Press "Enter" to skip to content

இலங்கை நெருக்கடி: ரணில் – கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்னைக்கு தீர்வாகாது – அனுரகுமார திஸாநாயக்க

பட மூலாதாரம், SL PRESIDENT’S MEDIA DIVISION

(இன்றைய (மே 13) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னெடுக்கும் மாளிகை சூழ்ச்சிகள் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு அல்ல என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அவர் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் வெளிப்படுவது என்னவென்றால், நாட்டு மக்களின் உண்மையான ஆணை என்ன என்பது குறித்து சிறிதும் சிந்திக்காது அதற்கு செவி சாய்க்க தயார் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, ரணில் விக்ரமசிங்க எப்போதுமே ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றும் நபராகவே செயற்பட்டார். இப்போது அவர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதும் ராஜபக்ஷர்களை காப்பாற்றவேயாகும்.

அதேபோல், ராஜபக்ஷர்களும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்களே. இவர்களின் ஊழல் மோசடிகள், குற்றங்கள் தொடர்பில் மிகப்பெரிய போராட்டமொன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதிலும் அதற்கு செவிமடுக்காது கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்ரமசிங்கவும் இப்போது எடுத்துள்ள தீர்வு என அவர்கள் நம்பும் விடயத்தை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை.

ரணில் கோட்டாவையும் கோட்டா ரணிலையும் நம்புகின்றனரே தவிர வேறு எவருமே இவர்களின் மாளிகை சூழ்ச்சியை நம்பப்போவதில்லை. இந்த மாற்றம் மக்கள் எதிர்பார்த்த மாற்றமல்ல, எனவே மாளிகை சூழ்ச்சிகள் பிரச்னைக்கு தீர்வு அல்ல. மாறாக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்” என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினருக்கு மிதமிஞ்சிய அதிகாரங்கள் – ஐநா கண்டனம்

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

காவல் துறையினர் மற்றூம் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதமிஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக, ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐநா சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ற் வொயூல் தெரிவித்ததாக, ‘வீரகேசரி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது நாடும் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

இதுதொடர்பாக, ஐநாவின் விசேட அறிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதமிஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன்.

அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை நிறுத்திக்கொள்வதுடன், அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பாதுகாக்க வேண்டும். மாறாக, அவர்களை அமைதிப்படுத்துவது முறையான பதிலாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஐநா சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நாடளாவிய ரீதியில் சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை தற்போது சிறுவர்கள் அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு உதவுவது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தினரினதும் கடமையாகும்” என்று வலியுறுத்தியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் உடனடியாக பதவி விலக முடியாது – முன்னாள் அமைச்சர் அலி சப்ரி

அலி சப்ரி

பட மூலாதாரம், MINISTRY OF JUSTICE SRILANKA

ஜனாதிபதியால் உடனடியாக பதவி விலக முடியாது, அவருக்கு சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, ‘தினகரன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அல்லது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகும் குறுகிய காலத்தை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். அவர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்க முடியாது என கட்சி தலைவர் கூட்டத்தில் எதிர்த்தரப்பினர் வலியுறுத்திய போதே முன்னாள் அமைச்சர் அலிசப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

பேரக்குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு: மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

உத்தராகண்டில் பேரக்குழந்தை பெற்று தராவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று மகன்-மருமகள் மீது பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மகனுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், பிரசாத் உத்தராகண்ட் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

“எனது மகனுக்கு வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் விமானி பயிற்சி எடுத்துக்கொள்ளவும் ஏராளமான பணம் செலவழித்து உள்ளேன். அவரது திருமணத்தை நட்சத்திர ஓட்டலில் மிகுந்த பொருட் செலவில் நடத்தினேன். அவர்கள் வெளிநாட்டு தேனிலவு செல்லவும் தாராளமாக செலவு செய்தேன்.

தற்போது என் மகன் கௌஹாத்தியிலும், மருமகள் நொய்டாவிலும் பணி நிமித்தமாக தனித்தனியாக வசிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கவலைப்படவில்லை. அதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்னும் ஒரு ஆண்டில் எங்களுக்கு பேரக்குழந்தை பெற்றுத்தர வேண்டும். இல்லாவிட்டால் மகன், மருமகள் இருவரும் ரூ.5 கோடி இழப்பீடு தரவேண்டும்”

இவ்வாறு அவர் கூறியிருந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. வருகிற 15-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவு: அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு

பட மூலாதாரம், K.N.NEHRU

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் உள்ளனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும், முறையற்ற நிர்வாகத்தை முறைப்படுத்தவுமே தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

10 – 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி உயர்த்துவது சரியாக இருக்காது என்பதால் ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவும், அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளது.

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், அதை சிறப்பாக நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகப் பணியாளர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினால், அது நிவர்த்தி செய்யப்படும்” என்றார்.

மேலும் ‘விடியா அரசு’ என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு பதில் அளித்தால், “அது வேற மாதிரி ஆகிவிடும்” என சிரித்துக்கொண்டே பதிலளிக்காமல் எழுந்துசென்றதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »