Press "Enter" to skip to content

தென் ஆப்ரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் தீ விபத்து: சரியான நேரத்தில் ஒலிக்க தவறிய எச்சரிக்கை அலாரம்

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள காணொளியில், நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து அதிகளவிலான கரும்புகை வெளியாவது தெரிகிறது.

தென் ஆப்ரிக்காவின் அதிபர் சிரில் ராமஃபோசா சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின் அது ‘ஒரு மோசமான பேரழிவு’ என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒருவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என ராமஃபோசா தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டடத்தின் நீர் தெளிப்பான்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ராமஃபோசா தெரிவித்துள்ளார்.

நிறவெறிக்கு எதிராக போராடிய, சமீபத்தில் மறைந்த பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவுக்கு, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

fire accident

பட மூலாதாரம், Getty Images

இந்த தீ விபத்து குறித்து டுட்டுவும் பேரதிர்ச்சி அடைந்திருப்பார் என்றும் ராமஃபோசா தெரிவித்துள்ளார்.

இந்த தீ விபத்தை தொடர்ந்து வெறும் 6 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களுக்கு ராமஃபோசா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

“அவர்கள் இல்லையென்றால் நாடாளுமன்றம் சாம்பலாகி மறைந்திருக்கும்” என சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார்.

இந்த தீயை அணை பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடினர் இருப்பினும் நாடாளுமன்ற வளாகம் மோசமாக சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து

பட மூலாதாரம், CITY OF CAPE TOWN

தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்த பிறகு எச்சரிக்கை அலாரம் ஒலித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற கட்டத்தின் மூன்றாம் மாடியில் தீ பற்றியதாகவும், பின் அது நாடாளுமன்ற கீழவை கட்டடத்திற்கு வேகமாக பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், இதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டடத்தில் உள்ள தரைவிரிப்புகள் அற்றும் மர வேலைப்பாடுகளால் தீயை அணைக்க அதிக நேரம் பிடிப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்களை கீழ்வரும் படங்களில் காணலாம்.

தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், CITY OF CAPE TOWN

விடுமுறை காரணமாக, நாடாளுமன்றம் தற்போது கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து

பட மூலாதாரம், CITY OF CAPE TOWN

இந்த நாடாளுமன்ற கட்டடம் மூன்று பிரிவுகளை கொண்டது. அதில் பழமையான பகுதி 1884ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன்பிறகு 1920ஆம் ஆண்டிலும் 1980ஆம் ஆண்டிலும் புதிய பகுதிகள் கட்டப்பட்டன.

ஒரு வருடத்திற்கு இந்த நாடாளுமன்ற கட்டடத்தில் இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்படுகிறது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

கரும்புகை

பட மூலாதாரம், ROWAN SPAZZOLI/REUTERS

கடந்த வருடம் கேப் டவுனில் உள்ள பல்கலைக்கழக நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆப்ரிக்க கலாசாரம் சார்ந்த தொல்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »