Press "Enter" to skip to content

நுபுர் ஷர்மா விவகாரம்: அரபு நாடுகளில் எழும் எதிர்ப்பு; இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம், AJAY AGGARWAL/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

ஞாயிற்றுக்கிழமை கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை வரவழைத்து, முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கத்தார் வெளியுறவு அமைச்சகம், தோஹாவில் உள்ள இந்திய தூதர் தீபக் மித்தலுக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியது.

கத்தார் வெளியுறவு அமைச்சர் சுல்தான் பின் சாத் அல்-முரைக்கி, இது தொடர்பாக கத்தாரின் அதிகாரப்பூர்வ பதிலை இந்திய தூதரிடம் கையளித்தார்.

அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவை ஆளும் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது, இதில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவர்களை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்தக் கருத்துக்களுக்கு இந்திய அரசு சார்பில் பகிரங்க மன்னிப்பு மற்றும் கண்டனத்தை கத்தார் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தற்போது கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, அவர் அங்கு கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல்-தானியை சந்தித்தார்.

இதுகுறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”இழிவான கருத்துகளை வெளியிடுவோர் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

முகமது நபி குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கத்தார் வெளிப்படுத்திய கோபத்திற்கு தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது.

கத்தார் மற்றும் குவைத்தை அடுத்து, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) இந்தப் பிரச்னைக்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு, இந்தியாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய ஒருவரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறியது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்த ஓ.ஐ.சி தனது ட்வீட்டில் ஹிஜாப் தடை மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற செய்திகளையும் குறிப்பிட்டுள்ளது.

முகமது நபிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தவர்கள் மீதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.ஐ.சி கோரியுள்ளது.

கத்தாரின் இந்தியத் தூதரகத்தின் கருத்து

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “இரு நாட்டுத் தூதர்கள் இடையேயான சந்திப்பில், மத ஆளுமை குறித்து இந்தியாவை சேர்ந்தவர்கள் பதிவிட்ட ஆட்சேபனைக்குரிய ட்வீட்கள் குறித்துக் கவலை தெரிவித்தனர்.” என்று தெரிவித்தார்.

நுபுர்

பட மூலாதாரம், TWITTER @NUPURSHARMABJP

இந்த ட்வீட்கள் இந்திய அரசின் கருத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்று இந்திய தூதர் கூறினார். இவை ‘விஷமத்தனமானவை’ என்று அவர் குறிப்பிட்டார்.

“நமது கலாசார, பாரம்பரியம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான மரபுகளுக்கு ஏற்ப, இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் தனது உயர்ந்த மரியாதையை அளிக்கிறது.

தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு, எந்த ஒரு மதத்தவரையும் இழிவுபடுத்துவதைக் கண்டித்தும், அனைத்து மதத்தினரின் மரியாதையை வலியுறுத்தியும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா-கத்தார் உறவுகளுக்கு எதிராகத் தன்னல நோக்கம் கொண்டவர்கள், மக்களைத் தூண்டிவிடுவதற்காக இந்தக் கீழ்த்தரமான கருத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

நமது இருதரப்பு உறவின் வலிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் இத்தகைய தவறான செயல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைத்தின் எதிர்வினை

இதற்கிடையில், குவைத் வெளியுறவு அமைச்சகமும் நூபுர் சர்மா விவகாரம் தொடர்பாக இந்திய தூதரை ஞாயிற்றுக்கிழமை வரவழைத்து அதிகாரப்பூர்வமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

முகமது நபிக்கு எதிராக இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறிய கருத்துக்கு குவைத் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதே அறிக்கையில், நுபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்த பாஜகவின் முடிவும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

குவைத்தின் அதிருப்திக்கும் இந்தியா பதிலளித்து, தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியதையே கூறியது.

மறுபுறம், முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக அதன் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் டெல்லி பாஜக தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

நவீன் குமார் ஜிண்டாலைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நூபுர் ஷர்மா கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கருத்துக்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, பாஜக ஒரு அறிக்கையை வெளியிட்டது. பாஜக, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்தவொரு மத ஆளுமைகளை அவமதிப்பதையும் கடுமையாக விமர்சிப்பதாகவும் கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக அரபு நாடுகளின் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

பாஜக-வின் விளக்கம்

நூபுர் ஷர்மாவின் இந்த அறிக்கையால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து, பாஜக விளக்கம் அளித்துள்ளது. பாஜக அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் எந்த மத ஆளுமையை அவமதித்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

முகமது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து, அக்கட்சியின் பொதுச் செயலர் அருண் சிங் கூறுகையில், எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் தனது கட்சி முற்றிலும் எதிரானது என்று தெளிவு படுத்தினார்.

ஆனால், நுபுர் ஷர்மாவின் அறிக்கையால் எழுந்துள்ள சர்ச்சையை பாஜக நேரடியாகக் குறிப்பிடவில்லை.

நூபுர் ஷர்மாவின் இந்தக் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அருண் சிங், “இந்தியாவின் வரலாற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல மதங்கள் வளர்ந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு மதத்தையும் மதிக்கிறது. இந்திய அரசியலமைப்பு குடிமக்களுக்கு எந்த மதத்தையும் பின்பற்றவும் மதிக்கவும் சுதந்திரம் அளிக்கிறது என்று குறிப்பிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

சவுதி அரேபியாவில் மக்களின் குரல்

நூபுர் ஷர்மாவின் அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள முகமது ஜுபைர், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், ஓமன், சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இது சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

முகமது மக்கி என்ற ட்விட்டர் பயனாளர், “முஹம்மது நபிக்கு மற்றொரு அவமானம், அல்லாஹ் அவருக்கு அமைதி அளிக்கட்டும். பலரிடமிருந்து கூர்மையான எதிர்வினை இருந்தால் வேறு யாரும் துணிந்திருக்க மாட்டார்கள்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்வினைகள் போதுமானதாக இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், “சவுதி அரேபியாவில் சில மணிநேரங்களாக பாஜக செய்தித் தொடர்பாளர்களின் ட்வீட்கள் மற்றும் அறிக்கைகள் முதன்மையான ட்ரெண்ட் ஆகியுள்ளன. இந்திய முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான குற்றங்களை உலகம் கவனிக்க வேண்டும்” என்று ரெஹான் என்பவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

மற்றொரு பயனர் ஜஹான்ஸெப், “மோடியின் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பும் வன்முறையும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இப்போது அவரது அரசாங்கம் செய்த நிந்தனைக்கு வலுவான எதிர்வினை உள்ளது. முஸ்லிம் உலகம் உடனடியாக அதைப் புறக்கணிக்க வேண்டும்.” என்று எழுதியுள்ளார்.

தன்னை ஒரு மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் சஃபியுல்லா சித்திக், “அல்லாஹ்வின் அன்பான, மரியாதைக்குரிய, கடைசி தீர்க்கதரிசியை அவமதிக்கும் அனைவரையும் நிரந்தரமாக அழிக்க அரேபியாவின் முஸ்லிம்களுக்கு அதிகாரம் உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

அரபு நாடுகளில் எதிர்ப்பு தொடங்கியது எப்படி?

நூபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோருக்கு எதிரான பிரசாரம், அரபு நாடுகளில் ஓமன் முஃப்தி ஷேக் அகமது பின் ஹமத் அல் கலீலியால் தொடங்கப்பட்டது.

இந்தியாவின் ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இஸ்லாமின் தூதருக்கு எதிராக இழிவான மற்றும் ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று அவர் ட்வீட் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அல் கலீலியின் அறிக்கைக்குப் பிறகுதான், இந்த விவகாரம் தொடர்பாக அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கியது, இதற்கு பாஜக ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தது.

யார் இந்த நூபுர் சர்மா?

நுபுர் ஷர்மா

பட மூலாதாரம், TWITTER@NUPURSHARMABJP

நூபுர் சர்மா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஆவார். 2015 சட்டமன்றத் தேர்தலில், அவர் டெல்லியின் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அவர் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நுபுர் டெல்லி பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

அவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் நன்கு அறியப்பட்ட முகமும் ஆவார்.

நூபுர் ஷர்மா 23 ஏப்ரல் 1985 இல் பிறந்தார். தில்லி மதுரா சாலையில் அமைந்துள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பொருளாதார ஆனர்ஸ் பட்டதாரியான அவர், 2010 ஆம் ஆண்டு டெல்லியில் எல்எல்பி பட்டப்படிப்பை முடித்தார்.

நுபுர் ஷர்மா லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் எல்எல்எம் முடித்துள்ளார்.

அவர் ஒரு இராஜதந்திர மற்றும் வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நூபுர் ஷர்மா அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்

நூபுர் ஷர்மா கல்லூரி நாட்களில் இருந்தே அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் சீட்டில் போட்டியிட்டு DUSU (தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம்) தலைவர் ஆனார். அதன் பிறகு தேசிய அளவிலான அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அரசியலை தொடங்கிய அவர், தற்போது வரை பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »