Press "Enter" to skip to content

மலேரியா கொசு: மரபணு மாற்று முறை மூலம் மலேரியாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், TARGET MALARIA

பெண் கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் விதமாக, மரபணுவை மாற்றுவதன் மூலம், மலேரியாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காரணம், கொசுக்களில் பெண்கொசுக்கள் மட்டுமே கடிக்கின்றன. அதுபோக, பெண் கொசுக்கள் இல்லாவிட்டால், கொசுக்களின் எண்ணிக்கை குறையும். இந்த முறையின் சாதக பாதகங்கள் என்ன?

மரபணு மாற்று முறை மூலம் மலேரியா கொசுக்களை கையாளமுடியும் என உலகளாவிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் புதிய முறைகளில் ஒன்றான மரபணு இயக்கி (gene drives) முறை மூலம் அதைச் சாத்தியப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவிப்பதில் எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார் சூழலியல் செயல்பாட்டாளர் லீ -ஓநெல்.

இயற்கையை எதிர்த்து, ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட ஒன்றை, வன உயிர்களுடன் பரவ விடுவது என்பது உச்சகட்ட திமிர்த்தனம். இது மேலும் மேலும் வருத்தப்படுத்துகிறது என்கிறார் இங்கிலாந்து மரபணு மாற்று எதிர்ப்புக்குழுவின் (UK anti-GM pressure group) இயக்குநர் ஜி.எம். ஃப்ரீஸ்.

அதுபோக, விளக்கிலிருந்து பூதம் ஒருமுறை வெளிவந்துவிட்டால், மீண்டும் உள்ளே அனுப்ப முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சூழலியல் செயல்பாட்டாளர் லீ -ஓநெல்.

பட மூலாதாரம், LIZ O’NEILL

இவர்கள் இப்படி அச்சமும் எதிர்ப்புமாக கருத்து தெரிவிப்பது ஜீன் டிரைவ்கள் எனப்படும் முறை குறித்துத்தான்.

ஜீன் டிரைவ் (gene drives):

இந்த முறை இயங்கும் விதம் ஒரு அறிவியல் புனைவு நாவலைப் போலத் தோன்றும். ஆனால், இவை ஆய்வகங்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் குழப்பக்கூடிய விவகாரம்தான். எனினும் இதை எளிமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மாற்று மரபணு ஒன்றை, ஒரு உயிரிக்குள் புகுத்தும் இடத்தில் ஜீன் டிரைவ் முறை அடுத்த நிலையை அடைகிறது. உள்ளே சென்றதும் தன்னைத்தானே பிரதியெடுத்துக் கொண்டு இயற்கையான மரபணுக்களை நீக்கிவிடுகிறது.

அ என்று விலங்கின் உடலில் ஜீன் டிரைவ் செலுத்தப்பட்டுள்ளது. ஆ என்ற விலங்கில் அப்படி அல்ல. இப்போது அ மற்றும் ஆ ஆகிய இரண்டு விலங்குகளும் இணையும்போது உருவாகும் கருவில் `அ`-வின் மரபணுவில் இருந்த ஜீன் டிரைவ் உடனடியாக இயங்கத்தொடங்கி விடும்.

அதாவது, புதிய உயிரியின் உடலில் உள்ள, எதிர் குரோமோசோம்களை இணங்கண்டு, அவற்றுடனான தன் டிஎன்.ஏ மூலக்கூறு சங்கிலியை உடைத்து அழிக்கத் தொடங்கிவிடுகிறது. அதன்பிறகு, `ஆ` -வின் இயற்கையான குரோமோசோம், அ வின் ஜீன் டிரைவ் உள்ள குரோமோசோமை நகலெடுத்து அந்த பாதிப்பை சரிசெய்துகொள்ளும்.

எனவே, புதிதாக உருவாக்கப்பட்ட அந்த பலசெல் உயிரியில் ஜீன் டிரைவ் குரோமோசோம்கள் அதிகமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கும்.

மரபணுவழி வெட்டிகள்:

கிரிஸ்பர் எனப்படும் நிரலாக்கம் செய்யக்கூடிய டிஎன்ஏ வரிசையை ஒரு மரபணுவோடு சேர்ப்பதன் மூலம் ஜீன் டிரைவ்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கிரிஸ்பர், புதிதாக உருவான கருவில் உள்ள பெற்றோரின் டிஎன்ஏவில் இருக்கும் இயற்கையான மரபணுக்களை குறிவைக்க கட்டளையிடக்கூடியது. இந்த ஜீன் டிரைவ்களில் இருக்கும் நொதி, வெட்டும் வேலையைச் செய்கிறது.

ஆனால், ஏன் இப்படி ஒரு கடினமான தொழில் நுட்பம்? மலேரியா கொசுக்கள் உள்ளிட்ட நோய் பரப்பும் பூச்சியினகளை பெருமளவு குறைக்க இந்தத் தொழில் நுட்பம் பயன்படும் என்று நம்பப்படுகிறது அதனால்தான்.

தற்போது இருக்கும் முறையை விட சிறந்ததாக இந்த ஜீன் டிரைவ் முறை இருக்கும். ஏனெனில், இந்த முறையின்படி, ஒவ்வொரு உயிரியிலும் புதிய மரபணு பண்பு இருப்பதால் வேகமாக பரவக்கூடியதாக இருக்கும்.

டிஎன்ஏ

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ஒரு அமைப்புதான் இலக்கு மலேரியா. இது பெண் கொசுக்களை உற்பத்தி செய்வதிலிருந்து கொசுக்களைத் தடுக்கும் விதமான ஜீன் டிரைவ்களை உருவாக்கியுள்ளது.

காரணம், கொசுக்களில் பெண்கொசுக்கள் மட்டுமே கடிக்கின்றன. அதுபோக, பெண் கொசுக்கள் இல்லாவிட்டால், கொசுக்களின் எண்ணிக்கை குறையும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,2020 இல் 627,000 பேர் மலேரியாவால் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதே முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், இந்த நோயால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தையும் குறைக்கலாம். 2020 இல் 241 மில்லியன் நோயாளிகள். இதில் பெரும்பான்மையானவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தவர்கள்.

இதன் விளைவாக,ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பரவி ஆக்கிரமிக்கும் உயிரினங்களான கரும்பு தேரைகள், சிங்கமீன்கள், பழுப்பு பாம்புகள், பழ ஈக்கள், வரிக்குதிரை தசைகள் மற்றும் ஜப்பானிய நாட்வீட் வரை ஆகியவற்றால் பொருளதாரத்தில் ஏற்படும் விளைவு இன்னும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்க வேளாண்மைத் துறையின் தேசிய ஆக்கிரமிப்பு இனங்கள் தகவல் மையத்தின்படி, அவை அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் ஆண்டுக்கு $26பில்லியன் செலவை ஏற்படுத்துகின்றன. உலகளவில், இது கடந்த 50 ஆண்டுகளில் $1.29 டிரில்லியன் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் லீ ஓநெல் போன்ற செயல்பாட்டாளரகள் தொடர்ந்து, இந்த ஜீன் டிரைவ் முறையால் வரப்போகும் எதிர்விளைவுகள் குறித்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஜீன் டிரைவ்கள் என்பவை மரபணு மாற்றப்பட்ட ஸ்டிராய்டுகள் என்கிறார் அவர். “எந்தவொரு உயிரியின் மரபணு மாற்றத்தையும் பயன்படுத்துவது கவலைக்குரியதுதான். அனால், ஜீன் டிரைவ்கள் குறித்து பேசும்போது அது இன்னும் கவலைக்குரியதாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இலக்கு மலேரியா

மருத்துவர் ஜோனதன் கயோண்டோ உகாண்டாவில் இலக்கு மலேரியா ஆய்வின் முதன்மை ஆய்வாளர் ஆவார். அவர், ஏற்கனவே இயற்கையான ஜீன் டிரைவ்கள் இந்த உலகில் ஏற்கனவே உள்ளன என்கிறார். “பலவீனமான மரபணுக்கள்மீது ஆதிக்கம் செலுத்தி அவை தன்னைத்தானே நகலெடுத்து கொள்கின்றன. இந்த வரிசையில், செயற்கை முறையில் ஜீன் டிரைவ்களை தொடர்ந்து உருவாக்குவதில் பாதுகாப்புமொரு முக்கிய கவலையாக உள்ளது” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

ஜோனதன் கயோண்டோ

பட மூலாதாரம், TARGET MALARIA

“மலேரியா இந்த உலகின் மிகப் பழமையான நோய்களில் ஒன்றாகும், மேலும் பல தசாப்தங்களாக முயற்சி செய்த போதிலும், ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

“மலேரியா கொசு மற்றும் மலேரியா ஒட்டுண்ணி ஆகிய இரண்டுக்குமே, தற்போது இருக்கும் முறைகளுக்கு எதிரான திறன் அதிகரித்து வருவதால் புதுமையான அணுகுமுறைகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன. அதில், ஜீன் டிரைவ் முறைகள் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறினார்.

மேலும், “லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியிலும், இத்தாலிய ஆராய்ச்சி நிறுவனமான போலோ ஜிஜிபியிலும் கொசுக்கள் மீதான ஜீன் டிரைவ்களை இலக்கு மலேரியா தொடர்ந்து சோதித்து வருவதாகவும் மருத்துவர் கயோண்டோ கூறுகிறார்.

ஜீன் டிரைவ் ஆய்வு உலகின் முன்னோடி ஆய்வாளர்களின் ஒருவர் அமெரிக்க உயிரியலாளர் கெவின் எஸ்வெல்ட். மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் உதவி பேராசிரியராக உள்ளார். அவர்தான் முதன்முதலில் 2013ஆம் ஆண்டு இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார்.

KEVIN ESVELT

பட மூலாதாரம், KEVIN ESVELT

அவர் கூறும்போது, “பாதுகாப்புதான் இதில் முதன்மையான பிரச்னை. இந்த ஜீன் டிரைவ்களுக்கு ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பிலும் தாக்கம் ஏற்படுத்தக்குடிய ஆற்றல் இருப்பதால், இந்த ஆய்வுகளுக்கு வலுவான பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் நெறிமுறைகள் ஆகியவை தேவை” என்கிறார்.

மேலும், “இந்த தொழில்நுட்பம் டெய்சி செய்ன் என்ற முறையில் வழங்கப்படுகிறது. அதாவது சில தலைமுறைகளுக்குப் பின்னர் செயலிழந்து போகும்படி இது உருவாக்கப்படும். அல்லது அடுத்தடுத்த தலைமுறைகளில் பாதிப்பாதியாக கடத்தப்பட்டு மெல்ல மெல்ல குறைந்துபோகும். இந்த தொழில்நுட்பம் மூலம், ஜீன் டிரைவ்களின் பரவலை கட்டுப்படுத்தவும் தனிமைப்படுத்தவும் முடியும்” என்கிறார் கெவின்.

அத்துடன் “அருகிலிருக்கும் இன்னொரு பகுதிக்கு குறைந்தபட்ச பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்றால், ஒரு நகரம், குறிப்பிட்ட உயிரினத்தின் எண்ணிக்கயில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக, மரபணு மாற்றப்பட்ட உயிரிகளை, அதன் எல்லைக்குள் உருவாக்கி வெளியிடலாம்” என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »