Press "Enter" to skip to content

போரிஸ் ஜான்சன் – நரேந்திர மோதி சந்திப்பு: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை உலகத்துக்கு ஏன் முக்கியம்?

  • ககன் சபர்வால்
  • தெற்காசிய செய்தியாளர், பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், PA Media

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த இரு நாள் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த இரு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரிட்டன் எடுத்துள்ள நிலையில் பிரிட்டன் பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவை இந்தியா விமர்சிக்கவில்லை அல்லது ரஷ்யாவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் முதல் முறையாக இந்தியா வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக இருந்த போது ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். பிரெக்ஸிட்டிற்குப் பிறகு இந்தியாவுடனான பிரிட்டனின் முதல் உயர் மட்ட அளவிலான நிகழ்வாகவும் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இந்திய பயணத்தில் முக்கியமானவை என்னென்ன?

இந்திய வருகைக்கு முன்னதாக, போரிஸ் ஜான்சன் கூறுகையில், “எதேச்சதிகார அரசுகளிடமிருந்து அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ளும் நிலையில், ஜனநாயக நாடுகளும் நண்பர்களும் ஒன்றிணைவது அவசியம்.”

“இந்தியா, ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பிரிட்டனுக்கு மிகவும் மதிப்புமிக்க கூட்டாளியாகவும் உள்ளது.”

“எனது இந்தியப் பயணம் நமது இரு நாட்டு மக்களுக்கும் வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இருந்து எரிசக்தி மற்றும் பாதுகாப்பு வரை முக்கிய கூறுகளை தரும்.” என்றார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், பிரதமர் நரேந்திர மோதியும், இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமின்றி, பிரதமர் ஜான்சன் யுக்ரேன் விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடையிலும் இந்தியா சேர வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் தனது டெல்லி பயணத்தின் போது, ​​இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது குறித்து பேசினார்.

இந்த பயணத்தில், ​​இந்தோ-பசிபிக் பகுதியில் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆழமான உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் ட்ரஸ் எடுத்துரைத்தார். இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, பிராந்தியத்தில் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

வேறு எதிர்பார்ப்புகள் என்னென்ன?

இணையக் குற்றவாளிகள் மற்றும் ரேன்சம்வேர் (ransomware) அச்சுறுத்தல்களுக்கு எதிராக இரு தரப்பும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிப்பதால், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் கணினிமய உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய கூட்டு இணையப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

இது தவிர, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த அமைச்சர்களின் உயர்மட்ட முதல் மூலோபாய தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை அதிகரிக்கும் வகையில் 70 மில்லியன் பவுண்டுகள், சர்வதேச மூலதன நிதியுதவியை இங்கிலாந்து ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இது நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்கட்டமைப்பை உருவாக்கவும் சூரிய சக்தியை மேம்படுத்தவும் உதவும்.

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையில் ஆண்டுக்கு சுமார் 23 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வர்த்தக உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2030- ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

முந்தைய இந்திய பயணங்கள் ரத்தானது ஏன் ?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் காரணமாக பிரதமர் ஜான்சனின் இந்தியப் பயணம் கடந்த ஆண்டு 2 முறை ரத்து செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது இந்தியப் பயணம் தாமதமானது.

போரிஸ் ஜான்சன் - மோதி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2021 ஜனவரியில் இந்தியாவின் 72வது குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக அவரது முதல் பயணம் திட்டமிடப்பட்டது. ஆனால் பிரிட்டனில் ஏற்பட்ட கொரோனா கால நெருக்கடி காரணமாக ஜான்சன் தனது பயணத்தை ரத்து செய்தார். பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது வருகை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது, ​​இந்தியாவும் அதேபோன்ற கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டதால், மீண்டும் ரத்து செய்யப்பட்டது.

பிரிட்டனின் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே-யில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி -7 உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார், அப்போது ஜான்சன், இந்திய பிரதமர் மோதியை நேருக்கு நேர் சந்திப்பார் என்கிற நம்பப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் அது நடக்கவில்லை.

அதேநேரத்தில், இறுதியாக இரு தலைவர்களும் கடந்த நவம்பர் மாதம், கிளாஸ்கோவில் நடைபெற்ற 26வது காலநிலை மாற்ற மாநாட்டின் (COP26) போது நேரில் சந்தித்தனர்.

அங்கு உலகத் தலைவர்களின் உச்சி மாநாட்டின் போது அவர்களின் இருதரப்பு பேச்சுகள், இந்தியா – பிரிட்டன் காலநிலை கூட்டாண்மை மற்றும் 2030 மதிப்பாய்வை மையப்படுத்தியிருந்தன.

போரிஸ் ஜான்சன் - மோதி

பட மூலாதாரம், Getty Images

போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் பிரிட்டனுக்கு ஏன் முக்கியமானது?

பிரதமர் போரிஸ் ஜான்சன் எப்போதும் இந்தியா-பிரிட்டன் வலுவான உறவிற்கு நீண்டகால ஆதரவாளராகக் காணப்படுகிறார்.

ஆனால், பிரெக்ஸிட்டுக்குப் பிறகு உலகின் மற்ற நாடுகளுடன் தனது உறவை உருவாக்க முயற்சித்து வரும் பிரிட்டனுக்கு, ஜான்சனின் இந்த வருகை முக்கியமானது.

பிரெக்ஸிட்டிற்குப் பிறகு, உலகளாவிய அரங்கில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள, தீவிர பங்களிப்பாளராக, இந்தோ-பசிபிக் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் குறித்த எந்த விவரங்களையும் அவரது தரப்பும் இந்திய அதிகாரிகள் இருதரப்பும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆனாலும், கடந்த மாதம் போரிஸ் ஜான்சனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையே தொலைபேசி அழைப்பின் போது நேரில் சந்திப்பது குறித்து பேசப்பட்டது. இரு தலைவர்களும் இந்தியா – பிரிட்டன் இடையிலான வலுவான மற்றும் வளமான உறவு குறித்து உறுதியளித்தனர்.

ஜான்சனின் இந்தியா வருகை, உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவின் பங்களிப்பின் முக்கியத்துவம், தெற்காசிய நாடுகள், பல்வேறு வெளிநாட்டு தலைவர்களை வரவிருக்கும் மாதங்களில் வருவது, 2023 இல் G20 தலைமை வகிக்க தயாராவதையும் குறிக்கிறது.

மேலும், இந்தியர்கள் பிரிட்டனில் பொருளாதார ரீதியாக அதிகம் பங்களிக்கும் சமூகங்களில் ஒன்றாகத் தொடர்கின்றனர். பிரிட்டன் பிரதமரின் இந்த பயணத்தில், இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் குடியேற்றம் மற்றும் குடிமக்களின் வருகையை நெறிப்படுத்தல், தாராளப்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேலும் வலுவான உறவுவை ஏற்படுத்துவது ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »