Press "Enter" to skip to content

நோபல் பரிசை விற்ற ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ்: கிடைத்த ரூ.808 கோடியை யுக்ரேன் போர் அகதிகளுக்கு செலவிட திட்டம்

  • ஜார்ஜ் ரைட்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

2021ம் ஆண்டு தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை சுமார் 808 கோடி ரூபாய்க்கு இணையான மதிப்புக்கு விற்ற ரஷ்யப் பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் அதனை யுக்ரேன் போர் அகதிகளின் நலனுக்கு செலவிடப் போவதாகக் கூறியுள்ளார்.

‘நொவாயா கசெட்டா’ என்ற சுயேச்சையான செய்தித்தாளின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் டிமிட்ரி முராடோவ். ரஷ்யாவில் பேச்சுரிமைக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக, 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை கூட்டாகப் பெற்றவர் இவர். இவரோடு நோபல் பரிசை பகிர்ந்துகொண்டவர் மற்றொரு பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா. இவர் பிலிப்பைன்சின் ரேப்ளர் என்ற கணினிமய பத்திரிகையின் இணை நிறுவனர்.

முராடோவ், ரெஸ்ஸா இருவருமே தங்கள் நாடுகளின் ஆட்சியாளர்களைக் கோபப்படுத்தும் வகையிலான புலனாய்வு செய்தியை வெளியிட்டவர்கள். அதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தின், பேச்சுரிமையின் குறியீடாகப் பார்க்கப்படுகிறவர்கள்.

2022 மார்ச் மாதம் யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கிய நிலையில் இந்த செய்தித்தாள் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது.

யுக்ரேன் மீதான ரஷ்ய நடவடிக்கையை போர் என்று குறிப்பிடுகிற ரஷ்ய நாட்டில் செயல்படும் ஊடகங்கள் கடும் அபராதம் செலுத்தவேண்டியிருக்கும் அல்லது மூடப்படவேண்டியிருக்கும் என்று ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த முடிவை எடுத்தது நொவாயா கசெட்டா.

1px transparent line
1px transparent line

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்றே ரஷ்ய அரசாங்கம் குறிப்பிடுகிறது.

டிமிட்ரியின் நோபல் பதக்கத்தை யார் ஏலத்தில் எடுத்தார்கள் என்ற விவரத்தை ஏலம் விட்ட ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் டிமிட்ரி ஒரு தொடர் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது அசிட்டோன் கலந்த சிவப்பு பெயின்டை கொண்டு அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலை நடத்திய ஆண், “முராடோவ், திஸ் இஸ் ஃபார் அவர் பாய்ஸ்,” என்று சத்தமிட்டார்.

முராடோவ்

பட மூலாதாரம், DMITRY MURATOV

சோவியத் சோஷியலிஸ்ட் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த பிறகு, 1993ம் ஆண்டு நொவாயா கசெட்டா செய்தித் தாளை நிறுவிய பத்திரிகையாளர்களில் ஒருவர் முராடோவ்.

2000ம் ஆண்டில் இருந்து இதுவரை அந்த செய்தித் தாளை சேர்ந்த 6 பத்திரிகையாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அவர்களது பணிக்காக கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் புலனாய்வு செய்தியாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவும் ஒருவர்.

நோபல் பரிசின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இந்த தங்கப்பதக்கம் நியூயார்க் நகரில் விற்பனை செய்யப்பட்டதில் கிடைத்த பணம், யுக்ரேனின் புலம் பெயர்ந்த சிறுவர்களின் நலனுக்காக யுனிசெஃப் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு உதவும் என்று ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது; அதில் அதிகம் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவேண்டும் என்பதை ஆட்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே முக்கியமான செய்தி,” என்று ஹெரிடேஜ் ஆக்ஷன்ஸ் வெளியிட்ட ஒரு காணொளியில் பேசியிருக்கிறார் முராடோவ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »