Press "Enter" to skip to content

கொரோனா காரணமாக உலகிலேயே அதிகம் உயிரிழப்புகளை சந்தித்த நாடு இந்தியா – உலக சுகாதார நிறுவனம்

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • இந்திய செய்தியாளர்

பட மூலாதாரம், AFP

இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 4 மில்லியன் பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது இந்தியாவின் அதிகாரபூர்வ மதிப்பீட்டைக்காட்டிலும் பத்து மடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை கணக்கிட முறை தவறானது என்று கூறி, இந்திய அரசு இந்த எண்ணிக்கையை நிராகரித்துள்ளது. உண்மையில் எத்தனை இந்தியர்கள் கொரோனா தொற்றுநோயால் இறந்தார்கள் என்பதை நாம் எப்போதாவது அறிவோமா?

அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தரவை வழங்கும் உலகளாவிய களஞ்சியமான, உலக இறப்பு தரவுத்தொகுப்பின் ஆராய்ச்சியாளர்கள் 2020 ஆம் ஆண்டு நவம்பரில் தொற்றுநோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களைக் கோரி இந்தியாவில் உள்ள அதிகாரிகளை அணுகினர்.

“இத்தகவல்கள் கிடைக்கவில்லை”, என்று இந்தியாவின் முக்கிய புள்ளியியல் அலுவலகம் ஆராய்ச்சியாளர்களிடம் கூறியதாக, தரவுத்தொகுப்பை உருவாக்கிய விஞ்ஞானியும், உலக அளவில் கோவிட் காரணமாக ஏற்படும் அதிகப்படியான இறப்புகளின் மதிப்பீட்டிற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஏரியல் கார்லின்ஸ்கி தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, ஒப்பிடுகையில், எதிர்பார்த்ததை விட எத்தனை பேர் அதிகமாக இறக்கிறார்கள் என்பதைக்கூறும் எளிய அளவீடுதான், இந்த அதிகப்படியான இறப்புகள். இந்த இறப்புகளில் எவ்வளவு எண்ணிக்கை கோவிட் காரணமாக நிகழ்ந்தன என்பதைக் கூறுவது கடினம் என்றாலும், தொற்றுநோயின் தாக்கம் மற்றும் எண்ணிக்கையின் அளவீடாக அதைக் கருதலாம்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவில், அதிகாரப்பூர்வமாக 5 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை, 4 லட்சத்து 81 ஆயிரம் கோவிட் காரணமான இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை கிட்டதட்ட 10 மடங்கு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.

இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மதிப்பிடப்பட்ட உலகளாவிய இறப்பு விகிதத்தில் 80% க்கும் அதிகமான உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்தை குறிக்கும் 20 நாடுகளில் இந்தியாவும் அடங்கும். இதுவரை உலகளவில் கணக்கிடப்படாத இறப்புகளில் கிட்டத்தட்ட பாதியளவு இந்தியாவில் நடந்துள்ளன.

இந்தியா - கோவிட்

பட மூலாதாரம், Reuters

உலக இறப்பு தரவுத்தொகுப்பு போன்ற உலகளாவிய தரவுத்தளங்களில் இந்தியா இல்லை. மேலும், அனைத்து காரணங்களாலும் ஏற்படும் அதிகப்படியான இறப்புகளின் ‘மாதிரி அடிப்படையிலான மதிப்பீடுகள்’ மட்டுமே தேசிய எண்ணிக்கையாக உள்ளது. (இந்த மாதிரிகள் தேசிய அளவிலான சிவில் பதிவுத் தரவு, உலக அளவில் நோயின் தாக்கம், சுயாதீனமான தனியார் வாக்குச் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு மற்றும் பிற கோவிட் தொடர்பான அளவுருக்கள் ஆகியவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டவை.)

2020 ஆம் ஆண்டு, 8.1 மில்லியன் இறப்புகளைக் காட்டும் பொது பதிவுத் தரவை அரசு இந்த வாரத்தொடக்கத்தில் வெளியிட்டது. இது முந்தைய ஆண்டை விட 6% அதிகமாகும். 4 லட்சத்து 74 ஆயிரத்து 806 அதிகப்படியான இறப்புகள் கோவிட் காரணமாக இருக்க முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரபூர்வ பதிவுகளின்படி, 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் கோவிட் நோயால் இறந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் தொற்றுநோய் காரணமான இறப்புகள் “அதிகாரப்பூர்வமாக” அறிவிக்கப்பட்டதை விட ஆறு முதல் ஏழு மடங்கு அதிகம்” என்று மதிப்பாய்வு செய்யப்பட்ட மூன்று பெரும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனத்தின் (Institute for Health Metrics and Evaluation) ‘தி லான்செட்’ என்ற மருத்துவ இதழில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 12 மாநிலங்களில் இருந்து, அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்புத் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளது. அவர்களின் மதிப்பீடு, உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டிற்கு இணையாக உள்ளது.

கோவிட் போரை வெற்றிகரமாக எதிர்கொண்ட அரசின் வெற்றிக்கதைக்கு எதிரான, தவறான சுயாதீன மாதிரி மதிப்பீடுகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்துள்ளது. இவை ” தவறானவை, தப்பான தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை, ,மேம்போக்கானவை” என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் மதிப்பிடும் முறைகள் மற்றும் மாதிரி அளவுகள் குறைபாடுள்ளவை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இறப்பு எண்ணிக்கை குறைவாக கணக்கிடப்பட்டதன் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அவர்கள் கூறினர்.

“தற்போது [அனைத்து ] தரவுகள் கிடைத்தாலும், வெளியிடப்பட்ட [இறப்பு] எண்ணிக்கை மற்றும் இந்தியா கோவிட் தொற்றை வெற்றிகரமாக சமாளித்தது என்ற கூற்றுடன் இவை முரண்படுவதால், அரசு அதை பகிரங்கப்படுத்தத் தயங்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கார்லின்க்ஸி கூறுகிறார்.

தொற்றுநோய்களின் போது சரியான இறப்பு எண்ணிக்கையை வழங்க பல நாடுகள் போராடின என்பது உண்மை. தொற்றுநோய்க்கு பரிசோதிக்கப்படாததால், இறப்பு எண்ணிக்கையில் பலர் சேர்க்கப்படவில்லை. மேலும் இறப்பு பதிவு, மிகவும் மெதுவாகவும் , பரவலாக செய்யப்படாமலும் இருந்தது. மேலும் பல வளர்ந்த நாடுகளில் கூட மற்ற அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்பு தரவுகளும் குறிப்பிடத்தக்க பின்னடைவுடன் வெளியிடப்படுகின்றன.

இந்தியா - கோவிட்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. அங்கு முக்கிய இறப்பு பதிவுகள் பதிவிட்டு, தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. மக்கள்தொகை அளவில் இந்தியாவுடன் ஒப்பிடக்கூடிய ஒரே நாடான சீனாவின் இறப்பு தரவு ,’சற்று தெளிவற்றதாக’ உள்ளது. ஆனால் அங்குள்ள அதிகாரிகள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்களுக்கான ‘அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புகள் ‘குறித்த வருடாந்திர தரவுகளை வெளியிட்டுள்ளனர் என்று கார்லின்ஸ்கி கூறுகிறார். “நல்ல பதிவு” இருந்தபோதிலும்,இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும், எந்தத் தரவையும் பகிரவில்லை.

இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடுவது எளிதான விஷயமல்ல.

இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் பாதி, வீடுகளில் குறிப்பாக கிராமங்களில் நிகழ்கிறது. மக்கள்தொகை ஆய்வுகளின் அடிப்படையில் மற்றும் ஐ.நா மதிப்பீட்டின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 10 மில்லியன் இறப்புகளில், 7 மில்லியன் இறப்புகளுக்கு மருத்துவ சான்றளிக்கப்பட்ட காரணம் இல்லை. மேலும், அவற்றில் சுமார் 3 மில்லியன் இறப்புகள் பதிவு செய்யப்படுவதில்லை. பெண்களின் இறப்பு குறித்து முழுமையாக கணக்கிடப்படுவதில்லை. மேலும், உத்திரபிரதேசம் மற்றும் பிகார் போன்ற ஏழ்மையான மாநிலங்களில் இறப்பை பதிவு செய்வது குறைவாக உள்ளது.

ஆனால், இந்தியா அடிப்படை தொற்றுநோய்த் தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட மறுக்கிறது, தொற்று எண்ணிக்கையின் முழு விவரங்களை தருவதில்லை. வயது, பாலினம் மற்றும் தடுப்பூசி செலுத்திய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை அளிப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இறப்பு எண்ணிக்கையின் நம்பகமான தரவு இல்லாமல், வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் உண்மையில் இறப்புகளைக் குறைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது கடினம்.

“தரவு பற்றாக்குறை மற்றும் தரவில் வெளிப்படையின்மை’ ஆகியவை இந்தியாவில் தொற்றுநோய் காலத்தில் முக்கியமாக காணப்பட்டன. தரவு தரத்தை மேம்படுத்துவது அல்லது தரவை கிடைக்கச் செய்யாதது குறித்து பெரும்பாலும் தனித்துவமான அசாத்தியமான அகந்தை உள்ளது,” என்கிறார் மிஷிகன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் புள்ளியியல் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியரும், தொற்றுநோயை உன்னிப்பாகக் கண்காணித்தவருமான பிரமர் முகர்ஜி.

தமது அதிகாரப்பூர்வ தொற்றுநோய் எண்ணிக்கையின் உண்மைத்தன்மை மீதான இந்தியாவின் பிடிவாதமான வலியுறுத்தல் ஆச்சரியத்தை அளிக்கிறது என்று மற்றவர்கள் கூறுகின்றனர். சில மாநிலங்களில் கோவிட் தொற்றுநோய் காரணமான இறப்புகளுக்கு இழப்பீடு கோருவது, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களைக்காட்டிலும் அதிகமாக உள்ளது. “கட்சிகளுக்கு இடையே அரசியல் எதிர்ப்பு புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் அது கண்மூடித்தனமான சாக்குபோக்காக இருக்கக்கூடாது,” என்கிறார் இந்தியாவின்’மில்லியன் டெத்’ என்ற் ஆய்வுக்கு தலைமை வகித்த, டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பிரபாத் ஜா.

“இந்தியா பொது பதிவு முறையை மேம்படுத்த வேண்டும். இறப்பு பதிவுகளை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ் அளித்தல் மற்றும் தரவுகளை மேம்படுத்த வேண்டும்”, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நவீன இயந்திரக் கற்றல், சமூக சுகாதாரப் பணியாளர்கள், செயலற்ற பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் மற்றும் அலைப்பேசி பதிவுகள் போன்ற ஆதாரங்களில் இருந்தும் இந்தியா இறப்புத் தரவைக் ஒன்றிணைக்க முடியும். சீனாவை போல மருத்துவமனைகளில் அதிகமான இறப்புகள் ஏற்பட தொடங்கினால், இறப்பு பதிவு மற்றும் இறப்புக்கான காரணங்களை பதிவு செய்வது எதிர்காலத்தில் எளிதாகிவிடும்.

இந்தியா - கோவிட்

பட மூலாதாரம், Getty Images

கோவிட் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை இந்தியா விரைவாகப் பெறுவதற்கான ஒரு வழி, வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓர் எளிய கேள்வியைச் சேர்ப்பதாகும். 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் உங்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்ததா?

ஆம் எனில், இறந்தவரின் வயது மற்றும் பாலினம் மற்றும் இறந்த தேதியை கூறுங்கள். “இது தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட அதிக இறப்புகளின் நேரடி மதிப்பீட்டை வழங்கும்”, என்று மருத்துவர் ஜா கூறுகிறார்.

இறப்பு மற்றும் நோய் பற்றிய தகவல்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திறவுகோலாகும். 1930களில், ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதங்களில் ஒரு பெரும் அதிகரிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வழக்கமான தரவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகை பிடிப்பதை, இதன் முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் காண இது உதவியது. 1980களில், சான் பிரான்சிஸ்கோவில் இளம் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே இறப்பு அதிகரிப்பு, இறப்பு பதிவு முறையில் இருந்து தெரிய வந்தது. எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோயை அடையாளம் காண இது வழிவகுத்தது. உலகளாவிய தொற்றுநோயின் தொடக்கத்தை அது குறித்தது.

“தொற்றுநோய்களின் போது, ‘அனைத்து காரணங்களாலும்’ ஏற்பட்ட இறப்பின் தரவுகளை வெளியிட்டு இந்தியா தனது விமர்சகர்களின் வாயை அடைக்க வேண்டும்,” என்று பேராசிரியர் முகர்ஜி கூறுகிறார். “அறிவியலை, அறிவியலுடன் எதிர்கொள்ளுங்கள். தேசிய தரவுகள் அனைத்து கிடைக்கச் செய்யுங்கள்,”என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »