Press "Enter" to skip to content

அமெரிக்காவை நோக்கி அலை அலையாக சரக்கு கப்பல்கள் செல்வது ஏன்? என்ன பிரச்சனை?

  • ஜேக் காட்மென் மற்றும் மிகா பார்வைசன்
  • பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு

பட மூலாதாரம், Reuters

அமெரிக்கத் துறைமுகங்களை நோக்கி வரலாறு காணாத அளவுக்கு அலை அலையாக சரக்குக் கப்பல்கள் செல்கின்றன. என்ன பிரச்சனை அங்கே?

உலக அளவில் விநியோக சங்கிலிகள் நெரிசலடைந்துள்ளன. கலிஃபோர்னியாவில், பெரும் துறைமுகங்களுக்கு வெளியே கன்டெய்னர் கப்பல்களின் வரிசை கட்டி நிற்கின்றன.

“கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மற்றும் பல பத்தாண்டு காலமாக மாறாத விநியோக சங்கிலி சவால்கள் காரணமாக லாங் பீச் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகங்களில் இதுவரை இல்லாத வகையில் சரக்கு கப்பல்கள் காத்திருக்கின்றன” என்கிறார் கலிஃபோர்னியாவின் லாங் பீச் நகர மேயர்.

நெரிசலுக்கு காரணம் என்ன? கப்பல் போக்குவரத்து எவ்வளவு மோசமாக உள்ளது?

லாங் பீச் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர துறைமுகங்களில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சரக்குகளை இறக்கி வைக்க காத்திருக்கும் கப்பல்களைக் காட்டுகின்றன.

இந்த சரக்கு கப்பல்கள் பொம்மைகள் முதல் டென்னிஸ் ராக்கெட்டுகள் வரை அனைத்தையும் – ஆசியாவிலிருந்து பசிபிக் பெருங்கடல் வழியாக அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை கொண்டு வருகின்றன.

கடந்த அக்டோபர் 13ஆம் தேதி நிலவரப்படி மரைன் டிராஃபிக் என்கிற கப்பல் கண்காணிப்பு வலைத்தளம், லாங் பீச் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு வெளியே 50 க்கும் மேற்பட்ட கொள்கலன் கப்பல்கள் இருப்பதாக எண்ணியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாக் பீச் துறைமுகத்துக்கு வெளியே காத்திருக்கும் கப்பல்கள்

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பர் மாதத்தில் இந்நிலுவை ஒரு புதிய உச்சத்தை எட்டியது.

சீனாவிலிருந்து வரும் சரக்குகளை இந்த இரண்டு துறைமுகங்கள் தான் அதிகம் கையாளுகின்றன, எனவே நெரிசல் தொடங்கிய உடன் அது மிக விரைவாக மோசமடையலாம் என்று லாய்ட்ஸ் பட்டியல் ஆசிரியர் குழுவின் தலைவர் ஜேனட் போர்ட்டர் கூறுகிறார்.

“மொத்த கப்பல் போக்குவரத்து சுழற்சியும் குறைந்துவிட்டது. ஆகையால், கப்பல்கள் தங்கள் சரக்குகளை இறக்குவதற்கு இரண்டு வாரங்கள் கூட காத்திருக்க வேண்டியுள்ளன.”

கண்டெய்னர் வர்த்தக புள்ளிவிவரங்களின்படி, கொரோனாவுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டை விட, 2021ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுமார் 25 சதவீதம் அதிக அளவிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்கரைப் பகுதியில், ஜார்ஜியாவின் சவானா துறைமுகத்திலும் கப்பல்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 2021, இரண்டாவது பரபரப்பான மாதமாகியுள்ளது.

அமெரிக்கர்கள் அதிக பொருட்களை வாங்குகிறார்களா?

ஆம், பெரும்பாலும் சுற்றுலா மற்றும் விருந்துக்காக வெளியே செல்வதற்குப் பதிலாக அதிகம் பொருள்களை வாங்குகிறார்கள்.

பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, நுகர்வோர் பொருட்களின் தேவை ஒட்டுமொத்தமாக 22 சதவீதம் அதிகரித்துள்ளது (பிப்ரவரி 2020 நிலையை, ஆகஸ்ட் 2021 உடன் ஒப்பிடுகையில்).

குறிப்பாக பொம்மைகள், விளையாட்டுகள் (கேம்ஸ்), விளையாட்டுப் பொருட்களின் இறக்குமதி 74 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்களின் தேவை 49 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் கேப்பிட்டல் எகனாமிக்ஸ் குழு குறிப்பிடுகிறது.

இறக்குமதி அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் வழிவகுத்தன என்கிறார் கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டோபர் டாங்.

“தற்போது, ​​பல கப்பல்கள் பில்லியன் டாலர் மதிப்பிலான ஹாலோவீன் அலங்காரங்கள், செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் விளக்குகள் போன்றவைகளை சுமந்து வருகின்றன.”

துறைமுகங்களில் அதிகரித்துள்ள நெரிசல்கள் விவரம்

அமெரிக்கா தன் பொருளாதாரத்தை மீட்க அழுத்தம் கொடுப்பது, தேவை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார் பேராசிரியர் டாங்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நேரில் வேலை செய்ய ஊக்குவிப்பதால், கணினிகள், பிரின்டர்கள், சர்வர்கள் போன்ற அலுவலக சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, அவற்றில் பல பொருட்கள் தற்போது ஆசியாவிலிருந்து அமெரிக்கா வரும் பல்வேறு கொள்கலன்களில் பயணிக்கின்றன.

“காற்றோட்டம் தொடர்பான கருவிகளுடன் பல காற்று வடிகட்டி இயந்திரங்களும் இந்த கொள்கலன்களில் இறக்கப்பட காத்திருக்கின்றன” என்று பேராசிரியர் டாங் கூறுகிறார்.

பணியாளர்கள் பிரச்சனை உள்ளது என சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் இன்ஸ்டிட்டியூட்டின் மூத்த உறுப்பினரான கேரி ஹஃப்வர் கூறுகிறார். திறன் படைத்த துறைமுக தொழிலாளர்கள், பார வண்டி டிரைவர்கள் மற்றும் தொடர் வண்டிகுழுவினர் பற்றாக்குறை நிலவுகிறது.

இவற்றில் ஏதேனும் தவிர்க்கப்பட்டிருக்க முடியுமா?

கப்பல் போக்குவரத்து விளக்க வரைபடம்

“எவரும் இந்த அளவுக்கு மிகப்பெரிய தேவை அதிகரிக்கும் என முன்கூட்டி கணித்ததாகத் தெரியவில்லை” என்கிறார் போர்ட்டர்.

கலிஃபோர்னிய கடற்கரையில் சரக்கு கப்பல்கள் காத்திருப்பது அமெரிக்க விநியோகச் சங்கிலிகளின் நிலை குறித்த பரந்த விவாதங்களுக்கு வழிவகுத்தது. பொதுவாக உள்கட்டமைப்பை மேம்படுத்த நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

பைடன் நிர்வாகம் முந்தைய ஆட்சியின் விநியோகச் சங்கிலி பிரச்சனைகளை கையாள்கிறது என வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைமை அதிகாரி கூறினார்.

தொற்றுநோய்க்கு முன்பே, அமெரிக்க துறைமுகங்களில் இருந்த சரக்கு கையாளும் திறன் சார் சிக்கல்களை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இது பல ஆண்டுகளில் போதிய அளவுக்கு முதலீடு செய்யாததை பிரதிபலிக்கிறது. துறைமுகத் திறன் மிக விரைவாக மோசமடையாது, ஆனால் உபரித் திறனில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான அளவே இருந்திருக்கலாம்” என்கிறார் கேரி.

தடைகளை எளிதாக்க வெள்ளை மாளிகை பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் நெரிசலை சரி செய்ய லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகம் நீண்ட நேரம் திறந்திருக்கும்.

ஆனால் தொழில்துறை வல்லுநர்கள் இந்த காத்திருப்பு இப்போதைக்கு கூடிய விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »