Press "Enter" to skip to content

நூபுர் ஷர்மா: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவைச் சேர விடாமல் பாகிஸ்தான் தடுத்த வரலாறு

  • பிரதீப் குமார்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Hindustan Times

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா, முகமது நபி குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து அரபு லீக் நாடுகள் கடும் கோபத்தை வெளிப்படுத்தின.

கத்தார் முதலில் இந்த விஷயத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியது, அதைத் தொடர்ந்து செளதி அரேபியா, இரான், மாலத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூடவே இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இந்த நாடுகளின் எதிர்வினைகள் காரணமாகவே பாஜக அதன் செய்தித் தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்தியா அரபு நாடுகளுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் அரபு நாடுகளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக இத்தகைய ஒற்றுமையைக் காட்டுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடமிருந்து இந்தியா இதைக்காட்டிலும் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. அது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 1969ஆம் ஆண்டு.

அந்த நேரத்தில், குர்பச்சன் சிங் மொராக்கோவுக்கான இந்திய தூதராக இருந்தார். OIC எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பின் முதல் கூட்டத்தில் இந்திய குழுவுக்கு தலைமை ஏற்றிருந்தார்.

குர்பச்சன் சிங் இந்தக் காலகட்டத்தின் முழு அனுபவத்தையும் இந்திய தூதாண்மை அதிகாரிகளின் காலாண்டு இதழான இந்திய வெளியுறவு இதழில் (IFAJ) பகிர்ந்து கொண்டார். 2006 ஏப்ரல்-ஜூன் இதழில், அவருடனான உரையாடல்களின் அடிப்படையில் இந்தியா அட் தி ரபாத் இஸ்லாமிக் சம்மிட் (1969) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.

சுமார் 16 பக்கங்களில், அவர் இந்தியாவின் தரப்பு வாதத்தை முன்வைத்தார். கேள்வி பதில் வடிவில் வெளியான இந்தக்கட்டுரையை இந்தியச் சூழலில் ஓர் ஆவணமாகக் கருதலாம்.

இஸ்லாமிய கூட்டமைப்பு

பட மூலாதாரம், AMER HILABI/ Getty Images

கூட்டத்தின் துவக்கம் பற்றி அவர் இவ்வாறு விவரிக்கிறார். இஸ்லாத்தின் மூன்றாவது புனித இடமான ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை 1969 ஆகஸ்ட் 21 அன்று, ஓர் ஆஸ்திரேலியர் தாக்க முயன்றார். அதன் பிறகு அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. மூன்று நாட்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 24 அன்று, இந்தக் கூட்டம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு பற்றிய யோசனை முன்வைக்கப்பட்டு, அதன் வரைவு குறித்து 1969, செப்டம்பர் 8-9 தேதிகளில், மொரோக்கோ நாட்டின் தலைநகரான ரபாத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றும் நாடு இந்த அமைப்பில் கலந்து கொள்ள அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

நாடு முஸ்லிம் பெரும்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. இரண்டாவது நிபந்தனை , அரசின் தலைவராக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக அடையாளம் காணப்பட்டது. சர்வதேச அளவில் இந்தியாவை இந்துக்களின் நாடாக நிரூபிக்க பாகிஸ்தான் முயற்சித்த போதிலும், அது வெற்றி பெறவில்லை. ஏனென்றால், பிரிவினைக்குப் பிறகும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதிக அளவில் இருந்தனர். 1969ஆம் ஆண்டில், முஸ்லிம் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தது.

1969ல் இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தியா முஸ்லிம் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வது இது முதல் முறையல்ல. ஏனென்றால் அதற்கு முன்பே இந்தியா நான்கு முறை வெவ்வேறு முஸ்லிம் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1955ஆம் ஆண்டு வாக்கில், இந்தியா எந்த ஓர் இஸ்லாமிய உறுப்பு நாடுகள் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்காது என்று தீர்மானித்தார் என்பது சுவாரசியமான அம்சம். ஏனெனில் அத்தகைய அமைப்புகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கு மதத்தின் போர்வை கிடைக்கிறது என்று அவர் கருதினார்.

ஜவஹர்லால் நேரு

பட மூலாதாரம், Getty Images

ஆனால் 1964 வாக்கில், அவரது தலைமையின் கீழ் இந்தியா தனது கொள்கையை மாற்ற முடிவு செய்தது. ஏனெனில் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளை பாகிஸ்தானுக்கு திறந்து விட விரும்பவில்லை.

ரபாத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்திற்கு முன், இந்தியா 1964 டிசம்பர் 26 முதல் 1965 ஜனவரி 5 வரை நடைபெற்ற ஆறாவது முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொண்டது.

இதற்குப் பிறகு, 1965 மார்ச் 6 முதல் மார்ச் 14 வரை பாண்டுங்கில் நடைபெற்ற முதல் ஆப்ரிக்க- ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் இந்தியாவின் ஐந்து முஸ்லிம் தலைவர்கள் பிரதிநிதிக்குழு கலந்துகொண்டது. இது பாகிஸ்தானின் பிரசாரத்தை குறைக்க உதவும் என்று நம்பப்பட்டது.

இதற்குப் பிறகு, 1965 ஏப்ரல் 17 முதல் 24 வரை, மெக்காவில் நடைபெற்ற அரசு அல்லாத ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லிம் உலக லீக் மாநாட்டில் இந்திய அணி கலந்துகொண்டது. இந்த சந்திப்பு அதிகாரப்பூர்வமற்றதாக இருந்தாலும்,அதன் அழைப்பு குடியரசுத்தலைவருக்கு வந்திருந்தது. அவரால் நியமிக்கப்பட்ட குழு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்றது.

இந்தியாவுக்கு அழைப்பு வந்ததா?

ஆனால் உலகின் எல்லா இஸ்லாமிய நாடுகளும் ரபாத் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தன. அந்தக் கூட்டத்திற்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டதா?

1969 செப்டம்பர் 22 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ரபாத்தில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இந்தக் கூட்டத்தின் தொடக்க விழா இருந்தது என்று அப்போது மொராக்கோவுக்கான இந்தியத் தூதராக இருந்த குர்பச்சன் சிங் கூறுகிறார்.

“செப்டம்பர் 23 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு முதல் சந்திப்பு. மொராக்கோ நெறிமுறைத் தலைவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் என்னை மொராக்கோவின் வெளியுறவு அமைச்சர் எம். அகமது லராக்கியிடம் அழைத்துச் சென்றார். வெளியுறவு அமைச்சர் கூட்டம் தொடங்கிவிட்டது என்று என்னிடம் கூறினார், ஆனால் இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் தனது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளை அனுப்பியிருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்றார்,”என்று அவர் தனது அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவை அழைக்க பாகிஸ்தான் தயாரா”, என்று நான் கேட்டேன். இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில் “ஆம்,”என்று குர்பச்சன் சிங் மேலும் கூறுகிறார்.

இப்போது குர்பச்சன் சிங் இந்திய தூதுக்குழுவை அழைக்கும் சவாலை எதிர்கொண்டார். அத்தகைய சூழ்நிலையில், ஐரோப்பாவில் இந்தியாவின் பிரதிநிதிகள் யாரேனும் இருந்தால், அவர்களை அழைக்கலாம் என்று லராக்கி பரிந்துரைத்தார்.

கடாபி

பட மூலாதாரம், AFP/Getty Images

இந்திய அரசிடம் ஒரு தூதுக்குழுவை அனுப்புமாறு தான் கோரியிருப்பதாகவும், ஆனால் மறுநாள்தான் குழு ரபாத்தை அடைய முடியும் என்றும் குர்பச்சன் சிங் லாராக்கியிடம் கூறினார்.

மொராக்கோவில் அப்போது இருந்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் அப்துல் அலீமை அழைக்கலாம் என்றும் குர்பச்சன் சிங் பரிந்துரைத்தார். ஆனால் லாராகி அவரிடம், அரசு பிரதிநிதிகள் கலந்துகொள்வது நல்லது. நீங்கள் தூதராக இருப்பதால்,நீங்களே இதில் கலந்துகொள்ளலாம் என்றார்.

குர்பச்சன் சிங் இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். எனவே அவர் அலுவலகத்திற்குத் திரும்பினார், இதையெல்லாம் அப்போதைய வெளியுறவுச் செயலர் கேவல் சிங்கிடம் கூறினார். குர்பச்சன் சிங்கை மாநாட்டில் பங்கேற்குமாறு கேவல் சிங் கேட்டுக்கொண்டார். மருத்துவர் அப்துல் அலீம் மற்றும் அவரது செயலாளர் இஷ்ரத் அஜீஸ் ஆகியோருடன் குர்பச்சன் சிங் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முதல் கூட்டத்தில் இந்திய அணி பங்கேற்றது

இவை அனைத்தும் மாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் லாராக்கியால் சொல்லப்பட்டன. அவை மறுநாள் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன என்று குர்பச்சன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

குருபச்சன் சிங்கின் இந்தக்கூற்றை ஓஐசி-யின் 40 ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட ‘புதிய நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம்’ என்ற புத்தகமும் உறுதிப்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டு OIC உறுப்பு நாடுகளின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பொதுச் செயலாளராக இருந்த துருக்கிய அறிஞர் இச்மெலடின் எஹ்சானோக்லு என்பவரால் இந்த புத்தகம் எழுதப்பட்டது.

ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் முக்கியமான பகுதி ஓஐசி-யின் தொடக்கக் கூட்டத்தைப் பற்றியது. ஓஐசி-யின் நிறுவக உறுப்பினராக இந்தியா ஆவது கைநழுவிப்போனது என்றும் அது கூறுகிறது.

இருப்பினும், குர்பச்சன் சிங் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, ​​​​அவரை ஆப்கானிஸ்தான் மற்றும் சூடானின் வெளியுறவு அமைச்சர்கள் வரவேற்றனர். மேலும் அவர் இரானின் ஷா மற்றும் செளதி அரேபியாவின் சுல்தானிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தன்னை பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கானிடம் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, ​​​​அவர் மிகவும் அமைதியாக இருந்தார் என்று குர்பச்சன் சிங் கூறுகிறார்.

யாஹ்யா கான்

பட மூலாதாரம், Getty Images

மாலை 5 மணிக்கு நடந்த கூட்டத்தில் மொராக்கோ மன்னர் இந்தியக் குழுவை வரவேற்று, மறுநாள் இந்தியக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் என்று கூறினார். குர்பச்சன் சிங்கிற்கு கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைத்தபோது, ​​இந்தியாவின் தொழில்துறை அமைச்சர் ஃபக்ருதீன் அலி அகமது ரபாத்துக்குப் புறப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

இரவு பத்து மணி வரை நடந்த இந்த அமர்வில் இந்தியாவுக்கு எதிராக எங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் செப்டம்பர் 24 அன்று காலை, லாராகி மீண்டும் குர்பச்சன் சிங்கைச் சந்தித்து, அகமதாபாத் கலவரம் காரணமாக சில உறுப்பு நாடுகள் இந்தியா வருவதை எதிர்ப்பதாகவும், காலை அமர்வில் இந்தியக் குழு பங்கேற்க வேண்டாம் என்றும் யோசனை கூறினார்.

இதை நான் ஏற்றுக்கொண்டதாகவும், மாலை 3.30 மணிக்கு வரும் இந்திய தூதுக்குழுவை வரவேற்க தயாராகிவிட்டதாகவும் இது குறித்து குர்பச்சன் சிங் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த நேரத்தில் குர்பச்சன் சிங் பாகிஸ்தான் அதிபரின் அதிருப்தியை அறிந்து கொண்டார். இந்திய பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டால், அதில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் அறிவித்துள்ளது அவருக்கு தெரிய வந்தது.

இதனால் மதியம் ஒரு மணி வரை கூட்டம் தொடங்க முடியவில்லை. பல நாடுகளின் அரசுத் தலைவர்கள் யாஹ்யா கானை அழைக்க முயன்றனர். ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள இயலவில்லை. அவரை சமாதானப்படுத்த இரான் மற்றும் செளதி அரேபியாவின் தலைவர்கள் வந்ததாகவும் ஆனால் அவர்களை சந்திக்க யாஹ்யா கான் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்குள் மாலை 3.30 மணியாகிவிட்டது. ஃபக்ருதீன் அலி அகமது தலைமையிலான இந்தியக் குழு ரபாத்தை அடைந்தது, அவர்களுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. குழு நியமிக்கப்பட்ட இடத்தை அடைந்ததும் மொராக்கோ மன்னர் ஹசன், ஃபக்ருதீன் அலி அகமதை தொலைபேசியில் அழைத்து வணக்கம் செலுத்தினார்.

இந்த மாநாட்டின் தலைவரான மன்னர் ஹசன், அகமதாபாத் கலவரத்தை மேற்கோள் காட்டி சில உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ள எதிர்ப்பைப் பற்றி அகமதிடம் கூறினார். மேலும் இந்த கூட்டத்தில் இந்தியா ஒரு பார்வையாளராக கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார். அதை இந்தியா ஏற்கவில்லை.

பாகிஸ்தான் அதிபர் பிடிவாதம்

இந்த கூட்டத்தில் இந்தியா தானாக முன்வந்து கலந்து கொள்ளவில்லை என்று முன்மொழியப்பட்ட பிறகு, ஃபக்ருதீன் அலி அகமது, மிகக் குறுகிய காலகெடுவில் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் தாங்கள் வந்துள்ளதால், இந்த திட்டத்தை இந்தியா ஏற்கவில்லை என்று தெளிவாகக் கூறினார்.

ஆப்கானிஸ்தான், மலேஷியா, நைஜர் போன்ற நாடுகளின் அரசுத் தலைவர்கள் இரவு 8.20 மணிக்கு இந்தியக் குழுவைச் சந்திக்க வந்தனர் என்று குர்பச்சன் சிங் கூறுகிறார்.

கட்டுரை

பட மூலாதாரம், Indian Foreign Affairs Journal

இவர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திமுடிக்க இந்திய அணியிடம் உதவி கோரினர். பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பிற்கான காரணங்கள் அப்போது குறிப்பிடப்பட்டன. அகமதாபாத்தில் நடந்த கலவரம், ஆரம்ப அமர்வில் இந்திய தூதுக்குழுவில் குர்பச்சன் சிங் போன்ற சீக்கிய சர்தார் கலந்துகொண்டது மற்றும் கூட்டத்திற்கு அரசுக் குழுவின் வருகை உள்ளிட்ட பல காரணங்கள் இதில் அடங்கும்.

ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால், இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விவகாரம் பாகிஸ்தானை எட்டியபோது, ​​பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அஸ்கர் கான், சுல்ஃபிகர் அலி பூட்டோ, மும்தாஜ் தௌல்தானா போன்ற தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். யாஹ்யா கானுக்கு இது தெரியவந்ததும், அவர் தனது அரசியல் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலை உணர்ந்தார். இதை பாகிஸ்தான் டைம்ஸ் 1969 செப்டம்பர் 25 அன்று தனது தலையங்கத்தில் சுட்டிக்காட்டியது.

ஆனால் அன்று என்ன நடந்தது என்பதை பாகிஸ்தான் விமானப்படையின் ஸ்க்வாட்ரான் லீடராக இருந்த அர்ஷத் ஷாமி கான் தனது ‘த்ரீ ப்ரெசிடெண்ட்ஸ் அண்ட் என் ஏய்ட்(Three presidents and an Aide) ‘ என்ற நினைவுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். பிரபல பாடகர் அத்னான் ஷமியின் தந்தையும், 1965ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் முக்கியப் பங்காற்றியவருமான ஷமி கானுக்கு, 2012ல் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-இம்தியாஸ், மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

அயூப் கான், யஹ்யா கான் மற்றும் சுல்ஃபிகர் அலி பூட்டோ ஆகியோருக்கு சிறப்புப் பணி அதிகாரியாக அவர் இருந்தார்.

“ரபாத் கூட்டத்தில் இந்தியப் பிரதிநிதிகள் பற்றிப் பேசப்பட்டபோது யாஹ்யா கான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இரவில் மூன்று பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் அவரைச் சந்திக்க வந்தனர். அவர்கள் மூவரும் அவரது நிலைப்பாட்டை மாற்றுமாறு அறிவுறுத்தினர்,” என்று அவர் தனது நினைவுக் குறிப்பில் எழுதினார்.

“இதற்குப் பிறகு, அவர் மறுநாள் காலையில் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை. ரபாத்தில் இருந்து திரும்பிச் செல்லப்போவதாக கூறினார். அவர் திரும்பிச்சென்றிருந்தால், இந்தக்கூட்டத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் இருந்திருக்கும். ஏனென்றால் பாகிஸ்தான் உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடாக இருந்தது.”

இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இந்த முழு சர்ச்சையால், செப்டம்பர் 24 அன்று எந்த அமர்வு கூட்டமும் நடத்தப்படவில்லை. இந்த கூட்டங்களை செப்டம்பர் 25 அன்று நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் செப்டம்பர் 25 அன்று எந்த சந்திப்பும் நடைபெறவில்லை என்று இந்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

4 மணி முதல் கூட்டம் நடைபெறுவதை இந்திய அணி அறிந்ததும், தாங்கள் பங்கேற்பது பற்றி ஏற்பாட்டாளர்களுக்கு இந்திய அணியினர் கடிதம் எழுதினர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

பின்னர், இந்திய அணி இல்லாத நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஐஐசி) அமைப்பதற்கான முன்மொழிவு ஐந்து மணிக்கு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆரம்ப சந்திப்பில் இந்திய முஸ்லிம் சமூகம் பங்கேற்றதாகவும் அது கூறியுள்ளது. ஆனால், ஃபக்ருதீன் அலி அகமது தலைமையில் கலந்துகொண்ட குழு, இந்தியாவின் அதிகார பூர்வ பிரதிநிதிக்குழுவாகும்.

சர்வதேச அளவில் எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்க ஒரு நாடு அழைக்கப்பட்டு, அதில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாதது இதுவே முதல்முறை. ஆனால் செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 26 வரை இந்திய அணி மொராக்கோ அரசின் விருந்தினராக அங்கு தங்கியிருந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்திரா காந்தியின் அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அதற்குள் இந்திய அரசு குர்பச்சன் சிங்கை ரபாத்தில் இருந்து திரும்ப அழைத்தது.

அரபு நாடுகளுடன் மிக நெருக்கமாக இருந்தும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இஸ்லாமிய நாடுகளின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்கு அது எப்படி கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்தது.

அரேபிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளும், இந்தியாவில் முஸ்லிம்களின் அதிக மக்கள் தொகையும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இது சம்பந்தமாக, 1965 அக்டோபர் 19ஆம் தேதி, இந்திய செய்தி முகமையான பி.டி.ஐ செய்தி வெளியிட்டது. அல்-அக்சா மசூதி மீதான தாக்குதல் முயற்சி குறித்து இந்திய முஸ்லிம்களும் பேச நினைக்கிறார்கள் என்று இந்தியாவின் பல முஸ்லிம் தலைவர்கள் மொராக்கோ மன்னர் ஹசனிடம் கோரிக்கை விடுத்ததாக அந்த செய்தி தெரிவித்தது.

இந்த சந்திப்பில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முதலில் விரும்பவில்லை என்றும், பின்னர் இந்த சந்திப்பில் இருந்து இந்தியாவை ஒதுக்கி வைக்கக் கூடாது என டெல்லியில் உள்ள அரபு நாடுகளின் தூதர்களிடம் இந்தியா கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதில் எழுந்த மற்றொரு முக்கியமான கேள்வி என்னவெனில், சமய சார்பற்ற இந்தியா அந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஏன் தயாராக இருந்தது?

இதுகுறித்து, இந்தியாவின் பிரபல அரசியல் ஆய்வாளரும், வழக்கறிஞருமான ஏ.ஜி.நூரானி, ஃப்ரண்ட்லைன் செய்தி இதழில், இந்திரா காந்தியின் எம்.பி., சி.சி.தேசாய் எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டியுள்ளார். ரபாத் கூட்டம் மத அடிப்படையில் நடத்தப்படும் கூட்டமாக இருக்கலாம். ஆனால் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் முற்றிலும் அரசியல் விஷயங்கள் என்று அதில் தேசாய் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய முஸ்லிம்களை திருப்திப்படுத்த இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்ததாக அப்போது பலர் நம்பினர் என்றும் நூரானி எழுதியுள்ளார்.

1962-ம் ஆண்டு சீனாவுடனான போரில் தோல்வியடைந்த பிறகு, சர்வதேச அளவில் இரண்டாவது முறையாக இந்தியாவின் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்திய தூதராக பல ஆண்டுகளாக பணியாற்றிய மூத்த ராஜீய அதிகாரி கே.சி. சிங், இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியா விரைவில் மீண்டு, மத்திய கிழக்கு நாடுகளுடன் சுமுகமான உறவைக் கொண்டிருந்ததாக கூறுகிறார்.

வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

அதே சமயம், ரபாத் கூட்டம் நடந்த இரண்டே ஆண்டுகளில், இந்திரா காந்தியின் ராஜதந்திரம் காரணமாக, வங்கதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கான் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »