Press "Enter" to skip to content

சீனாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் – சமூக ஊடகங்களில் கிளம்பும் எதிர்ப்புகள்

  • பிரான்சிஸ் மாவோ
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், WEIBO

சீனாவின் டாங்ஷான் நகரத்தில் உள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமையன்று இரவு பரபரப்புடன் இருந்தது. அங்கு சில பெண்கள் ஒன்றாக உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கி ஒருவர் வந்தார்.

அந்தப் பெண்களில் ஒருவரை அவர் தொடும் விதம் பிடிக்காமல், அந்தப் பெண் ‘தள்ளிச் செல்’ என்றார். அதற்குப் பதிலாக, அவர் அந்தப் பெண்ணின் தலையைப் பிடித்து இழுத்து, தரையில் தள்ளுகிறார்.

அவருடன் சில நண்பர்களும் சேர்ந்து கொண்டு, நாற்காலிகளையும் பாட்டில்களையும் கொண்டு அந்தப் பெண்களை அடிக்கிறார்கள். அவர்களில் சிலரை வெளியில் இழுத்துச் சென்று, அவர்களின் தலையில் அடிக்கிறார்கள்.

சீனாவில் பொதுவெளியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையின் ஓர் உதாரணம் இது. கடந்த ஜனவரி மாதம், ஒரு பெண் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த செய்தி இதே போன்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களும் இணையத்தில் எதிர்பாராத அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொண்டது. மேலும், மிகவும் அரிதாக நடக்கும் போராட்டமாகவும் மாறியது. பெண்கள் மீதான வெறுப்பையும் ஆண்களின் அதிகாரத்தையும் எதிர்த்து அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். குறிப்பாக, இளம் பெண்கள் கேள்வி எழுப்பினார்கள்.

“சீனர்கள் தங்கள் சொந்த சமூகத்தை எப்படிப் பார்க்கிறார்கள், குறிப்பாக பாலின விதிமுறைகள், அது சார்ந்த பிம்பங்கள் ஆகியவற்றை எப்படி அணுகுகின்றனர் என்பதை ஆழமாக சீர்குலைத்துள்ளது,” என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சீன ஆராய்ச்சியாளர் பிச்சமன் யோபான்டாங் (Pichamon Yeophantong) கூறினார்.

சீனாவில் நடக்கும் குடும்ப வன்முறை

பெண்கள் தங்களின் துணையால் பொது இடங்களில் தாக்கப்படும் காட்சிகள் ‘இணையத்தில் இருப்பது கவலையளிக்கக்கூடிய பொதுவான விஷயம்’ என்று பிபிசியின் சீன ஊடக கண்காணிப்பு ஆய்வாளர் கெர்ரி ஆலன் கூறுகிறார்.

“ஒவ்வொரு நாளும் ரகசியமாக படமாக்கப்பட்ட குடும்ப வன்முறை அல்லது கண்காணிப்பு ஒளிக்கருவி (கேமரா) பதிவுகள் மூலம் எடுக்கப்பட்ட துன்புறுத்தும் காட்சிகளை நான் பார்க்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, மத்திய சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் 1,000 ஆண்களிடம் ஓர் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் துணைக்கு எதிராக உடல் ரீதியான வன்முறை அல்லது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர். அதே எண்ணிக்கை அளவில், தங்கள் கௌரவத்தைக் காக்க வன்முறையைப் பயன்படுத்துவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவில் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கான காரணம் அங்கு ஆழமாக வேரூன்றியுள்ள பாலின விதிமுறைகள் தான் என்று ஐ.நா அறிக்கை கூறியுள்ளது. அந்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டில் தான் குடும்ப வன்முறை குற்றவியல் குற்றமாக ஆக்கப்பட்டது.

சீன சமூகத்தில், விடாப்பிடியாக இருப்பது, பாலியல் வலிமை மற்றும் சில சந்தர்ப்பங்களில் தங்கள் பலத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை ஆண்மையின் அடையாளங்களாக இருக்கின்றன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், அங்கு இது ஒரு தம்பதியினருக்கு இடையிலான தனிப்பட்ட விஷயமாக பரவலாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இத்தகைய விஷயங்களில் தலையிட தயக்கம் நிலவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நகரப்புறத்தில் வசித்தப்போது, பகல் நேரத்தில் பல வன்முறைகளை தான் கண்டதாக ஆலன் கூறினார். அங்குக் கூடியிருந்தவர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் என்று அவர் கூறுகிறார்.

டாங்ஷானில் அதுதான் நடந்தது. தாக்கியவரை பாதிக்கப்பட்டவருக்குத் தெரியாது. ஸுஜௌவிலும் அதுவே நடந்தது. அங்கு ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு குடிசையில் அவரது கழுத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார்.

அவரது மனநோய் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அவர் பூட்டி வைக்கப்பட்டதாக அவரது கணவர் கூறினார். ஆனால் காவல்துறை விசாரணையில் அவர் 1990களில் மணப்பெண்ணாகக் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறுதியானது.

ஒரு வலைதள பதிவர் அந்தக் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரைக் கண்டிருக்கிறார். அவரது நிலையை, இணையத்தில் பதிவிட்ட பிறகு அது மிகுதியாக பகிரப்பட்டது. அவர் கண்டுபிடிக்கப்படுவதற்கு இவ்வளவு காலம் எடுத்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“அவர் ஒரு நபர், பொருள் அல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாக எட்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர் இன்று தான் கண்டுப்பிடிக்கப்படுகிறார். இதில் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளில் இருப்பவர்கள் எதுவும் அறியாதவர்கள் அல்ல,” என்று சமூக ஊடக தளமான வெய்போவில் ஒரு பயனர் எழுதியுள்ளார்.

குடிசையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்ணின் காணொளி ஜனவரி மாதம் சீனாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சங்கிலியின் பிணைக்கப்பட்ட பெண்

பட மூலாதாரம், DOUYIN

மாற்றத்திற்காக எழும் குரல்கள்

சீனாவில் குற்றங்களின் குறைந்த விகிதங்கள் மற்றும் அதிக அளவிலான கண்காணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டாங்ஷான் மற்றும் ஸுஜௌவில் நடந்த சம்பவங்களில் காட்டப்படும் வன்முறையின் அளவைக் கண்டு சீனப் பெண்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர்.

“இதுகுறித்து இளைய தலைமுறையினரிடம், குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் பேசுகையில், பலரும் இந்த நவீன சீன சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் இன்னும் உள்ளன என்பதை அறிந்து உண்மையான அதிர்ச்சியை வெளிப்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்,” என்று மருத்துவர் யோபான்டாங் கூறினார்.

பலர் முதல்முறையாக பாலின இயக்கவியலைப் பற்றிச் சிந்திக்கின்றனர், என்று அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடகங்களில் இயங்கும் இளம் சீனர்கள் மத்தியில் சமூக மாற்றத்திற்கான குரல்கள் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. அவர்கள் #Metoo போன்ற உலகளாவிய இயக்கங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

வெய்போவில் இந்த இரண்டு நிகழ்வுகளைப் பற்றிய சில பிரபலமான பதிவுகள், ஆணாதிக்க கன்ஃபூசியன் சிந்தனைகளை இன்னமும் அதிகமாக ஊக்குவிக்கக்கூடிய ஒரு சமூகத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த கவலைகளை வெளிப்படுத்தின.

“பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறையில் ஈடுபட ஆண்களை ஆதரிக்கும், ஊக்குவிக்கும் மற்றும் தூண்டும் சக்திகள் நமது சூழலில் இன்னும் உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்,” என்று ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.

இந்த வழக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு பதிலளித்தனர் என்பது குறித்தும் பலர் அதிருப்தி தெரிவித்தனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் அத்தகைய விஷயங்கள் பாலினம் எவ்வாறு பங்காற்றுகிறது என்பதைக் குறைத்து மதிப்பிடுவதாகக் குற்றம் சாட்டுக்கின்றனர்.

இந்த டாங்ஷான் சம்பவத்தில், உள்ளூர் குண்டர்களுடன் தாக்கியவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதன் மீதும், அவர்களின் குற்றவியல் பின்னணி குறித்தும் ஆரம்ப கட்ட காவல்துறை விசாரணையும் ஊடகமும் கவனம் செலுத்தியது.

அந்தப் பெண் ‘உரையாடலுக்கு’ மட்டுமே அணுகப்பட்டதாக ஓர் அறிக்கை கூறியது. ஆனால் வெய்போவில் பல பயனர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், இது பாலியல் துன்புறுத்தல் என்று கூறினர்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண் குறித்த சம்பவத்தின் மீதான கோபம், பொதுமக்களின் எதிர்ப்பால் அரிதாக நடக்கும் போராட்டத்தையும் தூண்டியது.

தனித்தனி சம்பவங்களில், இரண்டு பெண்கள் அவரைக் காப்பாற்றுவதற்காக காரில் சென்றனர். முகமூடி அணியாத அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அடையாளங்களுடன் தங்களை ஒளிப்படம் எடுத்து இணையத்தில் படங்களை வெளியிட்டனர். ஒரு புத்தகக் கடை பெண்ணிய இலக்கிய வாசகமாக அமைத்தது.

இது ஒரு திருப்புமுனையா?

“பெண்கள் இப்போது கோபமாக உள்ளனர். அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் இது அடிப்படை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சீன ஆராய்ச்சியாளர் யாகியு வாங் கூறினார்.

பொது வெளியில் ஏற்படும் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு, அதிகாரிகள் விசாரணைகளையும் அதற்கான படைகளையும் அமைத்து இரண்டு வழக்குகளைக் கையாள்கின்றனர்.

ஸுஜௌவில் இருந்த பெண்ணின் நிலை குறித்து நிலவும் கோபத்திற்கு மத்தியில், உள்ளூர் திருமண உரிமங்கள் மீதான சோதனைகளைக் கடுமையாக்குவதன் மூலம் கடத்தல் சம்பவங்கள் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

உணவகத்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் டாங்ஷானில் இரவு ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர். மேலும் உள்ளூர் காவல்துறை தலைமையை பதவி நீக்கம் செய்துள்ளனர். இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், சீனாவில் குடும்ப வன்முறை வழக்குகளைக் கையாளும் கியோ ஜிங் (Guo Jing), பாலின அடிப்படையிலான குற்றங்களை அதிகாரிகள் ஒரே ஒரு சம்பவமாகக் கருதுவது வழக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து தண்டிப்பதன் மூலம் தீர்க்கப்படுகின்றது என்றும் கூறுகிறார்.

“இந்த சம்பவங்கள் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கும் விஷயம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை; இதற்கான பரந்த பார்வையோ அல்லது கட்டமைப்பை சீர்செய்வதற்கான தீர்வுகளோ இல்லை,” என்று அவர் பிபிசி சீனாவிடம் கூறினார்.

கடந்த மார்ச் மாதம், அந்நாட்டு தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியில் சில உறுப்பினர்கள் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை வலுப்படுத்தவும் மனித கடத்தல்களுக்கு எதிரான தண்டனைகளை அதிகரிக்கவும் பரிந்துரைத்தனர்.

ஆனால் இவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை எந்த மாற்றத்தையும் குறிப்பிடவில்லை.

இதற்கிடையில், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.

டாங்ஷான் தாக்குதலை அடுத்து, வெய்போ செயலியிலிருந்து ‘பாலின மோதலைத் தூண்டும்’ கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியது.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண் குறித்த பழைய பதிவுகள் நீக்கப்பட்டன. அவை பெரும்பாலும் பாலியல் பற்றிய விவாதங்களை உள்ளடக்கியவையாக இருந்தன.

சமீபத்திய ஆண்டுகளில், சீனா தனது சிவில் உரிமைக் குழுக்களை எவ்வாறு அழித்து வருகிறது என்பதைப் பார்க்கும்போது, அடிமட்ட செயல்பாட்டைத் தக்கவைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று வாங் கூறுகிறார்.

இந்த ஒடுக்குமுறை பெண்களின் உரிமை செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். குரல் கொடுக்கும் பெண்ணியவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்மட்ட அளவில் நடந்த #MeToo குறித்த வழக்குகள், நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் சம்பந்தப்பட்ட சமீபத்திய வழக்கு, பாலியல் வன்கொடுமை குறித்து குற்றச்சாட்டு எழுப்புபவர்கள் மௌனிக்கப்படுகிறார்களோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“பாலினப் பிரச்னைகளில் சிறப்பாகச் செயல்பட அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குரல்கள் அகற்றப்பட்டுள்ளன,” வாங் கூறினார்.

“இவையனைத்தும் சீனாவில் பெண்களின் உரிமைகளுக்கு ஆபத்தானவை.”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »