Press "Enter" to skip to content

1987ற்கு பின்னர், இலங்கைக்குள் முதலாவது ராஜதந்திர வெற்றியை பெற்று கால் பதித்தது இந்தியா

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

”இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கும் இடையில் 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையிலுள்ள சரத்தொன்று முதல் தடவையாக 35 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த முதலாவது வெற்றி” என இலங்கையின் அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இரண்டாவது உலக போரின் போது, ஆங்கிலேயர்களினால் பயன்படுத்தப்பட்ட, தெற்காசியாவில் மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 100 எரிபொருள் தாங்கிகள் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்பட்ட எரிபொருள் தாங்கிகளில் ஒன்று, இரண்டாவது உலக போரின் போது, விமானமொன்று மோதுண்டு சேதமாகியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், எஞ்சிய 99 எரிபொருள் தாங்கிகள் இலங்கை வசம் காணப்பட்ட நிலையில், அதனை கைப்பற்றுவதற்கு பல நாடுகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

தெற்காசியாவிலேயே இயற்கையாக அமைய பெற்ற திருகோணமலை துறைமுகமானது, உலகத்திற்கு மிக முக்கியத்தும் வாய்ந்த துறைமுகமாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த துறைமுகத்தை கையகப்படுத்த பல நாடுகள் முன்வந்த போதிலும், அதனை கைப்பற்றுவதற்கு முடியாத நிலைமை காணப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், துறைமுகத்தை அண்மித்து சுமார் 856 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள 99 எரிப்பொருள் தாங்கிகளில் சிலவற்றை, உரிய உடன்படிக்கையின்றி இந்தியா ஏற்கனவே தன்வசம் வைத்திருந்தது.

1987ம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம், இந்த எரிபொருள் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும் என்ற போதிலும், அவை உரிய உடன்படிக்கைகளின் பிரகாரம் இதுவரை வழங்கப்படவில்லை என அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இலங்கையில் 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலப் பகுதியில், 2003ம் ஆண்டு திருகோணமலை எரிபொருள் தாங்கிகளில் 14 தாங்கிகளை இந்தியன் ஒயில் காப்ரேஷன் நிறுவனம் பயன்படுத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டது.

இதன்படி, உரிய நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையொன்று இல்லாத நிலையிலேயே, இந்த எரிபொருள் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், 1987ம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடு, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

திருகோணமலை எரிபொருள் தாங்கி உடன்படிக்கை

திருகோணமலையில் காணப்படுகின்ற 99 எரிபொருள் தாங்கிகள் தொடர்பிலான உடன்படிக்கையொன்றில், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஒயில் காப்ரேஷன் ஆகியன கொழும்பில் கடந்த 6ம் தேதி கைச்சாத்திட்டிருந்தன.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், 14 எரிபொருள் தாங்கிகள், லங்கா இந்தியன் ஒயில் காப்ரேஷன் நிறுவனத்திற்கும், 24 எரிபொருள் தாங்கிகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கும் முழுமையாக சொந்தமாகின்றன.

எரிபொருள்

பட மூலாதாரம், Getty Images

அத்துடன், எஞ்சிய 61 எரிபொருள் தாங்கிகளும், ரிங்கோ பெ ரோலியம் டர்மினல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் இந்திய கூட்டு நிறுவனங்களுக்கு சொந்தமாகின்றன.

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஆயில் காப்ரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்தே, ரிங்கோ பெட்ரோலியம் டர்மினல் என்ற பெயரில் நிறுவனமொன்றை ஸ்தாபித்துள்ளன.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் 4 உறுப்பினர்கள், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினாலும், 3 உறுப்பினர்கள் லங்கா இந்தியன் ஆயில் காப்ரேஷன் நிறுவனத்தினாலும் நியமிக்கப்படவுள்ளதுடன், அதன் தலைமைத்துவம் எப்போதும் இலங்கை வசமே காணப்படும்.

ரிங்கோ பெட்ரோலியம் டர்மினல் நிறுவனத்தின் ஊடாக 51 சதவீத பங்குகள் இலங்கைக்கும், 49 சதவீத பங்குகள் இந்தியாவிற்கும் உரித்துடையதாகின்றது.

இவ்வாறான நிலையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளில் 75 தாங்கிகள் இந்தியாவிற்கும் சொந்தமாகின்றன.

இந்த உடன்படிக்கையானது, 50 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

திருகோணமலை எரிபொருள் தாங்கி உடன்படிக்கை யாருக்கு வெற்றி?

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை இலங்கை பெற்றுக்கொண்டமையானது, இலங்கைக்கு கிடைத்த வரலாற்றி ரீதியான மாபெரும் வெற்றி என இலங்கை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

”1987 மற்றும் 2003ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம், இந்தியாவிற்கு வழங்கப்பட்ட திருகோமணலை எரிபொருள் தாங்கி வளாகத்தை, மீண்டும் எமது கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்கொண்டமையானது, வரலாற்று ரீதியான மாபெரும் வெற்றியாகவே நாம் பார்க்கின்றோம். திருகோணமலை எரிபொருள் தாங்கி வளாகத்தில் இலங்கையின் தேசிய கொடியை நான் ஏற்றப் போகின்றேன்” என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த 31ம் தேதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

உதய கம்மன்பில கூறுவதுபோல இது இலங்கைக்கு கிடைத்த வெற்றி கிடையாது என கூறும் அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, மாறாக இது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள்

பட மூலாதாரம், Getty Images

”இத்தனை காலமும் உடன்படிக்கை இல்லாது காணப்பட்ட இந்தியாவிற்கு, தற்போது உடன்படிக்கை கிடைத்துள்ளது. இதுல உதய கம்மன்பில குறிப்பிடுவதுபோல இலங்கை வெற்றி பெற்றுவிட்டது என்பது இல்ல. அதிகாரபூர்வமாக 14 தாங்கிகளையும் நீண்ட கால குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு கொடுத்தாகிவிட்டது. 61 தாங்கிகளை இணைந்து செயற்படுத்தக்கூடிய ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 24 தாங்கிகளை மட்டும் தான் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் பயன்படுத்த போகிறார்கள். 1987ம் ஆண்டு உடன்படிக்கையில் இந்தியாவிற்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துல இந்தியா வெற்றி பெற்றுள்ளது” என அவர் குறிப்பிடுகின்றார்;.

1987ற்கு பின்னர், இலங்கையில் இந்தியா பெற்ற முதலாவது வெற்றி

1987ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை செய்துக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்தியா 35 வருடங்களின் பின்னர் முதலாவது வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கின்றார்.

”1987ம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட 13வது திருத்தம் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அது ஒரு உடன்படிக்கை தான், இரண்டு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்டு, அமல்படுத்தப்படாது இருந்த ஒரேயொரு உடன்படிக்கை. அதில் ஒரு பகுதியில் இப்பொழுது இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல முடியும். 87ம் ஆண்டு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முதலாவது நகர்வு எடுக்கப்பட்டுள்ளதை இந்த உடன்படிக்கை காட்டியிருக்கு. 87ம் ஆண்டு உடன்படிக்கையை அமல்படுத்தும் முதலாவது நகர்வை இந்தியா எடுத்துள்ளது என்பதனை தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” என ஜனகன் விநாயகமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

பொருளாதார ரீதியிலான வழிகளை உருவாக்கினால் மாத்திரமே, தமிழர்களுக்கான தீர்வும் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

87ம் ஆண்டு உடன்படிக்கையிலுள்ள ஒரு சரத்து நிறைவேற்றப்படுகின்றது என்றால், இந்தியா பொருளாதார ரீதியில் முதல் நகர்வாக காலடி எடுத்து வைக்கப்படுகின்றது.

இந்தியா தனது முதலாவது முயற்சியில், மிக ஆழமான வெற்றியை கண்டுள்ளது. இதுவரை உடன்படிக்கையில்லாது வைத்திருந்த 14 எரிபொருள் தாங்கிகளையும், இலங்கையுடன் இணைந்ததாக 61 எரிபொருள் தாங்கிகள் உள்ளடங்களாக மொத்தம் 75 தாங்கிகளை தமது ஆதிக்கத்திற்குள் இந்தியா கொண்டு வந்துள்ளது.

இலங்கையில் இந்தியா, பெற்ற மற்றுமொரு வெற்றி குறித்தும், ஜனகன் விநாயகமூர்த்தி, பிபிசி தமிழிடம் விளக்கினார்.

”மற்ற நாடுகள் 856 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் கால் வைக்காது, இந்தியா தடுத்துள்ளது. இனி அமெரிக்காவோ, சீனாவோ அல்லது வேறு எந்தவொரு நாடோ அந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது உலக போர் காலப் பகுதியிலிருந்து முக்கியத்தும் வாய்ந்த திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிக்குள் எதிர்வரும் 50 வருடங்களுக்கு கால் பதிக்காது இந்தியா தடுத்துள்ளது. இந்தியா தனது ராஜதந்திர யுக்தியை முதல் முறையாக அமைதியாக செய்து, பாரிய வெற்றியை பெற்றுள்ளது” என அவர் தெரிவித்தார்.

ஜனகன்

கடன்களை வழங்குவதன் ஊடாக, இலங்கை மீது சீனா மேற்கொள்ளும் ராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை போன்று, பொருளாதார உதவிகளை வழங்குவோம் என்ற உறுதியை வழங்கி, இந்தியா இந்த வரலாற்று வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது.

தெற்காசியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை துறைமுகமான, திருகோணமலை துறைமுகம், மறைமுகமாகயேனும், இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருகோணலை துறைமுகத்தை அண்மித்து காணப்படுகின்ற இந்த தாங்கிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன், இந்தியா அந்த பகுதியில் தமது பாதுகாப்பை பலப்படுத்துவதன் ஊடாக, திருகோணமலை துறைமுகத்தையும் தம்வசப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை தன்வசப்படுத்தும் உடன்படிக்கையின் ஊடாக, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பை தன்வசப்படுத்தி, இலங்கைக்குள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா முயற்சித்துள்ளமை, மிக தெளிவாக தெரிகின்ற ஒன்றாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »