Press "Enter" to skip to content

இந்திய கோதுமை இறக்குமதிக்கு யுஏஇ நான்கு மாத தடை விதித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலிருந்து வாங்கப்படும் கோதுமையை அடுத்த நான்கு மாதங்களுக்கு வேறு யாருக்கும் விற்கப்போவதில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி, இந்தத் தடை 2022 மே 13 முதல் நடைமுறைக்கு வரும். இந்திய கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மாவு மற்றும் இதர பொருட்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

தற்போதைய சர்வதேச சூழ்நிலையே இந்த முடிவுக்குக் காரணம் என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், துபாய் அல்லது அபுதாபி, இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கோதுமையை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதை இந்தியா விரும்பவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், “துபாய் அல்லது அபுதாபிக்கு ஏற்றுமதி செய்த தானியங்கள் அல்லது கோதுமையை வேறு எந்த நாட்டிற்கும் வழங்குவதை இந்தியா விரும்பவில்லை. அதை உள்நாட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த நன்மைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது,” என்று ஒரு முக்கிய தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தி தெரிவிக்கிறது.

கோதுமை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளின் பட்டியலில் இருந்து இந்த நாடுகளை விலக்கி வைக்க இந்தியா தயாராக உள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக இந்தியா மே 14 அன்று அறிவித்தது. இருப்பினும், உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ள நாடுகள் இந்தத் தடையின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இது தவிர, ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏற்றுமதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. மேலும், இந்திய அரசின் அனுமதியின் பேரில், சில நிபந்தனைகளுடன் ஏற்றுமதி தொடரும்.

உள்நாட்டு சந்தையில் கோதுமை விலை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது என்று அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்தது.

முடிவுக்கான காரணம் என்ன?

அரசின் இந்த முடிவின் பின்னணியில், இந்தியாவுடனான வலுவான ராஜ்ஜீய உறவுகள் இருப்பதாக நிபுணர்களை மேற்கோள் காட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணையதளமான தி நேஷனல் நியூஸ் தெரிவித்துள்ளது.

“இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸை ஒரு சிறப்பு கூட்டாளியாகக் கருதுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானது. அதனால்தான் அரசு இந்த சிறப்பு முடிவை எடுத்துள்ளது,” என்று மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் கிஷோர் நர்னே, தி நேஷனல் நியூஸிடம் தெரிவித்தார்.

கோதுமை, வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாவிட்டால், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி விலக்கு அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவுடன் வலுவான தூதரக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மற்றும் தேவை நிலையில் உள்ள நாடுகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.

இந்தியா எவ்வளவு கோதுமை வழங்குகிறது?

2021-22 க்கு இடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா 4.71 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் விலை சுமார் 13.653 கோடி டாலர்களாகும். கடந்த ஆண்டு இந்தியா ஏற்றுமதி செய்த உணவு தானியங்களில் 6.5%, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதிக்கு இது ஒரு பெரிய அளவு இல்லை என்றாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இது மிக அதிகம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் டன் கோதுமையை உட்கொள்கிறது மற்றும் அதை முழுமையாக இறக்குமதி செய்கிறது என்று அமெரிக்க விவசாய அமைச்சகம் தெரிவிக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோதுமை இறக்குமதியில் 50% க்கும் அதிகமான பங்கு, ரஷ்யாவில் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து கனடா, யுக்ரேன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. 2020-21 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியாவும் மாறியுள்ளது. இந்தியா இப்போது 1.88 லட்சம் டன்களை வளைகுடா கூட்டமைப்புக்கு ஏற்றுமதி செய்கிறது.

2021-22 ஆம் ஆண்டில், கட்டுப்பாடுகளை விதிக்கும் முடிவுக்கு முன், இந்த ஏற்றுமதி மேலும் அதிகரித்தது. ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக, கருங்கடலுடன் இணைக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜூலை முதல் சர்வதேச சந்தையில் ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து கோதுமை வரும் என்று கருதப்படுவதால், விநியோகம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோதுமை

பட மூலாதாரம், ANI

யுஏஇ அறிக்கையில் என்ன இருக்கிறது?

சர்வதேச அளவில் நிகழ்வுகள் காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான வலுவான மற்றும் செயல்திட்ட கூட்டாண்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுப்பதாக அந்நாடு கூறியுள்ளது.

மே 13ஆம் தேதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாட்டிற்கு விற்க விரும்பும் நிறுவனங்கள், தேவையான ஆவணங்களை அளித்து இதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அமைச்சகம் விரிவாக விளக்கியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் 35 லட்சம் பேர் அங்கு வசிக்கின்றனர். அதே நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மக்கள் தொகையில் 35% பேர் இந்தியர்கள். இது மற்ற வளைகுடா நாடுகளை விட அதிகம்.

கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா விமானம் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கியது. அந்த நேரத்தில், சீனாவின் விநியோகச் சங்கிலி முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. பருப்பு வகைகள், சர்க்கரை, தானியங்கள், காய்கறிகள், தேநீர், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா ஒரு முக்கியமான ஏற்றுமதியாளராக ஆனது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கலாசார அமைச்சர் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அங்கு நடைபெறவுள்ள விழாவில் இந்திய தூதர் சஞ்சய் சுதீருடன் உரையாடுவார்.

புகழ்பெற்ற ஷேக் ஃஜாயித் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலையில் யோகாசனமும் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில் 8 முதல் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் கோதுமை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அதிக உள்நாட்டு நுகர்வு காரணமாகக் குறைந்த அளவே ஏற்றுமதி செய்கிறது. இந்தியா கடந்த ஆண்டு சுமார் 10.8 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்தது. ஆனால் அதில் 70 லட்சம் டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக இந்தியா விதித்த கட்டுப்பாடுகள்

வட இந்தியாவில் கோதுமை சாகுபடி அதிகம். மத்திய இந்தியாவில், மத்திய பிரதேசத்திலும் அதிக உற்பத்தி உள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே கோதுமை அறுவடை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வட இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம் நிலவியது. இதனால் கோதுமை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோதுமைக்கு மார்ச் வரை 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆனால் மார்ச் மாதத்தில், வட இந்தியாவின் பல பகுதிகளில் இதைவிட மிக அதிகமாக வெப்பம் இருந்தது.

கோதுமை விளைச்சல் சுமார் 5 சதவிகிதம் குறைவாக இருப்பதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும். இரு நாடுகளுக்கும் இடையே கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட உள்ளது. இஸ்ரேல், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகியவை செவ்வாயன்று I2U2 கூட்டணியை அறிவித்தன. இந்த கூட்டணியின் கீழ் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்காக நான்கு நாடுகளும் இணைந்து செயல்படும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »