Press "Enter" to skip to content

அரசால் திட்டமிட்டு திருடப்பட்ட ஆஸ்திரேலிய இனத்தின் தலைமுறைகள்

பட மூலாதாரம், Getty Images/ Ian Waldie

எந்த ஒரு நாட்டுக்கும் அதன் குழந்தைகள்தான் எதிர்காலம். ஆனால், ஓர் இனத்தில் சில தலைமுறைகளுக்கு குழந்தைகளே இல்லாமல் செய்துவிட்டால் என்ன நடக்கும்? அதைச் செய்ததன் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் பிப்ரவரி 26ஆம் தேதி தேசிய மன்னிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு நாடு தன் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு, என்னதான் நடந்தது? ஒரு குட்டிக் கதையிலிருந்து புரிந்து கொள்ளத் தொடங்குவோம்.

“அது ஒரு தொல்குடி மக்கள் வசிக்கும் கிராமப்பகுதி. காலையில் எழுந்ததும் கரித்தூளில் விலங்குக் கொழுப்பைக் கலந்து குழந்தைகள் மேல் பூசுவது இந்த மக்களுக்கு வழக்கம். அப்போதுதான் இந்தக் குழந்தைகள் கருப்பின மக்களைப் போல இருப்பார்கள்.

இவர்களது பகுதிக்கு வெள்ளையர்கள் வரும்போதெல்லாம், ஓடிப் போய் மரங்களுக்குப் பின்னும் புதர்களுக்குள்ளும் ஒளிந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது.

இன்னும் சொல்லப்போனால், வெள்ளையர்களிடமிருந்து தப்பிக்க குழந்தைகள் மூட்டைகளுக்குள் வைக்கப்பட்டனர். தும்மல் வந்தால் கூட அடக்கிக் கொள்ள வேண்டும். அதையும் மீறி தும்மிவிட்டால் அவ்வளவுதான். வெள்ளையர்களால் கடத்திச் செல்லப்படுவார்கள்.

பின் வெள்ளையினத் தம்பதிகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்டோ அல்லது எல்லை முரே நதிக்கரையின் முகாம்களில் அடைக்கப்பட்டோ இறுதிக்காலம் வரை கழிக்க வேண்டும். நாங்கள்தான் ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் என்றாலும், எங்கள் வாழ்க்கை என்னவோ இப்படித்தான் இருந்தது.”

தொல்குடி குழந்தைகள் முகாம்

பட மூலாதாரம், Screengrab

ஒன்றல்ல இரண்டல்ல. இந்த நிலை 1905 முதல் 1970ஆம் ஆண்டு வரை நீடித்தது. அந்தத் தொல்குடி மக்களில் ஒருவரான ஜோன்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அளித்த வாக்குமூலம்தான் நீங்கள் மேலே படித்தது. சரி. இப்படி ஒரு நிலை இவர்களுக்கு இருக்கிறது என்றால், அரசுகள் ஏன் உதவவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழுவது நியாயம்தான். ஆனால், சட்டப்பூர்வமாக இதைச் செய்ததே அந்த நாட்டின் அப்போதைய அரசு தான்.

யார் இவர்கள்? ஏன் இந்த நிலை?

எல்லா நாடுகளிலும் இருக்கும் பிரிவினைகள் போல, ஆஸ்திரேலியாவில் கருப்பின -வெள்ளையின பிரிவினை இருந்தது. ஆனால், இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்களும் இருந்தனர். இவர்களை half Caste aborigines என்று பெயரிட்டு தனி இனமாகப் பாவித்து வந்தது காலனிய அரசாங்கம். அத்துடன், இந்தக் குழந்தைகளை வெள்ளையின குழந்தைகளாக மாற்ற ஒரு முடிவையும் அரசாங்கம் எடுத்தது.

அதன்படி இந்த குழந்தைகள் தங்கள் சொந்த இடத்தைவிட்டு பிரிக்கப்பட்டு வெள்ளை இன மக்களின் வீடுகளிலோ அல்லது மிஷனரிகளால் நடத்தப்படும் முகாம்களிலோ வளரவேண்டும். இதற்காக தொல்குடியினர் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் 1905ஆம் ஆண்டில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

தொல்குடியினர் பாதுகாப்பு சட்டம் 1905

பட மூலாதாரம், Screengrab

இந்தச் சட்டத்தின்படி, குழந்தைகளை தொல்குடிகளின் இடங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வருவதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு. இதற்காக அமைச்சர் ஒருவரின் தலைமையில் அந்தந்த பகுதிகளுக்கென தனி பாதுகாவலர்கள் நியமிக்கபப்டுவார்கள்.

அந்தப் பாதுகாவலர் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தொல்குடி குழந்தைகளை முகாம்களுக்கு அனுப்புவார். அனுப்ப மறுக்கும் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக குழந்தைகள் பறிக்கப்படுவர். இந்தப் பொறுப்பும் அந்தப் பாதுகாவலருடையதே.

முகாம்களில் என்ன நடக்கும்?

இந்த முகாம்களில், குழந்தைகளின் இன அடையாளம் முழுமையாக மறக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காக முதலில் குழந்தைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர்களுக்குப் புதிய ஆங்கில பெயர்கள் வைக்கப்பட்டன. அவர்களது வழிபாட்டு முறை மாற்றப்பட்டது. முகாம்களில் இருக்கும் தேவாலயங்களில் புதிதாக சொல்லித் தரப்பட்ட முறைப்படிதான் வழிபட வேண்டும்.

ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் கூட தங்கள் பழைய பெயர்களைச் சொல்லக்கூடாது. ஒருபோதும் தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என முகாம்களுக்கு பிரத்யேக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இவற்றில் எந்த ஒன்றை மீறினாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். இந்த முகாம்களில் இருந்து தப்பிச் செல்ல நேரிட்டாலும் மிகக் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்று 1977-ஆம் ஆண்டின் பிரிங்கிங் தெம் ஹோம் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முகாமுக்குச் செல்லாமல் வெள்ளையின மக்கள் வீடுகளில் வேலைக்குச் சென்ற குழந்தைகளின் நிலை இன்னும் கொடுமை. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்று இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 1997ஆம் ஆண்டின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

துணி துவைக்கும் பணிபுரியும் தொல்குடி குழந்தைகள்

பட மூலாதாரம், Screengrab

சரி இப்போது அந்தக் குட்டிக்கதையை தொடர்வோமா?

அப்படி ஒரு தொல்குடி இனத்திலிருந்து, கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒரு குழந்தை, வெள்ளையர் ஒருவரின் இல்லத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அந்த இல்லத்தின் எஜமான் இந்தச் சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துள்ளார்.

திடீரென்று அந்தச் சிறுமியின் அறைக்குள் நுழைந்த எஜமானர், வலுக்கட்டாயமாக அந்த சிறுமியின் எதிர்ப்பையும் மீறி அவரை அடிக்கடி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன் விளைவாக அந்தச் சிறுமி கருவுற்றபோது, இதை வெளியில் சொன்னால் இன்னும் அதிகமாக துன்பப்படுவாய் என்று மிரட்டப்பட்டுள்ளார் அந்தச் சிறுமி. எஜமானி அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்த சிறுமிக்கு ஏமாற்றம்.

இந்த மிரட்டலை எஜமானின் மனைவியே செய்ததால், பயத்துடன் சேர்ந்து நம்பிக்கையின்மையும் தொற்றிக்கொண்டது. விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பி ‘எலி மருந்தைச் சாப்பிட்டார். ஆனால், இறக்கவில்லை. மாறாக, உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதற்காகவும் அந்த சிறுமி தண்டிக்கப்பட்டார்.

இப்படியாக முகாம்களிலும் நிறுவனங்களிலும் பணியிடங்களிலும் என பல குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்பங்களை அனுபவித்தனர். இந்தக் காலகட்டத்தில் நடந்த பாலியல் கொடுமைகளில் 83% சம்பவங்கள் பதிவுகூட செய்யப்படவில்லை என்று 1997 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.

பாலியல் கொடுமைகளில் 83% பதிவுகூட செய்யப்படவில்லை

பட மூலாதாரம், Screengrab

இப்படித்தான் சட்டப்பூர்வமாகவே தொல்குடிகள் நடத்தப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்கு நாகரிகமான வாழ்க்கை முறையையும் கல்வியையும் தருவதாக உறுதியளித்தே இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்காகத்தான் இந்த அணுகுமுறையும் பின்பற்றப்பட்டது என்று சட்டம் குறிப்பிடுகிறது.

எங்களை மன்னித்து விடுங்கள்

1970ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்ட இந்த முறையால் ஏராளமான தொல்குடியின குழந்தைகள் தங்கள் குடும்பங்களை இழந்திருந்தனர். வெள்ளையினத்தவராகவும் சிந்திக்க முடியாமல், தொல்குடி இனமாகவும் வாழ முடியாமல் குழந்தைகள் அவதிப்பட்டனர்.

1967ஆம் ஆண்டு வரையிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கூட இவர்கள் சேர்க்கப்படவில்லை. அந்த ஆண்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பிறகுதான் ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்களும் சேர்க்கப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து முறையான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க 1995ஆம் ஆண்டு அரசு ஒரு குழுவை அமைத்தது. இரண்டு ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட நபர்களது அனுபவங்களைத் திரட்டி, சட்ட ஆய்வுகளை மேற்கொண்டு 1997ஆம் ஆண்டு அந்தக் குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.

Bringing them home என்று தலைப்பிடப்பட்ட 1977 அறிக்கை

பட மூலாதாரம், Screengrab

`அவர்களை வீட்டில் சேர்ப்போம் என்று பொருள்படும்விதமாக Bringing them home என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை 1977 மே மாதம் 26ஆம் தேதி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைக் குறிக்கும் விதமாகவே ஆஸ்திரேலிய அரசால் ஆண்டுதோறும் மன்னிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2008ஆம் ஆண்டு அரசின் சட்டங்களால் இந்த மக்கள் நடத்தப்பட்ட விதத்துக்காக, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் அப்போதைய பிரதமர் கெவின் ரட்.

அவர் பேசும்போது,

  • “கடந்த கால தவறுகளை சரிசெய்து, ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு புதிய பக்கத்துக்குச் செல்ல வேண்டிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
  • நமது சக ஆஸ்திரேலியர்களுக்கு, பெரும் துன்பத்தையும் இழப்பையும் தந்த அரசாங்க சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
  • குறிப்பாக பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவுக் குழந்தைகளை அவர்களது குடும்பங்களிடமிருந்து அகற்றியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
  • இந்த திருடப்பட்ட தலைமுறையினருக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
  • பெருமைமிக்க மக்களின் கலாச்சாரத்தின் மீது இழைக்கப்பட்ட அவமரியாதைக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்”

என்று நாடாளுமன்றத்தில் மன்னிப்பு உரையை ஆற்றினார் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்.

திருடப்பட்ட ஆஸ்திரேலிய இனத்தின் தலைமுறைகள்

பட மூலாதாரம், Getty Images

தன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனங்கண்டு அரசு சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டு விட்டது. ஆனால், அந்தக் குழந்தைகளால்தான் தங்கள் பெற்றோர் யாரென இனங்கான முடியவில்லை. பெற்றோர்களுக்கும் அதே நிலைதான். இன்றளவும் இந்தத் திருடப்பட்ட தலைமுறை குழந்தைகள் தங்கள் குடும்பங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பலருக்கும் இன்னும் கிடைத்தபாடில்லை.

விவரிக்க விவரிக்க இன்னும் பெருகும் வலி மிகுந்த சுவடுகளை வாழக்கையாகக் கொண்டிருக்கிறது இந்த தொலைக்கப்பட்ட தலைமுறைகளின் கதை. இவர்களுக்கு உரிய நிலமும் இடமும் மரியாதையும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தற்போது ஆஸ்திரேலிய அரசில் தொல்குடிகளுக்கான அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

உலகளவில் பூர்வகுடி மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து பிபிசி தமிழ் முன்பு வெளியிட்ட காணொளி இதோ உங்கள் பார்வைக்கு.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »