Press "Enter" to skip to content

காலநிலை மாற்றம்: ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தின் புதிய திட்டம்

பட மூலாதாரம், Getty Images

பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையானவற்றில் ஒன்றைச் சமாளிக்கும் முயற்சியில், செம்மறி ஆடுகள், மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளிடம் இருந்து வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவுக்கு வரி வசூலிக்கும் முதல் நாடு இதுதான்.

சுமார் 50 லட்சம் மக்கள்தொகை உள்ள நியூசிலாந்தில் சுமார் ஒரு கோடி கால்நடைகள் மற்றும் 2.6 கோடி செம்மறி ஆடுகள் உள்ளன.

நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் கிட்டத்தட்ட பாதியளவு விவசாயத்தில் இருந்து வருகிறது. அதில் வெளியாகும் முக்கியமான வாயு, மீத்தேன்.

இருப்பினும், நியூசிலாந்தின் உமிழ்வு வர்த்தக திட்டத்தில் விவசாய உமிழ்வுகள் முன்னர் சேர்க்கப்படவில்லை. புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவர்களால் இது விமர்சிக்கப்பட்டது.

“வளிமண்டலத்தில் நாம் செலுத்தும் மீத்தேன் அளவைக் குறைக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும் வேளாண்மைக்கான பயனுள்ள உமிழ்வு விலை நிர்ணயம், அதை எவ்வாறு அடைவது என்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்,” என்று நியூசிலாந்தின் காலநிலை மாற்ற அமைச்சர் ஜேம்ஸ் ஷா கூறினார்.

கால்நடைகளின் வாயு வெளியேற்றத்திற்குப் பணம்

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 2025-ஆம் ஆண்டு முதல் கால்நடைகளின் வாயு வெளியேற்றத்திற்குப் பணம் செலுத்த வேண்டும்.

தீவனச் சேர்க்கைகள் மூலம் உமிழ்வைக் குறைக்கும் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகைகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். அதேநேரம், பண்ணைகளில் மரங்களை நடுவதன் மூலம் உமிழ்வை ஈடு செய்யலாம்.

பால் உற்பத்தியாளரும் நியூசிலாந்து விவசாயிகள் கூட்டமைப்பின் தேசியத் தலைவருமான நிஆண்ட்ரூ ஹோகார்ட் பிபிசியிடம் அவர் இந்த முன்மொழிவுகளைப் பரவலாக ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.

BBC chart

அவர், “நியூசிலாந்தில் விவசாயத்தை முற்றிலுமாக முடக்காத அணுகுமுறையைப் பெறுவதற்காக நாங்கள் பல ஆண்டுகளாக அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எனவே, இதில் எங்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய பல விஷயங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.

ஆனால், பல தரப்பினருடன் போடப்பட்டிருக்கும் இந்த வகையான ஒப்பந்தங்களைப் போலவே, சகித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களும் இதில் இருக்கத்தான் செய்கின்றன,” என்று அவர் கூறினார்.

ஹோகார்ட், திட்டத்தின் வெளிப்பாட்டிலுள்ள சிறந்த விவரங்கள் இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

“திட்டத்தை உண்மையில் யார் செயல்படுத்துகிறார்கள் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் சரியாகச் செதுக்கப்பட வேண்டும். எனவே அரசாங்கத்துடன் இணைந்து செயல்படக்கூடிய விஷயங்களை முடிவு செய்யவேண்டியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணம், விவசாயிகளுக்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஆலோசனை சேவைகளில் முதலீடு செய்யப்படும் என நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், நியூசிலாந்தின் நிதியமைச்சர் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான முன்முயற்சிகளுக்காக 2.9 பில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 14 ஆயிரத்து 400 கோடி இந்திய ரூபாய்) அளிப்பதாக ஒப்புக் கொண்டார். இது மாசுபடுத்துபவர்களுக்கு வரி விதிக்கும் உமிழ்வு வர்த்தக அமைப்பு மூலம் அளிக்கப்படும்.

இதற்கிடையில், வியாழக்கிழமை அன்று, 14 டிரில்லியன் டாலர் சொத்துகளை நிர்வகிக்கும் முதலீட்டாளர்கள் விவசாயத் துறையை வளம்குன்றாத வகையில் மாற்றுவதற்கான உலகளாவிய திட்டத்தை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தினர்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில், FAIRR முன்முயற்சி நிறுவனம், காலநிலையைப் பாதிக்கக்கூடிய உமிழ்வுகளின் ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான, மிகப்பெரிய திட்டத்திற்கான வழிகாட்டுதலை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பதாகக் கூறியது.

பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடியது மீத்தேன் வாயுதான்.

மனித நடவடிக்கைகளால் ஏற்படுகின்ற தற்போதைய வெப்பமயமாதலில் மூன்றில் ஒரு பங்குக்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய, மிகவும் சக்திவாய்ந்த வாயுக்களில் மீத்தேனும் ஒன்று. ஒற்றை கரிம வாயுவின் மூலக்கூறுகளை விடத் தனிப்பட்ட மீத்தேன் மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் அதிக சக்திவாய்ந்த வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்துகின்றன.

கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடந்த 26-வது காலநிலை உச்சி மாநாட்டில், 2030-க்குள் வாயு வெளியேற்றத்தை 30% குறைக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக்கொண்டன. நியூசிலாந்து உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளும் இந்த முயற்சியில் கையெழுத்திட்டுள்ளன.

மீத்தேன் உமிழ்வு எப்படி நடக்கிறது?

பருவநிலை மாற்றத்தில் மீத்தேன் வாயுவின் பங்கு கணிசமானது.

பட மூலாதாரம், Reuters

சுமார் 40% மீத்தேன் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை ஆதாரங்களில் இருந்து வருகிறது. ஆனால், பெரிய பங்கு இப்போது கால்நடைகள், அரிசி உற்பத்தி போன்ற விவசாயச் செயல்பாடுகள் முதல் குப்பைக் கிடங்குகள் வரையிலான மனித நடவடிக்கைகளில் இருந்தும் வருகிறது.

மீத்தேன் வாயுவுக்கான மிகப்பெரிய ஆதாரங்களில் ஒன்று இயற்கை எரிவாயுவின் உற்பத்தி, அதற்கான போக்குவரத்து மற்றும் பயன்பாடு. அதோடு 2008-ஆம் ஆண்டு முதல் மீத்தேன் உமிழ்வின் அதிகரிப்பு ஓர் உச்சத்தை எட்டியுள்ளது. இது அமெரிக்காவின் சில பகுதிகளில் எரிவாயு உற்பத்திக்கான ஏற்றத்துடன் தொடர்புடையதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2019-ஆம் ஆண்டில், வளிமண்டலத்தில் மீத்தேன் இதுவரை பதிவாகாத அளவை எட்டியது. இது தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்ததைவிட இரண்டரை மடங்கு அதிகம்.

விஞ்ஞானிகளைக் கவலையடையச் செய்வது என்னவெனில், பூமியைச் சூடாக்குவதை மீத்தேன் திறம்படச் செய்துகொண்டிருக்கிறது. 100 ஆண்டு காலத்தில் இது கரியமில வாயுவைவிட 28 முதல் 34 மடங்கு வரை அதிக வெப்பமாக்கக் கூடியது.

20 ஆண்டுகளில் இது கரியமில வாயுவை விட 84 மடங்கு அதிக வெப்பமாக்கும் ஆற்றல் வாய்ந்தது மீத்தேன்.

இருப்பினும், வளிமண்டலத்தில் மீத்தேனைவிட அதிகமான கரியமில வாயு உள்ளது. அதன் ஒரு தனிப்பட்ட மூலக்கூறு வளிமண்டலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு இருக்கக்கூடிய தன்மையுடையது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »