Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்: கடும் விலையேற்றம், உணவுக்கு தட்டுப்பாடு – எச்சரிக்கும் உலக வங்கி

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் “மானிட பேரழிவை” சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடி தொடர்ந்தால், உணவுப்பொருட்களின் அதிகப்படியான விலை ஏற்றத்தால், மில்லியன்கணக்கிலான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என, டேவிட் மால்பஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலையில் “கடும் ஏற்றமாக” 37% அளவுக்கு விலை உயர்வு ஏற்படும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

இது ஏழைகளை பெருமளவு பாதிக்கும் என தெரிவித்துள்ள உலக வங்கி, “இந்நெருக்கடியால் அவர்கள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், மேலும் பள்ளிப்படிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு அவர்களிடம் குறைவான பணமே இருக்கும்” என தெரிவித்துள்ளது.

உலகளாவிய வறுமை ஒழிப்பு நிறுவனமான உலக வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவரான மால்பஸ், பிபிசி பொருளாதார ஆசிரியர் ஃபைசல் இஸ்லாம் உடனான நேர்காணலில் பேசுகையில், ஏழைகள் மீதான இந்த தாக்கம் “இதனை நியாயமற்ற நெருக்கடியாக மாற்றியுள்ளது” எனவும், “கோவிட் தொற்று விஷயத்திலும் இதுதான் உண்மை” எனவும் அவர் தெரிவித்தார்.

“இது மானிட பேரழிவு, அதாவது இந்த நெருக்கடியால் மக்கள் குறை ஊட்டச்சத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள். ஆனால், இதுகுறித்து எதுவும் செய்ய முடியாத, இந்நெருக்கடிக்கு தாங்கள் காரணம் இல்லாத அரசுகளுக்கு இது அரசியல் சவாலாகவும் மாறும். உணவுப்பொருட்களின் விலை உயர்வதை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்” என, வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் – உலக வங்கி கூட்டத்தில் மால்பஸ் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வு ஆழமான மற்றும் விரிவான தாக்கங்களை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், “அனைத்துவிதமான எண்ணெய் மற்றும் தானியங்களின் விலைகளையும் இந்த நெருக்கடி பாதித்துள்ளது. மேலும், சோளப்பயிர் உள்ளிட்ட மற்ற பயிர்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஏனெனில், கோதுமை விலை உயரும்போது இவற்றின் விலையும் உயரும்” என கூறினார்.

அனைவருக்கும் தேவையான உணவு இந்த உலகில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், உணவுப்பொருட்களின் உலகளாவிய கையிருப்பு அதிகளவில் இருப்பதாகவும் ஆனால், உணவு எங்கு தேவையோ அங்கு அவற்றை கொண்டு செல்வதற்கான பகிர்ந்தளிக்கும் அல்லது விற்பனை நடைமுறைகள் தேவை என தெரிவித்தார்.

உணவு நெருக்கடி

மேலும், உற்பத்திக்கு மானியம் வழங்குவது அல்லது விலைகளை கட்டுப்படுத்துவது போன்றவ வழிமுறைகளை அவர் ஊக்கப்படுத்தவில்லை.

மாறாக, உலகளவில் உரங்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விநியோகத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்கான உதவிகளும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வரும் நிலையில், வளரும் நாடுகள், கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள தங்கள் பெரியளவிலான கடன்களைச் செலுத்த இயலாமையால் எழும் “நெருக்கடிக்கு உள்ளே ஒரு நெருக்கடி” குறித்து உலக வங்கித் தலைவர் எச்சரித்தார்.

“இதற்கான வாய்ப்பு உள்ளது. இது சில நாடுகளில் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது, எதுவரை இந்த நெருக்கடி செல்லும் என்பது தெரியவில்லை. 60 சதவீதத்திற்கும் அதிகமான ஏழை நாடுகள் தற்போது ஒன்று கடன் நெருக்கடியிலோ அல்லது கடன் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அதிக ஆபத்திலோ உள்ளன” என அவர் தெரிவித்தார்.

“கடன் நெருக்கடி குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும். கடன் சுமையை குறைப்பதற்கான வழிகளை மிக விரைவில் நாடுகள் தொடங்குவதுதான் சிறந்தது. எந்தளவுக்கு கடன் குறித்து செயலாற்றாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதன் விளைவுகளும் மோசமானதாக இருக்கும்,” என தெரிவித்தார்.

ஃபைசல் இஸ்லாம், பிபிசி பொருளாதார ஆசிரியர் – பகுப்பாய்வு

வளர்ந்துவரும் நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து நாம் கவலைகொள்ள வேண்டும் என, உலக வங்கியின் தலைவர் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்றால் ஏற்பட்ட அதிகளவிலான கடன், உயர்ந்துவரும் வட்டி விகிதங்கள் மற்றும் விலை உயர்வு ஆகிய கூட்டு நெருக்கடிகள் உண்மையில் கொடுமை வாய்ந்ததாகும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களில், தொற்றுநோயை எதிர்கொள்ள கடன் வாங்குவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று பணக்கார நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கூறின.

ஆனால், தற்போது இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என வளர்ந்துவரும் நாடுகள் யோசிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »