Press "Enter" to skip to content

மாயமான நேபாள விமானம்: மோசமான வானிலையால் திரும்பி வந்த தேடுதல் உலங்கூர்திகள்

பட மூலாதாரம், ANI

நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் இருந்தனர்.

காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, இந்த விமானம் நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:55 மணிக்கு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள் விமானத்தில் இருந்ததாக நேபாள அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் தவிர, மற்ற அனைவரும் நேபாள குடிமக்கள். விமானப் பணியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 22 பேர் இருந்தனர்.

ஜோம்சம் விமான நிலைய ஊழியர் புஷ்கல் ராஜ் ஷர்மா கூறுகையில், விமானம் காலை 9:55 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து, காலை 10.11 மணிக்கு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

“விமானம் தொடர்பை இழந்ததையடுத்து, தௌலகிரி பகுதியில் தேடுவதற்கு உலங்கூர்திகள் அனுப்பப்பட்டுள்ளன,” என்று புஷ்கல் ராஜ் ஷர்மா பிபிசியிடம் கூறினார்.

‘ஏதோ ஒன்று எரிந்தது’

nepal flight disappeared today

பட மூலாதாரம், EPA

நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேடுதலுக்கு அனுப்பப்பட்ட உலங்கூர்தி மோசமான வானிலை காரணமாக ஜோம்சம் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது மேலும் பல உலங்கூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை சீரானதும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தரை வழியிலும் விமானத்தைக் கண்டுபிடிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், அந்த விமானம் விழுந்த இடம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஏதோ ஒன்று எரிந்ததைப் பார்த்ததாக உள்ளூர் மக்கள் கூறும் இடத்தைச் சென்றடைய நாங்கள் முயன்று வருகிறோம். அந்த இடத்திற்குச் சென்றடைந்த பின்னரே, அலுவல்பூர்வமாகவும் சுயாதீனமாகவும் நாங்கள் கண்டறிவதை உறுதி செய்ய முடியும். தரை வழியாகவும் வான் வழியாகவும் நாங்கள் சளைக்காமல் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று ஞாயிற்றுக்கிழமை மாலை, நேபாள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »