Press "Enter" to skip to content

உத்தரப் பிரதேசம்: பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் கைது

பட மூலாதாரம், PUBG

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (09/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

‘பப்ஜி’ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக 16 வயது சிறுவன் ஒருவனை உத்தரப் பிரதேச காவல் துறையினர் கைது செய்ததாக, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது மகனை அவரது தாய் “பப்ஜி விளையாடக் கூடாது” எனத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் காசிம் அபிடி கூறும்போது “இந்தச் சம்பவம் பிஜிஐ காவல் சரகத்திற்கு உட்பட்ட யமுனாபுரம் காலனியில் நடந்துள்ளது. அந்த 16 வயது சிறுவன் “பப்ஜி” என்னும் கணினிமய விளையாட்டுக்கு அடிமையாக இருந்துள்ளான். சிறுவனின் தாய் அவனை “பப்ஜி விளையாடக் கூடாது” என்று தடை விதித்ததால், சிறுவன் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதற்காக தனது தந்தையின் லைசன்ஸ்டு தூப்பாக்கியை அவன் பயன்படுத்தியுள்ளான்.

இந்த சம்பவம் சனிக்கிழமை இரவில் நடந்துள்ளது. தாயைக் கொன்றதும் அவரின் உடலை ஓர் அறையில் வைத்துப் பூட்டிய சிறுவன் தனது தங்கையுடன் பக்கத்து அறையில் இருந்துள்ளான். உடல் அழுகி நாற்றம் வெளியே வராமல் இருக்க ரூம் ஸ்ப்ரேவை பயன்படுத்தியுள்ளான்.

செவ்வாய்க்கிழமை மாலையில் உடல் அழுகி நாற்றம் வந்த நிலையில், சம்பவம் குறித்து சிறுவன் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளான். அதிர்ச்சியடைந்த தந்தை பக்கத்து வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

சென்னை போரூர் அருகே குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண் உயிரிழந்ததாகவும், அவர் இறந்து 5 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், “பூந்தமல்லி, சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ ஓட்டுனரான இவருடைய மனைவி வினோதினி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சின்ன போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய வினோதினிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி, கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்து போனதாக குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள், வினோதினியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வினோதினி உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வினோதியின் உடலை காணொளி பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் வினோதினி இறந்து 5 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முகலிவாக்கம் பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை’

கோட்டாபய ராஜபக்ஷ

பட மூலாதாரம், AFP

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தோல்வியுற்ற தலைவராக இருந்து விலக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதிக்கு அரசியல் அறிவும் புரிதலும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் கோபம், மே 9 ஆம் தேதி அமைதியின்மை மற்றும் வன்முறைக்கு வழிவகுத்தது. தீர்வுகளைக் காணும் வரை இந்த நிலைமை குறையாது என்றும் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பிரதமரும் எரிசக்தி அமைச்சரும் முன்வைத்துள்ள கருத்துக்கள் முரண்பாடானவை.

எதிர்வரும் மூன்று வாரங்கள் கடினமாக இருக்கும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

புகழ்பெற்ற அரசியல்வாதிக்கும் அனுபவம் இல்லாத அமைச்சருக்கும் உள்ள தெளிவான வித்தியாசம் இதுதான்.

அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறான அறிக்கைகளின் துல்லியம் குறித்து விசாரிக்க வேண்டும்” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »