Press "Enter" to skip to content

எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள் – 400 மீட்டருக்கும் கீழாக முகாமை மாற்றும் நேபாளம்

  • நவீன் சிங் கட்கா
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை இடமாற்றம் செய்ய நேபாளம் தயாராகி வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மனித செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்த இடம் பாதுகாப்பற்றதாகி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது.

வசந்த காலத்தில் எவரெஸ்ட் மலை ஏறக்கூடிய சுமார் 1,500 பேர் வரை பயன்படுத்தும் விதமான இந்த பேஸ் கேம்ப், வேகமாக உருகி வரும் கும்பு பனிமலைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து தற்போது இருப்பதை விட குறைவான உயரத்தில் ஒரு புதிய மாற்று இடத்தில் இந்த ‘பேஸ் கேம்ப்’ அமைக்கப்படும் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

உருகும் பனி நீரானது பனிமலையின் நிலைத்தன்மையை உருக்குலைக்கிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் என்றால், முகாம்களில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே விரிசல்கள் ஏற்படுகின்றன என்று மலையேற்ற வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை இயக்குநரான `தாரநாத் அதிகாரி` பிபிசியிடம் பேசும்போது, “மாற்று இடத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக பங்குதாரர்கள் அனைவரிடமும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

எவரெஸ்ட் அடிவார முகாம்

பட மூலாதாரம், PRAKASH MATHEMA

“மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ளும் விவகாரம் தான் இது. அதுபோக மலையேறும் வணிகத்தின் நிலைத்தன்மைக்கும் இது இன்றியமையாததாகி விட்டது.”

முகாம் தற்போது 5,364 மீட்டர் உயரத்தில் உள்ளது. புதிய முகாம் இதிலிருந்து 200 மீ முதல் 400 மீ வரையிலான தூரத்துக்கு குறைவான பகுதியில் இருக்கும் என்று அதிகாரி கூறினார்.

எவரெஸ்ட் பகுதியில் மலையேறுவதை எளிதாக்குவதற்கும் கண்காணிப்பதற்கும் நேபாள அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

எவரெஸ்ட்

இமயமலை பகுதியில் இருக்கும் ஏராளமான பனிமலைகளில் ஒன்றான கும்பு பனிமலை புவி வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2018 இல் லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அடிவார முகாமுக்கு அருகில் உள்ள பனிமலைப்பகுதி ஆண்டுக்கு 1 மீ என்ற விகிதத்தில் உருகி வருவதாகத் தெரிய வந்தது.

பனிமலையின் பெரும்பகுதி பாறைக் குப்பைகளால் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்கிடையில் வெளியே தெரியும் பனிப்பகுதிகளும் உள்ளன. இந்த பனிப்பகுதிகள் உருகுவதால் பனிப்பாறை சீர்குலைகிறது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஸ்காட் வாட்சன் பிபிசியிடம் கூறினார்.

அப்படி பனிப்பகுதிகள் உருகும்போது, மேலே இருக்கும் பாறைக்கழிவுகளான சிறு சிறு பாறைகள் உருண்டு கீழே விழுவதன் மூலம் நீர்நிலைகளும் உருவாகின்றன.

எவரெஸ்ட் அடிவார முகாம்

பட மூலாதாரம், WORLD VLOG CHALLENGE

பனிப்பாறைகளின் மேற்பரப்பில் அதிகரிக்கும் இதுபோன்ற பாறை விழும் நிகழ்வுகளும், அதிகரித்து வரும் உருகிய நீர் அளவும் பேராபத்தாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், ஆண்டு ஒன்றுக்கு சுமார் 9.5மில்லியன் கனமீட்டர் நீரை இந்த பனிப்பாறைகள் இழக்கின்றன என்றும் ஆய்வாளர் வாட்சன் தெரிவிக்கிறார்.

உறங்கும்போது விரிசல்கள்:

பேஸ் கேம்ப்புக்கு இடையே செல்லும் ஒரு நீர் பாதையானது மெல்ல, மெல்ல விரிவடைந்து கொண்டே வருகிறது என்று நேபாள அதிகாரிகளும் மலையேறிகளும் சொல்கின்றனர். அதுபோலவே மேற்பரப்பில் பிளவுகள் ஏற்படுவதும் கூட, முன்பை விட தற்போது அதிகமாக நடைபெறுகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

அந்த வரிசையில், “அதிர்ச்சியூட்டும் விதமாக, நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதெல்லாம் தரையில் விரிசல்கள் ஏற்படுவதைப் பார்க்கிறோம்” என்கிறார் அடிவார முகாமில் தங்கியிருந்த நேபாள ராணுவ அதிகாரியான கர்னல் கிஷோர் அதிகாரி.

வசந்த காலத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தூய்மைப் பிரசாரத்துக்கு தலைமை தாங்கியபோது இவர் அடிவார முகாமில் தங்கியிருந்தார்.

“நிலத்தில் ஏற்படும் விரிசல்கள் வேகமாக பெரிதாகிக்கொண்டிருந்தன. நாங்கள் உள்ளே விழுந்திருக்கக்கூடும். இந்த உறைய வைக்கும் அனுபவம் எங்கள் பலருக்கும் மறுநாள் காலையில் கிடைத்தது’ என்கிறார் சாகர்மாதா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழுவின் அடிவார முகாம் மேலாளர் ஷெரிங் என்சிங் ஷெர்பா.

எவரெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

பனிப்பாறைகள் நகர்கிற, விழுகிற பெரும் சப்தங்களும் கூட அடிக்கடி கேட்கின்றன. ஒரு சம தளமான இடம் உருவில் பெருத்து உயர்வதற்கு முன்பெல்லாம் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும். ஆனால், தற்போது ஒவ்வொரு வாரமும் நடக்கிறது.

அத்துடன் அதிகமான மக்கள் இங்கு இருப்பது கூட பிரச்னைக்கு கூடுதல் காரணமாக மாறுகிறது. குறிப்பாக பேஸ் கேம்ப்பில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 4,000 லிட்டர் சிறுநீர் கழிக்கப்படுகிறது.

மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய், கல்லெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களால் உருவாகும் வெப்பமும் பனிப்பாறை உருகுவதில் பங்கு வகிக்கிறது.

இந்த நிலையிலும், தற்போது இருக்கும் அடிவார முகாம் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குப் பயன்படலாம் என்று தெரிவிக்கிறார் ஷெர்பா.

ஆனால், 2024ஆம் ஆண்டுக்குள் இந்த இடமாற்றம் நடந்தாக வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் அடிவார முகாமில் சூழலியல் மற்றும் தொழில்நுட்ப ரிதியீலான ஆய்வுகளை செய்தோம். ஆனால், இடமாற்றம் செய்யும் முன்பாக இங்கிருக்கும் உள்ளூர் மக்களிடன் கலாசாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் நேபாள சுற்றுலா துறை இயக்குநர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »