Press "Enter" to skip to content

டெல்லியில் நரேந்திர மோதி, போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 22இல் சந்திப்பு – என்ன விஷயம்?

பட மூலாதாரம், PA Media

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21-22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். நீண்ட தாமதமான அவரது பயணத்தின்போது, இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கும் வகையில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

டெல்லியில் ஏப்ரல் 22ஆம்தேதி பிரதமர் நரேந்திர மோதியை போரிஸ் சந்திக்கிறார், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் மீது கவனம் செலுத்தி இரு தலைவர்களும் பேசுவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஐரோப்பாவுக்கு வெளியே பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக அவரது இந்திய வருகை அமையவுள்ளது.

யுக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்ய நடவடிக்கைக்குப் பிறகு அந்நாட்டை நம்பியிருக்கும் போக்கை குறைக்குமாறு இந்தியாவை வற்புறுத்த பிரிட்டன் முயற்சித்து வருகிறது.

கடந்த மாதம், அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவுக்கு எதிராக வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் மிகவும் நெருக்கமாக ஒத்துழைப்பை வழங்க கேட்டுக் கொள்ளவும் இந்தியாவுக்கு வந்தார்.

பிப்ரவரி 24ஆம் தேதி யுக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்கும் வகையில் படையெடுப்பை தொடங்கியது. அந்த விவகாரத்தில் இந்தியா ரஷ்யாவை நேரடியாக விமர்சிக்கவில்லை. மேலும் இந்த பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையில் பல முறை நடந்த வாக்கெடுப்புகளிலும் ரஷ்ய படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை.

புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், PA Media

இந்த நிலையில், ஏப்ரல் 21-22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வரும் போரிஸ் ஜான்சன், இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமான குஜராத்துக்கு செல்லவிருக்கிறார். அங்கு அவர் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய தொழில்களில் ஒரு பெரிய முதலீடு மற்றும் அறிவியல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் புதிய ஒத்துழைப்பு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடன் சொந்த மாநிலமாகும். அங்கு அவர் மூன்று பிரதமரான பிறகே இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக ஆட்சி செலுத்தி வருகிறார். அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த வகையில் குஜராத்துக்கு தொழில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை அங்கு பயணம் செய்ய பிரதமர் நரேந்திர மோதி ஏற்பாடு செய்துள்ளதாக ஒரு கருத்து உள்ளது.

இந்திய வருகையின்போது பிரிட்டன் பிரதமர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்குச் செல்வார் என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், இரண்டு நாட்கள் மட்டுமே இந்தியாவுக்கு வரும் அவர், தமிழக பயணத்தை இம்முறை மேற்கொள்ள மாட்டார் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேந்திர பங்குதாரர்

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் ஊடகங்களிடம் பேசினார். அப்போது அவர், “எதேச்சதிகார அரசுகளிடமிருந்து நமது அமைதி மற்றும் செழிப்புக்கான அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ளும் நிலையில், ஜனநாயக நாடுகளும் நண்பர்களும் ஒன்றிணைவது இன்றியமையாதது,” என்று கூறினார்.

“இந்தியா, ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இந்த நிச்சயமற்ற காலங்களில் பிரிட்டுக்கு மிகவும் மதிப்புமிக்க கேந்திர ரீதியிலான பங்காளியாக உள்ளது.”

Boris Johnson and Narendra Modi

பட மூலாதாரம், PA Media

“எனது இந்திய பயணம் நமது இரு நாட்டு மக்களுக்கும் உண்மையில் முக்கியமான விஷயங்களை வழங்கும் – வேலை உருவாக்கம், பொருளாதார வளர்ச்சியில் இருந்து எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும்,” என்றார் போரிஸ் ஜான்சன்.

கடந்த ஆண்டு ஏப்ரலில், பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் முன்பே தமது இந்தியாவுக்கான பயணத்தை ரத்து செய்தார் ஜான்சன், அதாவது அந்த சிவப்புப் பட்டியல் நாடுகள் என்பது, கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் எவரும் 10 நாட்களுக்கு ஒரு விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புகள் மற்றும் புதிய டெல்டா திரிபு பரவல் காணப்பட்டபோதும், திட்டமிட்டபடி தமது இந்திய பயணம் தொடரும் என்று ஆரம்பத்தில் பிரிட்டன் பிரதமர் கூறியிருந்தார். அப்போது இந்தியாவை ஏன் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இன்னும் சேர்க்கவில்லை என கேள்விகள் எழுந்தபோது, தாம் இந்தியாவுக்கு நேரடியாக செல்லாவிட்டாலும் பிரதமர் மோதியுடன் இணையத்தில் பேசுவேன் என்று போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சனை பிரதமர் நரேந்திர மோதி அழைத்திருந்தார். ஆனால், இந்தியாவுக்கான போரிஸின் பயணம் பிரிட்டனில் கடுமையாக்கப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு வெவ்வேறு வெளியுநாட்டு மேடைகளில் மெய்நிகர் வடிவில் போரிஸ் ஜான்சனும் இந்திய பிரதமரும் பேசிக் கொண்டனர். ஆனாலும், இந்திய மண்ணில் இரு தலைவர்களும் நேருக்கு நேராக பேசிக் கொள்ளப்போவது இதுவே முதல் முறையாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »