Press "Enter" to skip to content

ஹோலோகாஸ்ட் வரலாறு: ‘ஹிட்லர் உடலில் யூத ரத்தம்’ – ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம்

பட மூலாதாரம், EPA

இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தவர் ஹிட்லர். ஆனால், ஹிட்லர் உடலில் யூத ரத்தம் இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறிய கருத்து இஸ்ரேலை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

யுக்ரேனில் நாஜி கோட்பாடு தலை தூக்குவதால் அந்நாட்டின் மீது படையெடுப்பதாக போரின் தொடக்கத்தில் ரஷ்யா ஒரு காரணம் கூறியிருந்தது. ஆனால், யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி ஒரு யூதர். அதாவது ஹிட்லரின் நாஜி கோட்பாட்டால் பாதிக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில், யுக்ரேனில் நாஜி கொள்கைகள் தலை தூக்குவதாக தாம் கூறிய கருத்தை நியாயப்படுத்தும் முயற்சியில், இப்போது புதிதாக ஹிட்லரைப் பற்றி ஒன்றை சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டார் லாவ்ரோவ்.

இதையடுத்து, இஸ்ரேல் நாட்டு வெளியுறவு அமைச்சகம் அந்நாட்டுக்கான ரஷ்யத் தூதரை அழைத்து விளக்கம் கேட்டது. அத்துடன் இந்தக் கருத்துக்கு ரஷ்யா மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இரண்டாம் உலகப் போரின்போது ‘ஹோலோகாஸ்ட்’ எனப்படும் யூத இனப்படுகொலையை முன்னெடுத்த ஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சி, ஜெர்மனியில் 60 லட்சம் யூதர்களைக் கொன்றது. இந்த ஹோலோகாஸ்ட் நிகழ்வின் நினைவு நாளை இஸ்ரேல் அனுசரித்து சில தினங்களே ஆயின. இந்நிலையில், ஜோனா பியான்கா என்ற இத்தாலி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய செர்கெய் லாவ்ரோவ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

யுக்ரேனில் நாஜி கொள்கைகள் தலைதூக்குவதாலேயே அங்கு ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிவருகிறது. ஆனால், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி நாஜிகளால் பாதிக்கப்பட்ட யூத இனத்தை சார்ந்தவராக இருப்பது குறித்து லாவ்ரோவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “நான் கூறுவது தவறாக இருக்கலாம். ஆனால், ஹிட்லர் உடலில் யூத ரத்தம் இருந்தது. (ஸெலென்ஸ்கி ஒரு யூதர்) என்பது ஒன்றுமே இல்லை. மிகவும் தீவிரமான யூத எதிர்ப்பாளர்கள் பொதுவாக யூதர்களாகத்தான் இருப்பார்கள் என்று அறிவார்ந்த யூத மக்கள் கூறுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் கடும் கோபம்

செர்கெயின் இந்த கருத்து இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் கூறுகையில், “வரலாற்றின் மிக கொடூரமான குற்றங்களுக்கு யூதர்களை குற்றம்சாட்டுவது போன்றும், யூதர்கள் மீது அடக்குமுறையை ஏவியவர்களை விடுவிப்பது போன்றும் இந்த பொய்கள் உள்ளன” என்றார்.

மேலும், “இன்றைய போர்கள் எதுவும் ஹோலோகாஸ்ட்டும் அல்ல, ஹோலோகாஸ்ட் போன்றதும் அல்ல” என்றார் அவர்.

செர்கெய் கருத்துக்கு கோபத்துடன் எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யாயிர் லாபிட், லாவ்ரோவின் வார்த்தைகள் “மன்னிக்க முடியாதவை” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேலின் யாட் வாஷெம் ஹோலோகாஸ்ட் நினைவகத்தின் தலைவர் டானி டயனும் லாவ்ரோவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அவருடைய பல கருத்துகள் அபத்தமானவை, ஆபத்தானவை, கண்டனத்திற்குரியவை,” என அவர் ட்வீட் செய்துள்ளார். “ஹோலோகாஸ்ட் இனப்படுகொலையை தலைகீழாக்கிக் கூறுகிறார், ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற முற்றிலும் ஆதாரமற்ற கூற்றை ஊக்குவிப்பதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக மாற்றுகிறார்” எனத் தெரிவித்தார் டயன்.

யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி காணொலி வாயிலாக கூறுகையில், “என்னிடம் வார்த்தைகள் இல்லை… ரஷ்ய அதிபர் மாளிகையிலிருந்து இதற்கு எவ்வித மறுப்போ, நியாயப்படுத்துதலோ தெரிவிக்கப்படவில்லை. அங்கு அமைதி மட்டுமே நிலவுகிறது” என்றார்.

இந்த அமைதி ரஷ்ய தலைவர் (அதிபர்) “இரண்டாம் உலகப் போரிலிருந்து கற்ற பாடங்களை” ஒன்று மறந்துவிட்டார் அல்லது “அந்த பாடங்களை அவர்கள் எப்போதும் கற்கவில்லை” என்பதை உணர்த்துகிறது என ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

பட மூலாதாரம், Reuters

“இனவெறியின் வெளிப்பாடு”

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் ப்ரீஸ் கூறுகையில், லாவ்ரோவின் கருத்து, “தரம் தாழ்ந்த இனவெறியின் வெளிப்பாடு” என்றும் “நயவஞ்சகமான பொய்கள்” என்றும் தெரிவித்தார்.

“எவ்வளவு கீழாக அவர்கள் செல்வார்கள் என்பதை ரஷ்யா நிரூபித்துவருகிறது” எனவும், அதற்கான “சமீபத்திய உதாரணம்தான்” லாவ்ரோவின் கூற்றுகள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெருசலேமில் உள்ள பிபிசியின் ஜான் டோனிசன், இஸ்ரேல் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூதர்களுக்கு லாவ்ரோவின் கருத்துகள் எவ்வளவு ஆழமாக புண்படுத்தும் மற்றும் மனசாட்சியற்றதாக இருக்கும் என்பதை அவர் கருத்துக்கு வரும் எதிர்வினையின் வலிமை பிரதிபலிக்கிறது என்று கூறுகிறார். சமீபத்திய மாதங்களில், அதிக ரஷ்ய மக்கள்தொகை கொண்ட இஸ்ரேல், ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்பட சில சமயங்களில் முயன்றது.

ஆனால், அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகப் போதுமான அளவு கடுமையான நிலைப்பாட்டை எடுக்காததற்காக இஸ்ரேலிய அரசாங்கம் சில விமர்சனங்களை எதிர்கொண்டதாக அவர் கூறுகிறார். லாவ்ரோவின் கருத்துகள் ரஷ்யாவுடனான இஸ்ரேலின் உறவுகளை சோதிக்கும் என்று அவர் கூறுகிறார்.

யுக்ரேனின் வெளியுறவு அமைச்சரும் இதுதொடர்பாக லாவ்ரோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துகள் ரஷ்யாவின் “ஆழ்ந்த வேரூன்றிய யூத-விரோதத்திற்கு” சான்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிட்லரின் அடையாளம் தெரியாத தந்தைவழி தாத்தா யூதர் என்று பல தசாப்தங்களாக நிரூபிக்கப்படாத கூற்றுகள் உள்ளன, இது ஹிட்லரின் வழக்கறிஞர் ஹான்ஸ் ஃபிராங்கின் வலியுறுத்தலால் தூண்டப்பட்டது.

1953இல் வெளியான அவருடைய சுயசரிதையில் ஹான்ஸ் ஃபிராங்க், தான் யூத மரபை கொண்டுள்ளதாக பரவும் வதந்திகள் குறித்து விசாரணை நடத்துமாறு ஹிட்லர் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஹிட்லரின் தாத்தா யூதர் என்பதற்கான ஆதாரத்தைத் தாம் வெளிக்கொண்டு வந்ததாக அதில் ஃபிராங்க் தெரிவித்துள்ளார். சதி கோட்பாடுகளில் வலுவான இந்த கூற்று, முக்கியமான வரலாற்று அறிஞர்களால் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே அணுகப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »