Press "Enter" to skip to content

அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கை: “இந்தியாவில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு”

பட மூலாதாரம், Getty Images

சுமார் 200 நாடுகளில் மத சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆவணப்படுத்தும் சர்வதேச மத சுதந்திர அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா.

இது 2021ஆம் ஆண்டுகான அறிக்கை.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இதனை வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது இந்தியாவில் மதம் சார்ந்த வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிளிங்கன் உரையிலிருந்து சில முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • தைவான், மொராக்கோ, இராக் போன்ற நாடுகள் மத சுதந்திரத்தை காப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக தைவானில் நிறுவனங்கள் பிரார்த்தனைக்காக ஒருநாள் விடுமுறை வழங்கவில்லை என்றால் அதுகுறித்து புகார் அளிப்பதை எளிதாக்கியது, இராக் தலைவர்கள் போப் ஃபிரான்ஸிசை வரவேற்றது போன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டார்.
  • அதேபோல பல அரசுகள் தங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கத் தவறுகின்றன, பல நாடுகள் தெய்வ நிந்தனை சட்டங்களை பயன்படுத்தி மதச் சிறுபான்மை மக்களை ஒடுக்குகின்றன.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவிக்கிடக்கும் யூத வெறுப்பு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சிந்தனையை ஒழிக்க அரசுகள் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • செளதி அரேபியாவில் மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் போன்ற முயற்சிகள் நடைபெற்றாலும், அங்கு பொதுவெளியில் இஸ்லாம் தவிர பிற மதங்களை கடைப்பிடிப்பது சட்டவிரோதமாக உள்ளது. அதே போல அரசு தொடர்ந்து மத சிறுபான்மை மக்களை ஒதுக்கி வைக்கிறது.
  • சீனா வீகர் இன மக்களுக்கு எதிரான இனப் படுகொலையை தொடர்கிறது. அவர்களையும் பிற சிறுபான்மை குழுக்களையும் தொடர்ந்து ஒடுக்கி வருகிறது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 10 லட்சம் வீகர், கசக்ஸ், கிரிக்ஸ் உள்ளிட்ட இனங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  • ஆப்கானிஸ்தானில், தாலிபன்களின் ஆட்சியில் மதச் சுதந்திரம் பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக அவர்கள் பெண்களின் கல்விக்கு தடை விதிக்கின்றனர், பணிகளுக்கு செல்ல அனுமதியில்லை, பிற பொதுப் பணிகளில் ஈடுபட அனுமதியில்லை. இந்த கட்டுப்பாடுகளை மதத்தின் பெயரில் அவர்கள் விதிக்கிறார்கள்.
  • மறுபுறம் ஐஎஸ்ஐஎஸ் – கே, ஷியா ஹசராஸ் போன்ற அமைப்புகள் மத சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.
  • பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டில் தெய்வநிந்தனை குற்றம்சாட்டப்பட்ட 16 நபர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
  • மியான்மர், எரித்ரியா, செளதி அரேபியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர நாட்டின் பிறகு பகுதிகளிலும் எவ்வாறு மதச்சுதந்திரமும், மதச் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் அச்சுறுத்தலில் உள்ளன என்பதை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.
  • எடுத்துக்காட்டாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, பலதரப்பட்ட மத நம்பிக்கைகள் கொண்ட இந்தியாவில் மக்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் வன்முறை அதிகரிப்பதை காணமுடிகிறது.
  • வியட்நாமில் பதியப்படாத மதங்களை சேர்ந்தவர்களை அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர். நைஜீரியாவில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் மக்களை அவமதிப்பு மற்றும் தெய்வநிந்தனை சட்டங்களை கொண்டு அரசு தண்டிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »