Press "Enter" to skip to content

இலங்கையை அடுத்து நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடியா? – இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு

  • ஆனபெல் லியாங் & சஞ்சயா தகல்
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

நேபாள நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், கார்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற அல்லது ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

அந்நாட்டின் கடனை ஈடுசெய்வதில் பெரும் பங்காற்றும் சுற்றுலா வருவாய் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் நேபாளிகள் தங்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவு குறைந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அப்பொறுப்பிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாள நிதி அமைச்சர், இந்த பிரச்னையை இலங்கை பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுவது தனக்கு “ஆச்சர்யமாக” உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மத்திய கால வரையிலான ஏழு மாதங்களில் நேபாளத்தின் அந்நிய செலாவணி கையிருப்பு 16 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக, அதாவது நேபாள பணத்தில் 1.17 டிரில்லியன் (9.59 பில்லியன் டாலர்கள்; 7.36 பில்லியன் பவுண்ட்) குறைந்துள்ளது என, அந்நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.

இறக்குமதியை கட்டுப்படுத்த நினைப்பது ஏன்?

அதே காலகட்டத்தில், வெளிநாட்டில் பணிபுரியும் நேபாளிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் மதிப்பும் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வங்கியின் துணை செய்தித்தொடர்பாளர் நாராயண் பிரசாத் பொக்கரேல் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு “அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக” மத்திய வங்கி நம்புவதாக தெரிவித்துள்ளார்.

“அத்தியாவசியமான பொருட்களின் விநியோகத்தை பாதிக்காமல், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இறக்குமதியாளர்கள் முழு தொகையையும் செலுத்தினால் 50 “ஆடம்பர பொருட்களை” இறக்குமதி செய்ய அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போராட்டம்

“இது இறக்குமதியை தடை செய்வது அல்ல, மாறாக இறக்குமதியாளர்களின் ஊக்கத்தைக் குறைப்பதாகும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநர் மஹா பிரசாத் அதிகாரியை கடந்த வாரம், எந்தவொரு காரணத்தையும் கூறாமல் அவரை பதவியிலிருந்து நேபாள அரசு நீக்கியது.

கொரோனா தொற்று நோயால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவை சரிசெய்ய செலவுகளை அதிகப்படுத்தியதால், நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43 சதவீதத்திற்கும் மேல் அந்நாட்டுக்கு கடன் அதிகரித்துள்ளதாக, நேபாள நிதி அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.

மேலும், அந்நாட்டின் பொருளாதார நலத்தின் குறியீடுகள் “இயல்பு” நிலையில் இருப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“எனினும், இறக்குமதிகளை சமாளிக்கவும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தவும் ஏற்கெனவே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையுடன் ஒப்பிடுவது ஆச்சர்யம்”

முன்னதாக, அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜனார்த்தன் ஷர்மா கூறுகையில், நேபாளத்தின் கடன் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளில் உள்ளதைவிட குறைவாகவே உள்ளது என தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த சூழ்நிலையை ஏன் இலங்கையுடன் ஒப்பிடுகின்றனர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என தெரிவித்தார். தீவு நாடான இலங்கை, 1948ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததற்கு பின்னான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்துள்ளது.

‘கேபிடல் எக்கனாமிக்ஸ்’ எனப்படும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த வளர்ந்துவரும் சந்தை பொருளாதார வல்லுநரான அலெக்ஸ் ஹோம்ஸ் இதுகுறித்து பிபிசியிடம் கூறுகையில், நேபாளில் நிலவும் பொருளாதார சூழல் “இலங்கையைவிட நன்றாகவே உள்ளது” என தெரிவித்தார்.

நேபாளத்தின் அந்நிய செலாவணி கையிருப்பு “குறைந்தபட்ச ஆறுதல்” மதிப்பு என கருதப்படுவதைவிட இருமடங்கு அதிகமாக இருப்பதாகவும், அரசின் கடன் “குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி

“தற்போது நிலவும் பற்றாக்குறை தணியவில்லையென்றால், பொருளாதார சூழல் நிச்சயம் மோசமடையும்,” எனவும் அவர் தெரிவித்தார். “ஆனால், இந்த நெருக்கடி உடனடியாக நிகழக்கூடியதாக இல்லை” என அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கிக்கு புதிய தலைமை நியமிக்கப்பட்டார். அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை சமாளிக்க முக்கிய வரி விகிதங்கள் அந்நாட்டில் இரு மடங்காக உயர்த்தப்பட்டன.

இலங்கையில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் நீண்ட நேர மின் தடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், போராட்டக்காரர்கள் தலைநகர் கொழும்புவில் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

இந்த நெருக்கடியிலிருந்து எதிர்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை உதவி கோருவதற்கு முன், கடந்த மாதம் அந்நாட்டின் பண மதிப்பு கடந்த மாதம் பெருமளவில் சரிவை சந்தித்ததால், அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்துவரும் பணவீக்கம் ஆகியவற்றால் இலங்கை மக்கள் பாதித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »