Press "Enter" to skip to content

இம்மானுவல் மக்ரோங்: இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் – வலதுசாரி வேட்பாளரை தோற்கடித்தார்

  • பால் கிர்பி
  • பிரான்ஸிலிருந்து

பட மூலாதாரம், EPA

பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும் வெற்றி பெற்றுள்ளார் இம்மானுவல் மக்ரோங். தனக்கு எதிராகப் போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லீ பென்னை அவர் தோற்கடித்துள்ளார். தீவிர வலதுசாரி தலைவர்கள் இதுவரை தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை லீ பென் பெற்றபோதிலும் அவர் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இத்தேர்தலில் இம்மானுவல் மக்ரோங் எதிர்பார்க்கப்பட்டதற்கும் அதிகமாக 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

தன்னுடைய வெற்றிக்குப் பிறகு ஈஃபிள் டவர் அருகே தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய மையவாத தலைவரான மக்ரோங், தேர்தல் தற்போது முடிவடைந்துள்ளதாகவும், தான் “அனைவருக்குமான அதிபராக இருப்பேன்” எனவும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இம்மானுவல் மக்ரோங் தான்.

தோல்வியை தழுவினாலும், தான் பெற்ற குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதம் வெற்றியை குறிப்பதாக, 53 வயதான லீ பென் தெரிவித்துள்ளார்.

8 முறையாக தோற்ற லீ பென்

தான் நடத்திய தேசிய பேரணியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துகள் புதிய உயரத்தை எட்டியதாக, தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய லீ பென் தெரிவித்தார். ஆனால், தீவிர வலது போட்டியாளரான எரிக் ஸிம்மோர், தன்னுடைய தந்தையை போலவே லீ பென் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். “தோல்வி பட்டியலில் லீ பென் பெயர் இடம்பெறுவது இது எட்டாவது முறை” என அவர் தெரிவித்தார்.

தன்னுடைய தந்தை ஜேன் – மேரி லீ பென் நிறுவிய கட்சியை வழிநடத்தும் பொறுப்பை 2011 ஆம் ஆண்டில் மெரைன் லீ பென் பெற்றார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார் இவர். பிரான்ஸில் அதிகமான வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காக வரி நீக்கம், பொது இடங்களில் முஸ்லிம்கள் முக்காடு அணிவதற்கு தடை, வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸில் குடியேறுபவர்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கான வாக்கெடுப்பு ஆகியவற்றை லீ பென் முன்வைத்தார்.

பதில்கள் கண்டறியப்படவேண்டும்

“நம்முடைய குடிமக்கள் பெரும் எண்ணிக்கையில் தீவிர வலதுசாரிக்கு வாக்களித்ததற்கான கோபம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கான பதில்கள் கண்டறியப்பட வேண்டும்,” என தன்னுடைய வெற்றி உரையில் மக்ரோங் தெரிவித்தார். “இதனை கண்டறிவது என்னுடைய மற்றும் என்னை சுற்றியிருப்பவர்களின் கடமையாகும்” என அவர் தெரிவித்தார்.

இம்மானுவல் மக்ரோங்

பட மூலாதாரம், LUDOVIC MARIN/AFP via Getty Images

மூன்று வாக்காளர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை. தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 72 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இது 1969-க்குப் பின்னான தேர்தல்களில் பதிவானதில் குறைவான வாக்கு சதவீதமாகும். மேலும், 30 லட்சத்திற்கும் அதிகமானோர் செல்லாத வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

குறைவான வாக்குப்பதிவு

தேர்தல் நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டில் விடுமுறை நாளாகும். இருப்பினும், தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது வேட்பாளர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற வாக்காளர்களின் அக்கறையின்மையை பிரதிபலிக்கிறது. செல்லாத வாக்குகளை செலுத்திய வாக்காளர்கள், தாங்கள் தற்போதைய அதிபரை (இம்மானுவல் மக்ரோங்) தண்டிப்பதற்காக அவ்வாறு செய்ததாக பிபிசியிடம் தெரிவித்தனர்.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாத மக்ரோங்குக்கு எதிரான போராட்டக்காரர்கள், பல்வேறு நகரங்களில் குறிப்பாக பாரிஸ், ரென்ஸ், டௌலௌஸ் மற்றும் நான்டெஸ் ஆகிய நகரங்களில் பேரணிகளை நடத்தினர்.

“செல்லாத வாக்குகள் அடங்கிய கடலில் தத்தளிக்கிறார்

தன்னுடைய வெற்றி உரையில் 44 வயதான மக்ரோங், “அதிபரை தேர்ந்தெடுக்க விரும்பாத அவர்களின் தேர்வு குறித்து” தன்னுடைய அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

இம்மானுவல் மக்ரோங் - மெரைன் லீ பென்

லீ பென் மற்றும் மக்ரோங் இருவரையும் கடுமையாக விமர்சித்தார் தீவிர இடதுசாரி தலைவரான ஜேன் – லூச் மெலெஞ்சன்.

முதல் சுற்று வாக்குப் பதிவில் லீ பென்னைவிட மயிரிழை அளவு குறைவான வாக்குகளைப் பெற்றார் இவர்.

மெரைன் லீ பென் மீது பிரான்ஸ் நம்பிக்கை வைக்க மறுத்திருப்பது நல்ல செய்திதான் எனக்கூறிய அவர், மற்ற எந்த அதிபரையும்விட மக்ரோங் மோசமான வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். “புறக்கணிப்புகள், செல்லாத வாக்குகள் கடலில் அவர் தத்தளிக்கிறார்” என அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சொல்வது என்ன?

தீவிர வலதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளுக்கு எதிரான சூழல் ஏற்படும் என அச்சத்தில் இருந்த ஐரோப்பிய தலைவர்கள் மக்ரோங் வெற்றி மூலம் நிம்மதியடைந்துள்ளனர். அவருடைய வெற்றியை வரவேற்றுள்ளனர்.

ஜெர்மன் ஆட்சித்துறை தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ், மக்ரோங்குக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவராவார். யுக்ரேன் மீதான ரஷ்ய போருக்கு எதிர்வினையாற்றுவதில் இரு நாடுகளின் முன்னுள்ள பரஸ்பர சவால்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுக்ரேன் உள்ளிட்ட விவகாரங்களில் “நெருக்கமான ஒத்துழைப்பை” தான் எதிர்நோக்குவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த போரில் மக்ரோங் ராஜீய ரீதியில் முக்கிய பங்கை வகித்த நிலையில், ரஷ்யாவுடனான உறவுகள் குறித்த புகார்களை வெளிக்கொண்டு வருவதில் மெரைன் லீ பென் இடர்ப்பாடுகளை சந்தித்தார்,.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் மக்ரோங் வெற்றியை வரவேற்றுள்ளார்.

மக்ரோங் சாம்ப்ஸ் டி மார்ஸில் தனது வெற்றி உரைக்காக பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து மிகவும் அடையாளமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

வாழ்க்கை செலவு அதிகரிக்கும் நிலையில்

ஐரோப்பிய ஒன்றிய கீதமான Ode to Joy இசைக்க, அவரது மனைவி பிரிஜிட் மற்றும் குழந்தைகள் அடங்கிய குழுவை வழிநடத்திச் சென்ற மக்ரோங், “யாரும் தனித்து விடப்படமாட்டார்கள்” என ஆதரவாளர்களுக்கு உறுதியளித்தார். தனக்கு வாக்களித்தவர்கள் குறித்து பேசிய மக்ரோங், தான் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகமான வாழ்க்கைச் செலவு பிரச்னை மில்லியன் கணக்கிலான பிரான்ஸ் மக்களை பாதித்துவருகிறது. இந்த விவகாரம், தேர்தல் பிரச்சாரத்தில் முதல் பிரச்னையாக இருந்தது. அதிபர் இம்மானுவல் மக்ரோங், பணக்காரர்களின் அதிபராக செயல்படுவதாக, அவருடைய போட்டியாளர்கள் குற்றம்சாட்டினர்.

எனினும், “பல பிளவுகள் மற்றும் புரிதல் இல்லாமை” உள்ளிட்ட பல நெருக்கடிகளை பிரான்ஸ் சந்தித்துக்கொண்டிருக்கையில், அதிபராக அவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பது வலுவான செய்தியை அளிப்பதாக, பிரெஞ்சு வானொலிவில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜேன் கேஸ்டெக்ஸ் தெரிவித்தார்.

வரும் ஜூன் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது, பிரான்ஸ் அரசியல் தலைவர்களின் அடுத்தகட்ட பணியாக உள்ளது. மக்ரோங்குக்கு இப்போதைக்கு பெரும்பான்மை இருந்தாலும், முதல் சுற்றில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் ஏற்கெனவே புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். 63% வாக்காளர்கள் மக்ரோங் தனது பெரும்பான்மையை இழக்க விரும்புவதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

அது நடந்தால், அவர் மற்ற கட்சிகள் தலைமையிலான அரசாங்கத்துடன் “இணைந்து செயல்படும்” நிலைமைக்குத் தள்ளப்படுவார்.

பிரதமரின் மையவாதக் கட்சியைத் தோற்கடித்து பிரதமராகும் வாய்ப்பை தீவிர இடதுசாரி தலைவரான ஜேன் – லூச் மெலெஞ்சன் ஏற்கெனவே பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தன் உரையில், “போட்டி முழுவதுமாக முடிவடையவில்லை” என ஆதரவாளர்களிடையே உரையாற்றுகையில் லீ பென் தெரிவித்தார். முழுமையான அதிகாரத்தை மக்ரோங் தக்க வைப்பத்தில் உள்ள சவால்கள் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »