தோன்றுகிறது. வெளிசக்திகள் நமது பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைய அனுமதிக்கப்படாது என்பதை நாம் நாட்டிற்குக் காட்ட வேண்டும்,”என்று இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப் படையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.செளத்ரி தெரிவித்தார்.

ஒரு முக்கியமான தருணத்தில் அவர் இந்திய விமானப்படைக்கு தலைமை ஏற்றுள்ளார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சீனாவுடனான இந்தியாவின் நீண்டகால பதற்றம் குறையவில்லை. கூடவே திபெத்திய பிராந்தியத்தில் உள்ள மூன்று விமான நிலையங்களில் சீனா தொடர்ந்து துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக விமானப்படை தலைவரே முன்பு தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானின் விமானப்படையின் போர் விமானங்கள் 2019 பிப்ரவரி 27 அன்று இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்தது பற்றிய நினைவுகள் இன்னும் மங்கவில்லை.

இதற்கிடையில் இந்திய விமானப்படை அடுத்த 10-15 ஆண்டுகளில், நிர்ணயிக்கப்பட்ட 42 போர் படைப்பிரிவுகளின் வலுவை அடைவது சாத்தியம் இல்லை என்ற விமானப்படையின் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.செளத்ரியின் அறிக்கை, அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது.

அடுத்த சில ஆண்டுகளில், இலகு ரக போர் விமானம் (LCA) -Mk 1A வின் நான்கு படைப்பிரிவுகள், மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) வின் ஆறு படைப்பிரிவுகள் மற்றும் பல்நோக்கு (மல்டி கதாபாத்திரம்) போர் விமானங்களின் (MRFA) ஆறு படைப்பிரிவுகள், இந்திய விமானப்படையில் இணையும் என்று அவர் கூறினார்.

ஆனால் பல பழைய போர் விமானங்கள், கட்டம் கட்டமாக வெளியேற்றப்படும். ஆகவே அடுத்த தசாப்தத்தில் மொத்த படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 35 ஆக இருக்கும். இதை மேலும் அதிகரிக்க எந்த வாய்ப்பும் இல்லை.

சாகசம்

பட மூலாதாரம், twitter/@IAF_MCC

எனவே 42 அங்கீகரிக்கப்பட்ட படைப்பிரிவுகளுக்கு போர் விமானங்கள் கிடைக்காதது இந்திய விமானப்படைக்கு எச்சரிக்கை மணியா? இந்திய விமானப்படையால் தனது தேவைக்கேற்ப போர் விமானங்களை ஏன் சேர்க்க முடியவில்லை?

114 போர் விமானங்களை வாங்கும் ஏற்பாடுகள்

இந்திய விமானப்படையில் சுமார் 600 போர் விமானங்கள் உள்ளன. இதில் சுகோய், மிக் -29, மிராஜ் 2000, ஜாகுவார், மிக் -21, தேஜஸ் மற்றும் ரஃபேல் ஆகியவை அடங்கும். பிரான்சுடன் செய்துகொள்ளப்பட்ட 36 ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை 26 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்திய விமானப்படை நான்கு மிக் -21 ரக விமானங்களை கட்டம், கட்டமாக நிறுத்தி விடும். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மிராஜ் 2000, ஜாகுவார் மற்றும் மிக் -29 போர் விமானங்களும் சேவையிலிருந்து நீக்கப்படும். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்த பற்றாக்குறையை சமாளிக்க, இந்திய விமானப்படை இப்போது 114 பல் செயல்பாட்டு போர் விமானங்களை வாங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது.

2019 ஏப்ரலில் விமானப்படை சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 114 போர் விமானங்களை வாங்குவதற்கான ஆரம்ப ஒப்பந்தப்புள்ளியை தொடங்கியது. இந்த கொள்முதல் சமீபத்திய ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ராணுவ கொள்முதல் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

83 தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை வாங்குவதன் மூலம், தனது போர் திறனை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று விமானப்படை நம்புகிறது.

‘நிச்சயமற்ற தன்மை’

கடந்த பல ஆண்டுகளாக, இந்திய விமானப்படைக்கு போர் விமானங்களை வாங்குவது குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் நடைபெறுகிறது. பிறகு ஏன் விமானப்படை இன்று இத்தகைய சூழ்நிலையில் உள்ளது?

126 போர் விமானங்களை வாங்குவதற்கு பதிலாக வெறும் 36 ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டதிலிருந்து பிரச்னை தொடங்கியதாக ஓய்வு பெற்ற ஏர் கமாடோர் பிரசாந்த் தீக்‌ஷித் கூறுகிறார்.

“இந்திய விமானப்படையின் பிரச்னைகள் இங்கிருந்தே தொடங்கியது. அரசின் தேர்வு இப்போது இலகு ரக போர் விமானமான தேஜஸை நோக்கி உள்ளது. 40 தேஜஸ் விமானங்களுக்கு வாங்குதல் செய்யப்பட்டுள்ளது . மேலும் 83 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்கான பேச்சு நடைபெறுகிறது. அது வருவதற்கு மேலும் பத்து வருடங்கள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

உலங்கூர்தி

பட மூலாதாரம், Twitter/@IAF_MCC

இந்திய அரசு 2007ஆம் ஆண்டு, 126 நடுத்தர பல்நோக்கு போர் விமானங்கள் (MMRCA) வாங்கும் செயல்முறையைத் தொடங்கியது. இந்த விமானங்களின் விலை சுமார் 20 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது. இந்த செயல்பாட்டில், பல்வேறு விமானங்களுக்கிடையேயான போட்டியில் ரஃபேல் வெற்றி பெற்றது, ஆனால் 2015 ஆம் ஆண்டில், இந்திய அரசு பிரெஞ்சு அரசுடன் நேரடி ஒப்பந்தம் மூலம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. இதற்குப் பிறகு 126 போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டம் கைவிடப்பட்டது.

“அரசு இப்போது பழைய மிராஜ் 2000 ரகவிமானத்தை வாங்குகிறது. இந்த பழைய விமானத்தின் பாகங்கள், மற்ற மிராஜ் விமானங்களில் பயன்படுத்தப்படலாம் என்பதே இதன் நோக்கம். ஒருபுறம் நீங்கள் நவீன விமானங்களை கொண்டு வருகிறீர்கள். மறுபுறம் சமாளிப்பு வேலைகள் செய்யப்படுகின்றன, “என்று கமாடோர் தீக்க்ஷித் கூறுகிறார்.

போர் விமானங்களின் பற்றாக்குறை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், விமானப்படையில் நிச்சயமற்ற சூழல் இருப்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்தார்.

அதிக செலவு மற்றும் நீண்ட செயல்முறை

கடந்த இரண்டு தசாப்தங்களில் போர் விமானங்களின் தொழில்நுட்பத்தரம் அதிகரித்ததன் காரணமாக, அவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த விலையுயர்ந்த போர் விமானங்களை வாங்குவது சவாலாக மாறி வருவதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியா பிரான்சிடமிருந்து வாங்கிய 36 ரஃபேல் விமானங்கள் 59,000 கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இந்த கொள்முதல் தொடர்பாக இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

ஒரு போர் விமானத்தை வாங்குவது மிக நீண்ட செயல்முறை என்றும் ஒரு காரைப் போல விமானத்தை கடையிலிருந்து வாங்க முடியாது என்றும் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பிகே பார்போரா குறிப்பிட்டார்.

“இந்தியாவிற்கு முதல் ரஃபேல் விமானங்களை வழங்க பிரான்சுக்கு சுமார் நான்கு ஆண்டுகள் ஆனது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து, முதல் விமானம் வருவதற்கு ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகிவிடும்” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு விமானப்படையும் தன் தேவைகளுக்கு ஏற்ப போர் விமானங்களை விரும்புகிறது. எனவே இந்த விமானங்களில், அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் உபகரணங்களை நிறுவ கூடுதல் நேரம் எடுக்கும் என்று ஏர் மார்ஷல் பார்போரா சுட்டிக்காட்டினார்.

“இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் விமான உற்பத்தியாளர்கள் உற்பத்தியை விரைவுபடுத்த வழி இல்லை. 114 ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டிருந்தாலும், கடைசி விமானம் வந்துசேர 15 வருடங்கள் ஆகிவிடும். இப்பொதும் பணம்தான் பிரச்சனை,” என்று அவர் கூறினார்.

விமானம்

பட மூலாதாரம், Hindustan Times/getty images

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் ஒரு நல்ல விமானம் என்று கருதும் அவர், பயண வரம்பு, தாக்குப்பிடிக்கும் திறன் மற்றும் ஆயுதம் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சுகோய் அல்லது ரஃபேல் விமானங்களை ஒப்பிடும்போது தேஜஸ் குறைவான திறன் கொண்டது என்று கூறுகிறார். தேஜஸ் தயாரிப்பாளர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) இன் உற்பத்தித்திறனை கருத்தில் கொண்டு பார்த்தால், 83 தேஜஸ் ஜெட் விமானங்கள் வர நீண்ட காலம் ஆகும் என்று அவர் நினைக்கிறார்.

சீனாவில் இருந்து அச்சுறுத்தல்

ஒருபுறம் இந்திய விமானப்படை தனது போர் திறனை அதிகரிக்க போராடி கொண்டிருக்கிறது. மறுபுறம் சீனா இந்தியாவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு போர் விமானங்களை கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளதா என்ற கவலை மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு வழக்கமான போர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கமாடோர் தீக்‌ஷித் நம்புகிறார். “இது நடந்தாலும், இந்திய விமானப்படை மற்ற நாடுகளிலிருந்து உதவி பெறலாம்,” என்று அவர் குறிப்பிட்டார். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் , இந்தியா ஒரு பகுதியாக இருக்கும் குவாட் போன்ற குழு, இந்திய விமானப்படைக்கு உதவ முடியும் என்று தீக்‌ஷித் நம்புகிறார்.

அதே நேரம் இந்திய விமானப்படையில் இன்றும் உயர் தொழில்நுட்ப விமானங்கள் உள்ளன என்று ஏர் மார்ஷல் பார்போரா கூறுகிறார்.

“மிராஜ் 2000 மற்றும் மிக் 29 மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடவே ஜாகுவாரின் திறன் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிடம் 250 க்கும் மேற்பட்ட சுகோய் விமானங்களின் படைப்பிரிவு உள்ளது. கூடவே ரஃபேல் விமானங்களும் உள்ளன. நம்மிடம் திறன் வாய்ந்த இத்தகைய விமானங்கள் உள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு, சீனா அல்லது பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான மோதல் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று ஏர் மார்ஷல் பார்போரா கூறுகிறார்.

“இந்தியாவும் இந்த இரு நாடுகளும் அணுசக்தி திறன் கொண்ட நாடுகள். இங்கு உள்ளூர் மோதல்கள் இருக்கலாம். அதில் விமானபடை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு முழு அளவிலான போர் நடப்பது சந்தேகம் என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »