Press "Enter" to skip to content

பழங்கால வரலாற்று அகழ்வாராய்ச்சி: இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை

பட மூலாதாரம், Reuters

மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வளாகம் ஒன்றைத் தாங்கள் இஸ்ரேலில் கண்டறிந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வளாகம் ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரில் இருந்து தெற்கே அமைந்துள்ள யாஃப் எனும் நகரில் பைசன்டைன் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இயங்கிவந்த இந்த வளாகத்தில், சாறு பிழிவதற்கான ஐந்து கட்டுமானங்கள் மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் லிட்டர் ஒயின் தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காசா ஜாடிகள் சில உடையாமல் நல்ல நிலையில் உள்ளன.

பட மூலாதாரம், Reuters

மிக நுட்பமான தயாரிப்பு பணிகள் முடிந்த பின்பு, இந்த வைன் மத்திய தரைக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

துறைமுகங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு இவை ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா மைனர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒயின் தயாரிப்பு வளாகம் இருக்கும் அளவு தங்களுக்கு மிகவும் வியப்பளிப்பதாக இங்கு பணியாற்றி வரும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட பின்பு இதை சுற்றுலா வாசிகளுக்கு திறந்து விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதுபான உற்பத்தி வளாகத்தின் பரப்பளவு சுமார் ஒரு சதுர கிலோமீட்டர்.

பட மூலாதாரம், Reuters

இந்த வளாகத்தில் சாறு பிழிவதற்கான ஐந்து கட்டுமானங்கள் ஒரு சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் இருந்துள்ளன. வைன் மற்றும் பாட்டில்களை சேகரிப்பதற்கான சேமிப்பு கிடங்கு, ஒயின் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண் ஜாடிகளை உற்பத்தி செய்வதற்கான சூளை ஆகியவையும் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு தயாரிக்கப்பட்ட ஒயின் மதிப்பு மிக்க பழைய ஒயின் ஆவதற்காக காசா ஜாடிகள் என்று அழைக்கப்பட்ட மண் ஜாடிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன

சங்கு வடிவிலான அலங்காரம் மிகுந்த ஒதுங்கிடங்கள்

பட மூலாதாரம், Reuters

இந்த வளாகத்தில் தயாரிக்கப்பட்டவை காசா ஒயின் மற்றும் ஆஷ்கெலான் ஒயின் என்று அழைக்கப்பட்டுள்ளன.

இந்த ஒயின் மத்தியதரைக் கடல் பிராந்தியம் முழுவதும் இதன் தரத்துக்காக அறியப்பட்டிருந்தது. அதேநேரத்தில் பெரும்பாலானவர்களுக்கு பிரதான பானமாகவும் இது இருந்துள்ளது.

அகழ்வாராய்ச்சி நடந்த இடத்திலிருந்து கிடைத்த மண்பாண்டத் துண்டுகள்

பட மூலாதாரம், Reuters

ஊட்டச்சத்துக்காக இந்த ஒயின் ஒரு முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது. இங்கு கிடைத்த நீர் பெரும்பாலும் மாசடைந்து இருந்ததால், ஒயின் குடிப்பது உடல் நலத்துக்குப் பாதுகாப்பானதாக இருந்தது என்று இந்த அகழ்வாராய்ச்சியின் இயக்குநர்களில் ஒருவரான ஜோன் செலிக்மன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »