Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு அமெரிக்கா, நட்பு நாடுகள் எச்சரிக்கை – ‘கொலைகளை நிறுத்துங்கள்’

பட மூலாதாரம், Getty Images

ஆப்கன் பாதுகாப்புப் படை முன்னாள் வீரர்களை குறிவைத்துக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என, தாலிபன்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக, 22 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஆப்கன் முன்னாள் அரசு மற்றும் பாதுகாப்புப் படை பணியாளர்களை துன்புறுத்த மாட்டோம் என, தாலிபன்கள் அளித்த உறுதிமொழியை மதித்து நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “ஆப்கன் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த வீரர்கள் கொலை செய்யப்படுவது, திடீரென காணாமல் போவது குறித்த செய்திகள் எங்களை கவலையடையச் செய்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பான அறிக்கை குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றியதில் இருந்து, ஆப்கானிஸ்தான் அரசு முன்னாள் அதிகாரிகளுக்கு எதிரான 100-க்கும் மேற்பட்ட மரணதண்டனைகள் மற்றும் கடத்தல்களை ஆவணப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 31-க்கு இடையில் தாலிபன்களிடம் சரணடைந்த அல்லது அவர்களிடம் பிடிபட்ட ஆப்கன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டதையும் இது ஆவணப்படுத்தியது.

முந்தைய ஆட்சியுடன் தொடர்புடையை யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டோம் என தாலிபன்கள் உறுதியளித்திருந்த போதும் இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்தக் கூட்டறிக்கையில், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் தவிர மேலும் 19 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து கூட்டறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்படுவது, சட்டவிரோதக் கொலைகள் உள்ளிட்டவை குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டறிக்கை வலியுறுத்தியுள்ளது.

“நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தாலிபன்களை தொடர்ந்து மதிப்பிடுவோம்” என்று கூறி அந்த அறிக்கை நிறைவடைகிறது.

தாலிபன்

பட மூலாதாரம், EPA

பிபிசியின் சில சொந்த செய்திகளையும் ஆதாரங்களாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை தாலிபன்கள் மீண்டும் ஒருமுறை மறுத்திருக்கின்றனர். எனினும் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைக்க்கு அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இதுபோன்று எதுவும் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

“இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன விசாரணைக்கு அனுமதியளிப்பதுடன், அதற்கு முழு ஒத்துழைப்பும் அளிப்போம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சர்வதேச சமூகம் எந்த முடிவும் எடுக்காது எனவும் தாலிபன்கள் குறிப்பிட்டுளனர்.

தாலிபன்கள் உறுதியளித்ததற்கு முரணான பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு முன்பும் பல மனிதநேய அறிக்கைகள் பலர் குறிவைத்து கொல்லப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளன.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய அரசின் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியிருந்த தஹானி குல் என்ற கிராமத்தை ஒட்டிய பகுதிக்கு 300 தாலிபன் வீரர்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது சரணடைந்த 9 வீரர்களைக் கொலை செய்ததாகவும், 17 வயதுப் பெண் உள்பட மேலும் இருவர் சண்டையின்போது இறந்ததாகவும் அந்த அறிக்கை கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »