Press "Enter" to skip to content

இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடை – உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

  • ஸ்ருதி மேனன்
  • பிபிசி உண்மையறியும் பிரிவு

பட மூலாதாரம், EPA

யுக்ரேன் போரை அடுத்து உலக உணவு விநியோக நிலைமை மோசமாகலாம் என்ற விமர்சனத்திற்குப் பிறகும், கோதுமை ஏற்றுமதியைத் தடை செய்யும் முடிவை இந்தியா நியாயப்படுத்துகிறது.

“எல்லோரும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால்… அது நெருக்கடியை மோசமாக்கும்” என்று மே மாதம் தடை அறிவிக்கப்பட்ட பிறகு ஜெர்மன் உணவு மற்றும் விவசாய அமைச்சர் செம் ஓஸ்டெமிர் கூறினார்.

ஆனால், இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ஏற்றுமதித் தடை உலகச் சந்தைகளைப் பாதிக்காது என்று கூறுகிறார். ஏனெனில், இந்தியா ஒரு பெரிய கோதுமை ஏற்றுமதியாளர் அல்ல என்கிறார் அவர்.

அப்படியென்றால் இந்தியாவின் நடவடிக்கையின் தாக்கம் என்ன?

உலகளாவிய கோதுமை விலை உயர்வு

இந்தியாவின் தடை மே 13 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு வெப்பமான வானிலை கோதுமை விளைச்சலைப் பாதித்தது. உள்ளூர் விலைகள் உயர்ந்தன.

இந்தியா ஒரு பெரிய கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடாக இல்லாவிட்டாலும், இந்த நடவடிக்கை உலக சந்தைகளில் அதிர்வை ஏற்படுத்தியது. சிகாகோ பெஞ்ச்மார்க் கோதுமைக் குறியீடு கிட்டத்தட்ட 6% உயர்ந்தது.

சில முக்கிய வகை கோதுமைகளின் விலைகள் பல நாட்களாக உயர்ந்து, மே 17 முதல் 18 வரை உச்சத்தை எட்டின.

வரைபடம்

யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு மார்ச் மற்றும் ஏப்ரல் முழுவதும் கோதுமை விலைகள் மற்ற உணவுப் பொருட்களின் விலைகளைப் போலவே உயர்ந்தன.

உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான யுக்ரேனில் இருந்து மில்லியன் கணக்கான டன் கோதுமை போரினால் வெளியேற முடியாமல் போனது.

“கருங்கடல் பகுதியில் இருந்து ஏற்றுமதி சரிந்த பிறகு, உலகளவில் கோதுமை வாங்குவோர் இந்தியாவையே நம்பியிருந்தனர்” என்று கூறுகிறார் க்ரோ இன்டெலிஜென்ஸ் என்ற விவசாய தரவு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கெல்லி கோஹரி.

இந்தியாவின் தடையால் பாதிக்கப்பட்டது யார்?

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளராக உள்ளது. ஆனால், உலகளாவிய கோதுமை ஏற்றுமதி என்று வரும்போது 1% க்கும் குறைவான பங்கையே வகிக்கிறது. ஏனென்றால், ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு வழங்குவதற்காக இந்தியா நிறைய சேமித்து வைத்திருக்கிறது.

ஆனால், தடையை அறிவிப்பதற்கு சற்று முன்பு, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டிருந்தது. கடந்த ஆண்டு வெறும் 2 மில்லியன் டன் கோதுமையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 10 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய முடிவெடுத்திருந்தது.

இந்தியா கோதுமை ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தது

பட மூலாதாரம், Getty Images

தடை விதிக்கப்பட்ட பிறகும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் புதிய சந்தைகளுக்கு இந்தியா கோதுமை வழங்கி வருகிறது. பல நாடுகள் ஏற்றுமதியைத் தொடர இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கின்றன.

சில நாடுகள் தொடர்ந்து கோதுமை ஏற்றுமதியைப் பெறும் என்றும், “அண்டை நாடுகளுக்குத் தேவைப்படும் நேரத்தில் தொடர்ந்து உதவி செய்வோம்” என்றும் இந்தியா கூறுகிறது.

இந்தியாவின் முக்கிய கோதுமை ஏற்றுமதி சந்தைகள் வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

2019-20 ஆம் ஆண்டில், இலங்கையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்தியாவில் இருந்து 50% க்கும் அதிகமான கோதுமையை இறக்குமதி செய்துள்ளதாக விரிவான பொருளாதார கண்காணிப்பு அமைப்பு (OEC) தெரிவித்துள்ளது. மேலும், நேபாளம் 90% க்கும் அதிகமாக இறக்குமதி செய்துள்ளாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

தற்போதுள்ள ஒப்பந்தங்களின் கீழ் இந்த நாடுகள் தொடர்ந்து இந்திய கோதுமையை பெறுமா அல்லது புதிய ஒப்பந்தங்கள் தேவைப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், இந்திய கோதுமையை கொள்முதல் செய்வது தொடரும் என்று எகிப்து கூறுகிறது. உலக அளவில் கோதுமையை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இதுவும் ஒன்று.

சர்வதேச நாணய நிதியம், ஏற்றுமதி தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. யுக்ரேன் போரினால் ஏற்பட்டிருக்கும் கோதுமை விநியோக நெருக்கடியைத் தணிக்க உதவுவதில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

மோசமான வானிலை மற்றும் உர விலை

யுக்ரேனில் நடந்த போரைத் தவிர, சில முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடுகளில் வானிலையும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் உள்ளிட்டவை வேறு சில பெரிய உற்பத்தி நாடுகளில் [அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ்] கோதுமை உற்பத்தியை பாதிக்கின்றன” என்கிறார் க்ரோ இண்டலிஜென்ஸின் கெல்லி கோஹரி.

சீனா

பட மூலாதாரம், Getty Images

2022-23 காலகட்டத்திற்கான உலகளாவிய கோதுமை உற்பத்தி நான்கு ஆண்டுகளில் மிகக் குறைவாக இருக்கும் என்றும், உலகளாவிய கோதுமை இருப்பு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மிகக் குறைவாக இருக்கும் என்று அமெரிக்க அரசின் அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டில் உலகளாவிய உரங்களின் விலைகள் மும்மடங்கு அதிகரித்ததால், இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் “கணிசமான” சரிவை ஏற்படுத்தியுள்ளது என்று க்ரோ இன்டெலிஜென்ஸ் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளரான சீனா, 2021 இல் அதிக மழைப்பொழிவு காரணமாக அதன் குளிர்கால கோதுமை அறுவடை “வரலாற்றில் மிக மோசமானதாக” இருக்கலாம் என்று கூறியுள்ளது.

அறுவடையின் உண்மையான நிலை பற்றியும், மோசமாக பாதிக்கப்படுமா என்பது குறித்தும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

அப்படி நடந்தால், சீனா தனது கோதுமை சேமிப்பை உறுதி செய்வதற்காக உலக சந்தைகளில் வாங்க நினைக்கலாம். அது உலகளாவிய கோதுமை விநியோகத்தை மேலும் கடினமாக்கும். விலைகளை உயர்த்தும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

Reality Check branding

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »