Press "Enter" to skip to content

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்

பட மூலாதாரம், Reuters

உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் காலமானார்.

ஷேக் கலீஃபா 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக இருந்தார், ஆனால் 2014இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து ஆளுகையில் அவரது பங்கு பெரும்பாலும் சடங்கு ரீதியாக மாறிப்போனது.

அவரது ஒன்றுவிட்ட சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அல்-நஹ்யான் குடும்பத்திற்கு $150bn (£123bn) சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருப்பதுடன், அதை உள்ளடக்கிய ஏழு எமிரேட்களின் எண்ணெய் வளம் மிக்க தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஷேக் கலீஃபா இருந்தார். அவர் இறந்த தகவலை அதிகாரபூர்வ WAM செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவரது மறைவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் கொடிகள் பறக்க விடப்படும் என்றும் 40 நாட்களுக்கு அவரது மறைவுக்கான துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாட்களுக்கு பொது மற்றும் தனியார் துறையில் பணிகள் நிறுத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஷேக் கலீஃபா நவம்பர் 2004இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது அதிபராகப் பொறுப்பேற்றார், அபுதாபியின் 16ஆம் ஆட்சியாளராக அவரது தந்தைக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்தார்.

.தமது ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளில், கூட்டாட்சி அரசாங்கம், அபுதாபி ஆகிய இரண்டின் பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஷேக் கலீஃபா தலைமை தாங்கினார்.

ஆனால் பக்கவாதம் ஏற்பட்ட பிறகு, அவர் பொது வெளியில் அரிதாகவே காணப்பட்டார். அதே சமயம், ஆளுகை சார்பில் முக்கிய உத்தரவுகளை அவர் பிறப்பித்து வந்தார்.

தலைவர்கள் இரங்கல்

ஷேக் கலீஃபாவின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் இரங்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு தொலைநோக்கு தலைவரை இழந்துள்ளது, பாகிஸ்தான் ஒரு சிறந்த நண்பரை இழந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்கள் இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஷபாஸ் ஷரீஃப் கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விரைவான வளர்ச்சியைக் கொண்டு வந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக ஷேக் கலீஃபா அன்புடன் நினைவுகூரப்படுவார் என்று தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசியலமைப்பின்படி, துபாய் ஆட்சியாளரான துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இடைக்கால அதிபராக செயல்படுவார்.

ஏழு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களை ஒன்றிணைக்கும் கூட்டாட்சி கவுன்சில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்க 30 நாட்களுக்குள் கூட வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »