Press "Enter" to skip to content

ரஷ்யாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு 1,000ஐ கடந்தது

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவில் கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நாளில் இருந்து முதல் முறையாக ஒரே நாளில் 1,000 கொரோனா இறப்புகள் சனிக்கிழமை பதிவாகியுள்ளன.

இந்த வாரம் முழுவதுமே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்திருக்கிறது. ரஷ்ய மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததே இதற்கு காரணம் என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அந்த நாட்டின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட நிலையில் மற்றவர்கள் அதன் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.

ரஷ்யாவில் இதுவரை 2,22,000 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவிலேயே இந்த அளவு உயிரிழப்பு ரஷ்யாவில் மட்டுமே ஏறப்ட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை மட்டும் ரஷ்யாவில் 33,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிப்பு கடுமையாக இருக்கும்போதும், நாட்டின் பொருளாதாரத்தை இயங்க அனுமதித்த அரசு, அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் திட்டத்தை தவிர்த்து வந்தது. அதற்கு பதிலாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ரஷ்ய அரசு ஈடுபட்டு வருகிறது.

Vaccination centre in Moscow

பட மூலாதாரம், Reuters

இது தொடர்பாக இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்கலிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப், “நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், தடுப்பூசி போட வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து விளக்க வேண்டும். தடுப்பூசி போடாதது உண்மையில் பொறுப்பற்றது. அது உயிர் பலியை அதிகமாக்குகிறது,” என்று கூறினார்.

மேலும், சமாளிக்க முடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை செல்லவில்லை என்றும் இப்போதைய நிலையை எதிர்கொள்ள முடியும் என்றும் அரசு தெரிவித்தது.

இதற்கிடையே, சுகாதார அமைச்சர் மிக்கேல் முரஷ்கோ, கொரோனா பரவும் அச்சம் காரணமாக பணிகளுக்கு வருவதை தவிர்த்துள்ள மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொண்டு பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Bar chart of Sputnik vaccine deliveries for several countries

ரஷ்யாவில் இப்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 7,50 ஆயிரம் ஆக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பாதிப்பு பதிவாகியிருக்கிறது.

தடுப்பூசி போட்டது எத்தனை பேர்?

Covid health worker in Moscow

பட மூலாதாரம், Reuters

ரஷ்யாவில் ஆச்சரியமளிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது. ஆனாலும் இந்த கூட்டு எண்ணிக்கை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு பங்குக்கும் சற்று குறைவுதான்.

இதன் மூலம் ரஷ்யாவில் தடுப்பூசியே போட்டுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் பெரும்பான்மை மக்கள் இருப்பது தெளிவாகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் நாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசியை தவிர்க்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

இத்தனைக்கும் ரஷ்யா கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணியில் மெத்தனமாக இருக்கவில்லை. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்திலேயே ஸ்பூட்னிக் v என்ற பெயரில் தடுப்பூசியை மேம்படுத்தி அதை மக்களுக்கு போடவும் செய்தது ரஷ்யா.

இந்த ஸ்பூட்னிக் v தடுப்பூசியை உலகின் பிற நாடுகளுக்கும் விற்பனை செய்வதிலும் அந்த நாடு வெற்றி கண்டது. இந்த விற்பனையைத் தொடர்ந்து சில நாடுகளுக்கு ஸ்பூட்னிக் V சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

தற்போதைய நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் V தடுப்பூசியை உலகின் சுமார் 70 நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், முறைப்படி இந்த தடுப்பூசி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்க வேண்டும். அந்த அனுமதி இன்னும் ஸ்பூட்னிக் V தடுப்பூசிக்கு கிடைக்கவில்லை.

உள்நாட்டில் தடுப்பூசி கிடைக்காததால், பல ரஷ்யர்கள் தடுப்பூசி சுற்றுலா என்ற பெயரில் அண்டை நாடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. உதாரணமாக, செர்பியாவுக்கு சென்று வர ரஷ்யர்களுக்கு விசா தேவையில்லை. அந்த நாட்டில் அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசி போடப்படுகிறது. அதை போட்டுக் கொண்டால் உலகின் எந்த நாட்டுக்கும் சென்று வர பயண கட்டுப்பாடு இருக்காது என்பதால் இந்த வகை பயணத்தில் ரஷ்யர்கள் சிலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செர்பியா – ரஷ்யர்கள் விசா இல்லாமல் நுழைய முடியும் – பார்வையாளர்கள் ஃபைசர் போன்ற தடுப்பூசியை எடுத்து, உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கான வாய்ப்பைத் திறக்கும் ஒரு நாடு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »