Press "Enter" to skip to content

யானை தந்தங்கள் இணையத்தில் விற்பனை : மாட்டு எலும்பு என்ற பெயரில் விற்பது பிபிசி விசாரணையில் அம்பலம்

  • விக்டோரியா கில்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்

பட மூலாதாரம், other

யானை தந்தங்களை போலிப் பெயர்களில் பட்டியலிடுவதன் மூலம் அதை விற்பனை செய்பவர்கள், இ-பே வணிக தளத்தில் அது விதித்துள்ள தடையை மீறுகின்றனர்.

பிபிசி மற்றும் சட்ட வல்லுநர்கள் நடத்திய விசாரணையில், யானை தந்தங்கள் இணையதளங்களில் பெரும்பாலும், “மாட்டு எலும்பு” என்று பட்டியலிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் கண்டறிந்தனர்.

நாங்கள் பிரிட்டனில் இ-பே மூலம் இதுபோன்ற மூன்று பொருட்களை வாங்கி, அவற்றை ஒரு சுயாதீன ஆய்வகத்தில் பரிசோதித்தோம். பரிசோதனை முடிவுகளின் மூலம், அதில் இரண்டு பொருட்கள் யானை தந்தத்தால் செய்யப்பட்டவை என உறுதி செய்யப்பட்டது.

யானை தந்தங்களின் விற்பனையை இபே வணிக தளம் தடை செய்ததிலிருந்து ஆயிரக்கணக்கான யானை தந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தந்த விற்பனை தொடர்பான வல்லுநர்களின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் கேரொலின் காக்ஸ், 2018-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினார். ஜூன் 6-ஆம் தேதி அமலுக்கு வந்த, இங்கிலாந்து முழுவதும் யானைத் தந்தம் விற்பனைக்கு விதிக்கப்பட்ட புதிய தடை இருந்தாலும், இப்போதும் அதன் வர்த்தகம் தொடர்கிறது என்று அவரும் மற்ற தந்த வர்த்தகம் குறித்த வல்லுநர்களும் கூறுகின்றனர். உலகளவில் தந்தம் விற்பனைக்கு இபே தனது இணையதளத்தில் தடை விதித்து 10 அண்டுகளுக்கும் மேலாகிறது.

2018-ஆம் ஆண்டில் மருத்துவர் காக்ஸ் மற்றும் அவருடைய குழுவினர் மூன்று மாத கணினிமய ஆய்வை மேற்கொண்டனர். இபே பிரிட்டன் தளத்தில் “மாட்டு எலும்பு” என்ற விற்பனை வகையைக் கண்காணித்தனர். இபே பிரிட்டன் தளத்தில் விற்கப்பட்ட 632 மாட்டு எலும்பு துண்டுகளை இந்தக் குழுவால் கண்காணிக்கப்பட்டது, பிறகு, அவற்றில் 500-க்கும் மேற்பட்டவை தந்தங்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கணினிமய தடயவியல் ஆய்வுக்காக, இந்தப் பொருட்களின் வாடிக்கையாளர்களுக்காகவும் புலனாய்வில் ஈடுபடுவோருக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கும் அந்தப் பொருட்களின் தகவல்களையும் படங்களையும் மருத்துவர் காக்ஸ் ஆதாரங்களாகப் பயன்படுத்தியதாக விளக்கினார்.

மேலும் அவர், “யானை தந்தம் ஒரு தனித்துவமான, க்ரீம் நிறத்தைக் கொண்டுள்ளது. மேலும், குறிப்பாக ஒரு பொருளின் விவரங்கள் பட்டியல், பெரும்பாலும் அதன் எட்டையை மிகத் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏனெனில், அதுதான் காட்சிக்கு வைக்கப்பட்டும் தந்தத்தின் மதிப்பு,” என்கிறார்.

முக்கியமான ஆதாரம், விற்கப்படும் பொருள் குறித்த ஒளிப்படத்தில் உள்ளது. செதுக்கப்பட்ட தந்தங்களில், ஷ்ரெகர் கோடுகள் எனப்படும் தனித்துவமான, புலப்படக்கூடிய வளர்ச்சிக் கோடுகள் உள்ளன. அவை மர வளையங்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பற்கள் மற்றும் தந்தங்களுக்கும் அந்தக் கோடுகள் இருக்கும். அவை தந்தத்தில் தனித்துவமானதாக இருக்கும் என்று மருத்துவர் காக்ஸ் கூறினார்.

யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல் இபேயில் விற்பனைக்கு

பட மூலாதாரம், other

புலனாய்வாளர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் நீண்டகாலமாக இந்தக் காட்சி நுட்பஙக்ளை, சட்டவிரோத தந்தங்களை அடையாளம் காணவும் கணினிமய வர்த்தகத்தை விசாரிக்கும்போது பொருட்களைக் கைபற்றவும் பயன்படுத்துகின்றனர்.

யானைத் தந்த சட்டம்

பிபிசி நியூஸ், இபேயில் மாட்டின் எலும்பு என்று பட்டியலிடப்பட்ட மூன்று பொருட்களை 2019-ஆம் ஆண்டில் ஒரு சுயாதீன ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்காக வாங்கியது.

நாங்கள் வாங்கிய மூன்று பொருட்களில் ஒரு சிறிய, செதுக்கப்பட்ட ஆப்பிரிக்க தலை ஆபரணம், ஒரு வளையல், இரண்டு சிறு சிலைகள், என்று மூன்று பொருட்கள் வாங்கப்பட்டன. அவற்றில் இரண்டு யானை தந்தத்தால் ஆனது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தொல்லியல் கல்லூரியின் விஞ்ஞானிகளால் வேதியியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டது.

பிபிசியின் கண்டுபிடிப்புகளுக்கு பதிலளித்த ஓர் அறிக்கையில், இபே, யானை தந்தங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்வதைச் சமாளிக்கும் முயற்சியில் பத்து ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறியது.

“சமீபத்திய இரண்டு வருட காலப்பகுதியில் எங்கள் விலங்குப் பொருட்கள் விற்பனைக் கொள்கையின் கீழ் தடை செய்யப்பட்ட 265,000 பொருட்களை நாங்கள் விற்பனையிலிருந்து தடுத்து, அகற்றியுள்ளோம்.

யானை தந்தம்

எங்கள் செயல்திறன் மிக்க அணுகுமுறையின் காரணமாக, சட்டவிரோத தந்த விற்பனையாளர்கள், குறியீட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இது மிகவும் அரிதாக விற்கப்பட்டாலும், வாங்குபவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசி செய்திக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்தார்.

இந்த விசாரணையைத் தொடங்கிய தந்த வர்த்தகம் சார்ந்த வல்லுநர்கள், 2018-ஆம் ஆண்டில் வெறும் மூன்று மாதங்களில் 500 தந்தங்களின் விற்பனையை இபேயில் கண்காணித்ததாகச் சுட்டிக்காட்டினர். மேலும், அதே குறியீட்டு வார்த்தைகள் அல்லது புனைப்பெயர்கள், முக்கியமாக “மாட்டு எலும்பு” போன்ற குறியீட்டு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டன.

தந்த வர்த்தகம் தொடர்பான சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். ஜூன் 6-ஆம் தேதியன்று, பிரிட்டன் “யானை தந்தம் விற்பனைக்குத் தடை” விதித்தது. அதோடு, அந்தத் தடையை உலகிலேயே கடுமையானது என்றும் குறிப்பிட்டது. ஜூன் 6 முதல், யானையின் பற்கள், தந்தங்களை வர்த்தகம் செய்வது பிரிட்டனில் சட்டவிரோதமானது. அதற்கு, 250,000 யூரோ வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

25 பவுண்டுகள் விலையில், யானை தந்தத்தில் செய்யப்பட்ட ப்ரேஸ்லெட், மாட்டு எலும்பு ப்ரேஸ்லெட் என்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது

காட்டுயிர்களுக்காக ஸ்க்ரோலிங்

காட்டுயிர் சார்ந்த வர்த்தகர்கள், சுரண்டிய இணைய வர்த்தக தளம் இபே மட்டுமே இல்லை. 2017-ஆம் ஆண்டில் அழிந்து வரும் மனிதக் குரங்குகளை செல்லப்பிராணிகளாக விற்பனை செய்தது குறித்த எங்கள் விசாரணையின்போது, இன்ஸ்டாகிராமில் காட்டுயிர்கள் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டு இருந்ததைக் கண்டறிந்தோம். பிறகு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதை நீக்கியது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அவாஸ் என்ற காட்டுயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சாரக் குழுவின் ஆய்வாளர்கள், ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட “129 காட்டுயிர் கடத்தல் குறித்த தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை” மேற்கோள் காட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அவற்றில், சிறுத்தைகள், குரங்குகள், அலங்குகள், அலங்குகளின் செதில்கள், சிங்கக் குட்டிகள், யானை தந்தங்கள், காண்டாமிருக கொம்பு ஆகியவை அடங்கும்.

அந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, “அழிந்து வரும் காட்டுயிர்கள் அல்லது அவற்றின் பாகங்களை வர்த்தகம் செய்வதை நாங்கள் தடை செய்கிறோம். கணினிமய காட்டுயிர் கடத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டணியின் அர்ப்பணிப்பு மிக்க உறுப்பினராக மெட்டா உள்ளது,” என்று தெரிவித்தது.

யானை பாதுகாப்பு முன்னெடுப்பு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஸ்கேன்லான், இந்த ஆன்லை தளங்கள் “மிகப்பெரிய தாக்கத்தை” கொண்டிருந்தன என்று கூறினார்.

மேலும், “அவை கவனமாகப் பாதுகாக்கப்படாவிட்டால், குற்றவாளிகள் எந்த நாட்டில் இருந்தும் சட்டவிரோத பொருட்களை விற்க ஒரு திறம்மிக்க இடமாகப் பயன்படுத்தப்படலாம். எனவே ஒரு கணினிமய தளம் கண்காணிப்பு குறித்துப் பெரியளவில் பேசிவிட்டு, அதைச் செய்வதில் தோற்கும்போது, மிகவும் கவலையளிக்கிறது,” என்றும் கூறினார்.

ஆப்பிரிக்க யானைகள்

பட மூலாதாரம், Frank AF Petersens

“சமீபத்திய ஆண்டுகளில் சட்டபூர்வ யானைத் தந்த சந்தைகளை மூடுவதில் சர்வதேச சமூகம் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதற்குப் புதிய பிரிட்டன் சட்டம் சமீபத்திய உதாரணமாக விளங்குகிறது. ஆனால், இந்த முன்னேற்றம் இணையத்தில் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது,” என்றும் ஜான் ஸ்கேன்லான் கூறினார்.

ஆப்பிரிக்க யானைகளுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களின் வடிவம் மாறி வருவதாக காட்டுயிர் பாதுகாவலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

“தந்தத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வேட்டை, குறிப்பாக மத்திய ஆப்பிரிக்காவில், சில பிராந்தியங்களில் இன்னமும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் இது மிகவும் குறைந்துள்ளது.

பெருகிவரும் மனித மக்கள் தொகைக்கும் யானைகளுக்கும் இடையே நிலம் மற்றும் வளங்களுக்காக அதிகரித்து வரும் போட்டியிலிருந்து, மிகப்பெரிய அச்சுறுத்தல் வருவதாக நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக காலநிலை மாற்றத்தின் தாக்கம் உணரப்படத் தொடங்கியுள்ளது.” என்று ஸ்கேன்லான் கூறினார்.

மருத்துவர் காக்ஸ் மற்றும் பிற காட்டுயிர் வர்த்தகம் தொடர்பான வல்லுநர்கள் கவலை கொண்டுள்ளார்கள். இருப்பினும், தேசிய சட்டம் கடுமையாக்கப்படுவதால், தந்தம் போன்ற பல தயாரிப்புகள், குறிப்பாக இந்தத் தளங்கள் கண்காணிக்கபடாவிட்டால், இணையத்தில் விற்பனை செய்யப்படலாம்.

“இபே போன்ற தளங்கள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விற்பனையாளர்களை சர்வதேச எல்லைகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பதன் மூலம் செயல்படுகின்றன,” என்று மருத்துவர் காஸ் சுட்டிக் காட்டினார்.

தந்த வர்த்தகம் மீதான தடையை அமல்படுத்தத் தவறிய நிறுவனம் காட்டுயிர்களை அச்சுறுத்தக்கூடிய வர்த்தகத்திற்குப் பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »