Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தான் தாலிபன் ஆட்சி: தங்கள் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்தியாவின் உதவியை நாடுகிறதா?

  • மிர்சா ஏபி பெய்க்
  • பிபிசி உருது.காம், டெல்லி

பட மூலாதாரம், RTA

தாலிபன் பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப், இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக்கொள்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார். ஆயினும் இரு நாட்டு அரசுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை முதலில் மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொலைக்காட்சியான சிஎன்என் நியூஸ்-18-க்கு பேட்டியளித்த அவர், “இரு அரசுகளுக்கும் இடையேயான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்பினால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சி அளிக்க தாலிபன்கள் தயாராக உள்ளனர்” என்றார்.

காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், புதுதில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் தூதரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் முல்லா யாகூப் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா தனது தூதரக ஊழியர்களை ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் அனுப்பினால், எல்லாவித பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வழங்க தாலிபன்கள் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். முன்னதாக, தாலிபன் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீனும் தோஹாவில் இதைத் தெரிவித்திருந்தார்.

இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுடனும் தாலிபன் அரசு நல்லுறவை விரும்புகிறது என்று முல்லா யாகூப், சிஎன்என் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் மீண்டும் வலியுறுத்தினார்.

தாலிபன் நிறுவனரும் தலைவருமான முல்லா ஒமரின் மகனும் தாலிபன் பாதுகாப்பு அமைச்சருமான முல்லா யாகூப்பின் இந்த அறிக்கை குறித்து பிபிசி மானிட்டரிங், ஆப்கான் விவகார நிபுணர் தாரிக் அத்தாவிடம் பேசியது. தாலிபன்கள் மத்தியிலும், ஆப்கானிஸ்தானிலும் விரக்தி நிலவுவதாகவும், பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசை இதுவரை எந்த நாடும் முறையாக ஏற்கவில்லை என்பதால், உலகம் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று தாலிபன்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை ஐக்கிய நாடுகள் சபையால் கூட தாலிபன் அங்கீகரிக்கப்படாததால், பாகிஸ்தான் உட்பட எல்லா முஸ்லிம் நாடுகளுக்கும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ஏற்கெனவே பயிற்சி அளித்துள்ள இந்தியா

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்க ஏதுவாக தாலிபன் அரசை அங்கீகரிக்குமாறு இஸ்லாமிய நாடுகளின் அமைப்புக்கு (OIC), தாலிபன் ஆதரவு பார்வையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மனிதாபிமான உதவியை நம்பியிருக்கும் ஒரு நாடு எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்று அவர்கள் வினவுகின்றனர்.

“பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தானால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தாலிபன்களுக்கு முன்பே தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையான பயிற்சி என்பது வேறு மட்டத்திலானது. தாலிபன்கள் இதைச்சொல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது,” என்று தாரிக் அத்தா குறிப்பிட்டார்.

தாலிபன் வெளியுறவு அமைச்சர் மௌல்வி அமீர் கான் முத்தாகியுடன் இந்தியாவின் இணைச் செயலர் ஜேபி சிங்

பட மூலாதாரம், MOFA

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் மக்களிடையே இருவேறு பிரிவுகள் இருப்பதாக தாரிக் அத்தா கூறினார். ஒன்று பாகிஸ்தானுக்கு ஆதரவானது, மற்றொன்று இந்தியாவுக்கு ஆதரவானது.

தாலிபன்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு முதன்முறையாக இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வ பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட உதவிகளை மறுபரிசீலனை செய்வதற்காக இந்தக் குழு சென்றுள்ளதாகத் தெரிகிறது. இது தவிர இந்தியா எப்போதுமே ஆப்கானிஸ்தான் மீது ஆர்வம் காட்டி வருகிறது.

முன்னதாக, இந்தியா தோஹாவில் தாலிபன் தலைவர்களை சந்தித்தது. சமீபத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பே சென்றிருந்தார். ஆப்கானிஸ்தானுடன் இந்தியா சிறப்பு உறவைக் கொண்டுள்ளது என்றும் அது தொடரும் என்றும் அவர் கூறினார்.

பிராந்திய பாதுகாப்பு தொடர்பான கூட்டம் துஷான்பேயில் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா, இரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு சபை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

“ஆப்கானிஸ்தான் மக்களுடன் பல நூற்றாண்டுகள் பழமையான சிறப்பு உறவு, இந்தியாவின் அணுகுமுறையை வழிநடத்தும். அதை எதுவும் மாற்ற முடியாது” என்று தோவல் கூறியதாக, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

இது குறித்துக் கருத்து தெரிவித்த தாரிக் அத்தா, வரலாற்று ரீதியாக இந்தியா ஆப்கானிஸ்தானுடன் நல்ல மற்றும் நெருக்கமான உறவை கொண்டிருப்பதாகவும், தாலிபன்களின் முதல் சுற்று ஆட்சிக்குப்பிறகு இந்தியா அங்கு நிறைய முதலீடு செய்துள்ளதாகவும் கூறினார். இந்தியா பல கட்டுமானத் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. ஆயினும் பல திட்டங்கள் இன்னும் முழுமையடையாமல் உள்ளன. இந்தியா தனது திட்டங்களை மீண்டும் தொடங்கினால், பல ஆப்கானியர்கள் அதன்மூலம் நிதி உதவி பெறுவார்கள்.

கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு, சிஎன்என் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் முல்லா யாகூப் நன்றி தெரிவித்தார்.

இந்திய இணைச் செயலர் ஜே.பி.சிங், காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையை சுற்றிப்பார்த்தார்.

பட மூலாதாரம், ANI

இந்தியா இதுவரை 20,000 மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம் டோஸ் கோவிட் தடுப்பூசி மற்றும் குளிர்கால ஆடைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஜூன் 2 செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை, உலக சுகாதார அமைப்பு WHO மற்றும் உலக உணவுத்திட்டம் WFP ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தியா தனது 2022-23 வரவு செலவுத் திட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் தெரிவிக்கிறது.

2002 முதல் 2005 வரை காபூலில் பணியாற்றிய ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதர் விவேக் கட்ஜு, இந்திய குழுவின் ஆப்கன் பயணத்தை, “புத்திசாலித்தனமானது” என்று விவரித்துள்ளார். இது காபூலில் இந்தியாவின் நிரந்தர இருப்புக்கு வழிவகுக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியபிறகு, உலகின் பல நாடுகளைப் போலவே இந்தியாவும் காபூலில் உள்ள தனது தூதரகத்தை மூடிவிட்டு தாலிபன்களுடன் தூதாண்மை உறவுகளை முறித்துக்கொண்டது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நாங்கள் வரவில்லை’

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான முத்தரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்தும் முல்லா யாகூப் தனது நேர்காணலில், சுருக்கமாகப் பேசினார்.

பாகிஸ்தானோ, இந்தியாவோ ஒன்றை ஒன்று எதிர்க்க, ஆப்கானிஸ்தானின் நிலத்தை பயன்படுத்துவதை தாலிபன் அரசு அனுமதிக்காது என்றும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தங்கள் வேறுபாடுகளை தீர்க்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

தங்களுக்கு அல்-கய்தாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளும், ஐஎஸ் அமைப்பும் நசுக்கப்படும் என்றும் தாலிபன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் டுராண்ட் லைன் குறித்து வினவப்பட்டபோது, பாகிஸ்தானுடன் தங்களுக்கு நல்ல உறவு இருப்பதாகவும், சில சமயங்களில் டுராண்ட் லைனில் ஏதேனும் சம்பவம் நடந்தால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசுக்கு பிரச்னைகளை உருவாக்கவேண்டாம் என்றும் தங்களுடன் தூதாண்மை உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறும், முல்லா யாகூப் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இருப்பினும் தாலிபன்கள் மீது பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் தீவிரவாத குழுக்களின் செல்வாக்கு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பு தனக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படக்கூடாது என்று இந்தியா கருதுகிறது.

ஆனால், ஆப்கானிஸ்தான் மண்ணை வேறு நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த, உலகின் எந்த ஒரு நாடு அல்லது குழுவையும் அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபன்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், MOFA

இந்தியாவின் உயர்மட்ட அதிகாரி ஜே.பி. சிங் தலைமையிலான பிரதிநிதிக்குழு காபூலில் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியை சந்திக்கச்சென்ற நேரத்தில், தாலிபன் பாதுகாப்பு அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

“முன்பைப் போலவே ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம், தங்களின் உதவி தொடரும் என்று இந்திய அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக,” தாலிபன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

“ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்க வேண்டும். தூதாண்மை உறவுகளை மீட்டெடுக்க வேண்டும். ஆப்கானியர்களுக்கு குறிப்பாக ஆப்கானிஸ்தான் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தூதரக சேவைகளை வழங்க வேண்டும்” என்று வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள போராளிகள் அரசை நேரடியாக சந்திக்கும் தயக்கத்தை இந்தியா இறுதியாக கைவிட்டுள்ளதாக ‘டெக்கான் ஹெரால்டு’ நாளிதழ் எழுதியுள்ளது.

“தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இருப்பைக்குறைக்க பாகிஸ்தான் உளவு நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. இருப்பினும், இந்திய பிரதிநிதிக்குழுவின் ஆப்கானிஸ்தான் பயணம் காரணமாக இந்தத்திட்டம் கடுமையான பின்னடைவை சந்தித்தது, “என்று மலையாள மொழியின் முன்னணி செய்தித்தாள் கேரளா கெளமுடி கூறுகிறது.

முன்னதாக, தோஹாவில் உள்ள தாலிபன் அரசியல் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தி பிரிண்ட் நியூஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தேசிய மற்றும் பரஸ்பர நலன்களை கருத்தில் கொண்டு, காபூலில் உள்ள தற்போதைய தாலிபன் அரசுடன் இந்தியா உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அஷ்ரப் கனியின் முன்னாள் அரசுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »