Press "Enter" to skip to content

ஒமிக்ரான்: கொரோனாவிலிருந்து மீண்டவர்களை புதிய திரிபு மீண்டும் தாக்குமா? முதற்கட்ட தரவுகள் சொல்வதென்ன?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

ஒமிக்ரான் திரிபு சில நோயெதிர்ப்புகளைக் கடந்து மனிதர்களை பாதிக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முதற்கட்ட தரவுகள் கூறுகின்றன.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் எண்ணிக்கை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது விரைவாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் இறுதியானதல்ல என்றாலும், ஒமிக்ரான் திரிபு தொடர்பான கவலைக்கு இவ்வாய்வின் முடிவுகள் வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகளால் கிடைத்த பாதுகாப்பு அம்சங்களை இத்திரிபு பாதிக்குமா என்பது குறித்தும் இன்னும் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

ஒமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வார காலத்துக்குப் பிறகும், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து புரிந்து கொள்ள உலகம் பதற்றத்தோடு முயன்று கொண்டிருக்கிறது.

இப்போது தான் இத்திரிபு தொடர்பான புதிரின் முதல் பகுதி சரியான இடங்களில் பொருந்திப் போகத் தொடங்கியுள்ளது.

ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் முன்பே எச்சரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நம் முன்னிருக்கும் புதிரின் புதிய கேள்வி என்னவெனில், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒமிக்ரான் திரிபால் தொற்று ஏற்படுமா என்பது தான்.

இந்த பெருந்தொற்று காலம் முழுக்க, தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 36,000 மாதிரிகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர்.

பீட்டா திரிபின் போதோ, டெல்டா திரிபின் போதோ மறுதொற்று (ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது) ஏற்படவில்லை என்றது சோதனை முடிவுகள். ஆனால் தற்போது அப்பரிசோதனையில் மறுதொற்று ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டு வருகின்றனர். அவர்கள் மறுதொற்று ஏற்பட்ட அனைவரையும் ஆய்வு செய்து ஒமிக்ரான் திரிபு தான் என நிரூபிக்கவில்லை என்றாலும், ஒமிக்ரான் திரிபு தான் மறுதொற்றை அதிகரிப்பதாக தொற்று காலம் சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள்.

ஒமிக்ரான் திரிபு

இந்த ஆய்வுகளை சக விஞ்ஞானிகள் இதுவரை முறையாக பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒமிக்ரான் திரிபு இதுவரையான திரிபுகளை விட இரண்டு மடங்கு அதிகம் மறுதொற்றுக்கு காரணமாகலாம் என விஞ்ஞானிகளின் மதிப்பீடுகள் கூறுகின்றன.

‘ஒமிக்ரான் திரிபு, குறைந்தபட்சமாக, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பரவும் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு பரவுகிறது என இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன” என ஸ்டெல்லன்போஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜூலியட் புல்லியம் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினர். இருப்பினும் இது புதிரின் ஒரேயொரு பகுதி மட்டுமே.

தடுப்பூசிகளால் கிடைத்த பாதுகாப்பு எவ்வளவு குறைந்தால் ஒருவர் உடலில் கொரோனா திரிபுகள் பரவும், எதுவரை பாதுகாப்பாக இருக்க முடியும் என பல கேள்விகள் எழுகின்றன.

இது ஒரு அதிவேக பகுப்பாய்வு, காலப்போக்கில் இன்னும் நமக்கு நிறைய தரவுகள் கிடைக்கும். உடலில் இருக்கும் எதிர்ப்பான்கள், இந்த வைரஸை எத்தனை சிறப்பாக தாக்கும் என்பது குறித்த ஆய்வக ஆராய்ச்சி முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக உள்ளன.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

“ஒமிக்ரான் திரிபால் மனித உடலின் இயற்கையான மற்றும் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தை கணிசமான அளவுக்கு கடக்க முடியும் என்பதை இந்த ஆய்வு கூறுகிறது.

“ஆனால் எந்த அளவுக்கு ஒமிக்ரானால் நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கடக்க முடியும் என தெளிவாகத் தெரியவில்லை. முழுமையாக நோயெதிர்ப்பு மண்டலத்தை கடக்க முடியுமா என்பது சந்தேகமே” என்று கூறியுள்ளார் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ஹன்டர்.

ஒருவேளை கொரோனா தடுப்பூசிகளால் முழுமையாக தொற்று ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் கூட, கொரோனாவால் மோசமான உடல் நலக்குறைவு ஏற்படுவதிலிருந்தும், கொரோனா உயிரிழப்புகளையும் தடுப்பூசிகள் தடுக்கும் என பெரும்பாலான விஞ்ஞானிகளின் உள்ளுணர்வாக இருக்கிறது.

அப்படி இருந்தால் கூட, ஒமிக்ரான் திரிபால் அதிக அளவில் தொற்று எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென்றால், அது மருத்துவமனைகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கூட இரு வாரங்கள் தேவை.

“ஓமிக்ரான் திரிபு அதிக மறுதொற்று ஏற்படுவதற்கான வல்லமை பொருந்தியது என்கிற மதிப்பீட்டில் அதிகம் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அத்திரிபின் ஸ்பைக் புரோட்டீன் இழையில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளால் அது எதிர்பார்த்த ஒன்றே. இதனால் அத்திரிபு, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை கடப்பதற்கான வலிமை அதிகமாகிறது” என லண்டன் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபரான்கோயிஸ் பல்லாக்ஸ் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »