Press "Enter" to skip to content

மரபு ரீதியான குறைபாட்டுடன் விந்து தானம் செய்த நபருக்கு பிறந்த 15 குழந்தைகள்

  • வில் ஜெஃபார்ட்
  • பிபிசி செய்திகள்

பட மூலாதாரம், FACEBOOK

இங்கிலாந்தில் மரபியல் ரீதியான குறைபாடு கொண்ட நபர் ஒருவர் தனது விந்தணுவை தானம் செய்து, அதன்மூலம் 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும், தான் விந்து தானம் செய்வதாக அந்நபர் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து இவ்வாறு செய்துள்ளார்.

ஜேம்ஸ் மேக்டூகல் என்ற அந்த நபருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் மரபியல் ரீதியிலான குறைபாடு உள்ளது.

இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அவருடைய விந்தணு மூலம் பிறந்த மூன்று குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க அனுமதி மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருடைய விந்தணுவைப் பயன்படுத்த உள்ள மற்றவர்களை பாதுகாக்கும் வகையில் ஜேம்ஸ் மேக்டூகலின் அடையாளத்தை வெளிப்படுத்த நீதிபதி அனுமதித்தார்.

‘சிக்கலான மனிதர்’

37 வயதான மேக்டூகல் தன் விந்தணு மூலம் பிறந்த 4 குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க அனுமதிகோரி டெர்பி க்ரௌன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் மூலம்தான் இது தெரியவந்துள்ளது.

அவருக்கு கற்றல் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுகளை உண்டாக்கும் ‘ஃப்ரெஜைல் எக்ஸ் சிண்ட்ரோம்’ (Fragile X syndorme) என்கிற குணப்படுத்த முடியாத குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை முன்பே தெரிந்திருந்தும் தான் லெஸ்பியன் ஜோடிகளுக்கு விந்தணு தானம் செய்வதாக சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியுள்ளார் அவர்.

விந்தணு தானம்

பட மூலாதாரம், PA Media

இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட எழுத்துபூர்வ தீர்ப்பில் தலைமை நீதிபதி லீவென், ஜேம்ஸ் மேக்டூகல் “பொறுப்பின்மையுடன்” நடந்துகொண்டுள்ளதாகவும், குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களை “தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்திக்கொண்டதாகவும்” தெரிவித்துள்ளார்.

மேலும், கற்றல் குறைபாடுகள் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை “ஒரு சிக்கலான மனிதர்” என நீதிபதி தெரிவித்தார்.

தன் விந்தணு மூலம் பிறந்த நான்கு குழந்தைகளை காண்பதற்கு அனுமதி கோரி மேக்டூகல் இந்த மனுவை தாக்கல் செய்தார். மூன்று தாய்மார்களால் அந்த நான்கு குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

(தாய் மற்றும் குழந்தைகளின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க அவர்களின் பெயர்கள் ஆங்கில எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.)

‘ஆர்’ என பெயரிடப்பட்ட முதல் குழந்தையை அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளார் அவர். விந்து தானம் மூலம் பிறக்கும் குழந்தையுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்பும் அவர் குழந்தையை சந்தித்து வந்துள்ளார்.

மூன்று பக்கங்கள் அடங்கிய அந்த ஆவணம், “படிப்பதற்கு ஒரு வழக்குரைஞருக்குக் கூட கடினமாக” இருக்கும் அளவுக்கு மிகவும் சட்டரீதியான மொழியில் இருப்பதாக நீதிபதி லீவென் தெரிவித்துள்ளார்.

அந்த ஆவணத்தில் தனக்கு ‘ஃப்ரெஜைல் எக்ஸ் சிண்ட்ரோம்’ குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அதற்கு என்ன அர்த்தம் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை.

அந்த ஆவணத்தைப் படிக்க சிரமப்படும் ‘எஸ்.டபிள்யூ’ என்ற 25 வயதான தாய் ஒருவர், அந்த ஒப்பந்தத்தை தான் முழுவதும் பார்க்கவில்லை என தெரிவித்தார்.

‘தன் கட்டுப்பாட்டை இழப்பவர்’

அக்குழந்தை பிறந்த இரு வாரங்களுக்குப் பின், அந்த குழந்தையை பார்க்க விரும்புகிறீர்களா என, மேக்டூகலிடம் கேட்டுள்ளனர். அக்குழந்தையின் தாய் எஸ்.டபிள்யூ தன் குழந்தையை மேக்டூகல் பார்ப்பதை குறைக்க முயற்சி செய்தாலும், குழந்தை ‘ஆர்’-ஐ தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளார் மேக்டூகல்.

விந்தணு தானம்

ஜூன், 2020 இல் மேக்டூகல் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து நீதிபதி லீவென் கூறுகையில், “தான் அடைய விரும்பும் ஒன்று தனக்குக் கிடைக்காதபோது மேக்டூகல் தன் கட்டுப்பாட்டை இழந்து விரக்தியடையும் குணம் கொண்டவராக உள்ளார்” என தெரிவித்தார்.

டிசம்பர் 2020இல் எஸ்.டபிள்யூ-இன் பார்ட்னரை 77 முறை போன் மூலம் அழைத்து துன்புறுத்தியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேக்டூகலின் விந்தணுவை பயன்படுத்தி எஸ்.டபிள்யூ இரண்டாவதாக ‘பி’ என்ற குழந்தையை பெற்றதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த முறை மேக்டூகல் குழந்தையை பார்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் எஸ்.டபிள்யூ கையெழுத்திடவில்லை, ஆனால், மேக்டூவெல் அந்த இரண்டு வயது குழந்தையை காண எஸ்.டபிள்யூ விரும்பவில்லை என்பது “முற்றிலும் தெளிவாக” உள்ளது என லீவென் தெரிவித்தார்.

எஸ்.டபிள்யூ-இன் ஆதாரங்கள் குறித்து கவலை தெரிவித்த லீவென், மேக்டூகலிடமிருந்து சுமார் 7,000 பவுண்ட் பெறுவது பற்றி அவர் பொய் கூறியதாக லீவென் தெரிவித்தார்.

எனினும், எஸ்.டபிள்யூ நலன் மற்றும் குழந்தைகள் ஆர் மற்றும் பி-இன் நலனை கருத்தில்கொண்டு மேக்டூகலின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

மூன்று வயதான குழந்தை ஆர் “இன்னும் பேச தொடங்கவில்லை. அவர் செயற்பாட்டு சவால்கள் கொண்டவராக உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

இஜி (EG) என்ற இரண்டாவது தாய், மேக்டூகலை சமாளிப்பதில் “அதிக திறமையுடையவராக” உள்ளார்.

விந்தணுவை தானம் செய்யும் நபர் குழந்தை ‘என்’ உடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்க தான் விரும்பவில்லை என்பதில் தெளிவாக இருந்துள்ளார். அவரும் மேக்டூகலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

நான்காவது குழந்தை தொடர்பாக ஏற்கெனவே உள்ள ஒப்பந்த விதிகளில் மாற்றங்களை கோரியும் மேக்டூகல் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

‘கே’ என அறியப்படும் அந்த குழந்தையுடன் மேக்டூகல் தொடர்பில் இருந்தார், அவரை அக்குழந்தை தந்தையாக அடையாளம் காணவும் செய்துள்ளது.

இந்த வழக்கு வேறொரு தேதிக்கு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது.

பொது நலனுக்காக…

இந்த உத்தரவில், வழக்கத்திற்கு மாறாக மேக்டூகல் அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த ஜஸ்டிஸ் லீவென் உத்தரவிட்டார்.

மேக்டூகல் விந்தணு தானம் செய்வதை நிறுத்துவார் என்பதில் தனக்கு “எந்த நம்பிக்கையும் இல்லை” எனவும், அவரின் விந்தணுவால் வருங்காலத்தில் தாயாக உள்ளோரிடம் தன் நிலை குறித்து முழுமையாக விவரிப்பார் என்ற நம்பிக்கையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே “மேக்டூகல் எடுத்த முடிவுகளின் விளைவாக” பொதுநலன் கருதி, அவருடைய பெயரை வெளிப்படுத்த நீதிபதி ஒப்புக்கொண்டார்.

“பெண்கள் அவரை இணையத்தில் பார்த்து இந்த தீர்ப்பைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர் பெயர் வெளியிடப்படுவதில் ஒரு குறிப்பிட்ட நன்மை உள்ளது” என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »