Press "Enter" to skip to content

சிங்கப்பூர் மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை – வரலாறு என்ன?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Getty Images

மலேசியா, சிங்கப்பூர் இடையே கடந்த அறுபது ஆண்டுகளாக தண்னீர் பிரச்னை ஒன்று நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு என்ன? இதன் வரலாறு என்ன?

மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது.

இந்த தண்ணீர் பகிர்வுக்காக மலேசியா, சிங்கப்பூர் இடையே 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், புதிய ஒப்பந்தங்களாக மாறின.

எனினும் நாள்களின் போக்கில் சில பிரச்னைகள் தலைதூக்கின. தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா சில கோரிக்கைகளை முன்வைக்க, சிங்கப்பூர் அவற்றை ஏற்க மறுக்க, இரு நாடுகளும் இப்போது அனைத்துலக நடுவர் மன்றத்தை அணுகும் அளவுக்குப் பிரச்னை முற்றியுள்ளது.

இந்தப் பிரச்னையின் ஆணிவேர் என்ன என்பதை சுருக்கமாக சில வரிகளில் இவ்வாறு குறிப்பிடலாம்.

“இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தப்படி, தினமும் மலேசியாவிடம் இருந்து 250 மில்லியன் கேலன் தண்ணீர் பெறும் சிங்கப்பூர் அரசு, அதிலிருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 2061 காலாவதியாகும்,” என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2%க்கு அதிகமாகவும் சிங்கப்பூரில் இருந்து தண்ணீர் வாங்குகிறது ஜோகூர் மாநிலம். எனினும் இவ்வாறு பகிரப்படும் நீருக்கான விலை என்ன என்பதில்தான் சிக்கல். குறைவான விலைக்கு தண்ணீரைப் பெறும் சிங்கப்பூர், அதை சுத்திகரித்த பின்னர் விற்கும்போது அதிக தொகையைப் பெறுகிறது என்றும் இதை ஏற்க இயலாது என்றும் மலேசியா சுட்டிக்காட்டுகிறது.

1962இல் கையெழுத்தான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம்

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

இனி வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் என்ற தனி நாடு 1965ஆம் ஆண்டு உதயமானது. எனினும் அதற்கும் முன்னதாகவே தண்ணீர் பகிர்வு தொடர்பாக 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின்னர் 1962ஆம் ஆண்டு சில திருத்தங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்றளவும் நீடிக்கிறது. இதில் துணை ஒப்பந்தம் ஒன்று 1990ல் கையெழுத்தானது. இவ்விரு ஒப்பந்தங்களின்படி மலேசிய எல்லையில் உள்ள ஜோகூர் நதிநீரை சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரின் அன்றாட தண்ணீர் தேவை என்பது 430 மில்லியன் கேலன்கள். இதில் சுமார் சரிபாதி அளவு மலேசியாவிடம் இருந்து கிடைக்கிறது.

“1965ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றபோது, இவ்விரு ஒப்பந்தங்களும், சிங்கப்பூர் சுதந்திர ஒப்பந்தத்தில் ‘பரஸ்பர அரசு உத்தரவாதங்களாக’ குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சுதந்திர ஒப்பந்தம் மலேசியா, சிங்கப்பூர் அரசாங்களுக்கு இடையே கையெழுத்தாகின. எந்தவொரு தரப்பும் ஒப்பந்தத்தில் உள்ளவற்றை தன்னிச்சையாக மாற்ற இயலாது,” என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தத்தின்படி, நீர் பிடிப்புப் பகுதிகளாக பயன்படுத்தப்படும் மலேசிய நிலப்பகுதிக்கு சிங்கப்பூர் வாடகை செலுத்த வேண்டும் என்று முடிவானது. ஜோகூர் மாநிலத்தில் கட்டடத் தொகுப்புகளுக்கு என்ன வாடகை கிடைக்குமோ, அதை செலுத்த ஒப்புக்கொண்டது சிங்கப்பூர்.

மேலும், ஒப்பந்தப்படி மலேசியாவில் இருந்து பெறும் ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் சிங்கப்பூர் 3 காசுகள் தர வேண்டுமென விலை நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளையில், கொள்முதல் செய்த தண்ணீரில் இருந்து 2% சுத்திகரிக்கப்பட்ட நீரை ஜோகூர் மாநிலத்துக்கு வழங்கும் சிங்கப்பூர், அதற்காக ஆயிரம் கேலன் நீருக்கு 50 காசுகள் பெறுகிறது.

1973ஆம் ஆண்டு வரை இரு நாடுகளும் ஒரே பணம்யை பயன்படுத்தி வந்தன. அது முடிவுக்கு வந்ததும் தண்ணீர் பகிர்வுக்கான விலை மலேசிய ரிங்கிட்டில் நிர்ணயிக்கப்பட்டது.

அதாவது ஒவ்வொரு ஆயிரம் கேலன் தண்ணீருக்கும் தலா 3 காசுகள் (ஒரு காசு என்பது ஒரு சென் (sen) விலை நிர்ணயிக்கப்பட்டது. (நூறு சென்கள் ஒரு ரிங்கிட் ஆகும்.)

1962 ஒப்பந்தப்படி, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விலை குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அணை கட்ட அனுமதித்த மலேசியா

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

1990ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) மற்றும் ஜோகூர் மாநில அரசு இடையே நவம்பர் 24, 1990 அன்று நீர்ப்பகிர்வு தொடர்பாக துணை ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

அதன்படி பண்டார் தெங்காரா என்ற சிற்றூரில் லிங்யூ (Linggiu) ஆற்றின் குறுக்கே அணை கட்ட சிங்கப்பூருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜோகூர் நதியில் இருந்து தண்ணீர் எடுப்பற்கு வசதியாக இந்த ஏற்பாடு அமைந்தது.

அதேவேளையில், அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலப்பகுதி, அங்கு கிடைத்திருக்கக்கூடிய இதர வருமானங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது. மேலும், ஒரு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் மலேசிய ரிங்கிட் பிரீமியமாக வழங்கப்பட்டதுடன், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் சதுர அடி நிலத்துக்கும் ஆண்டு வாடகையாக முப்பது ரிங்கிட் அளிக்கவும் சிங்கப்பூர் முன்வந்தது.

லிங்யூ அணையின் கட்டுமான, பராமரிப்புச் செலவுகளையும் அத்தீவு நாடு ஏற்றுக்கொண்டது. இன்று சிங்கப்பூரின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை.

லிங்யூ அணை ஜோகூர் அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ளது என்றாலும் அதன் கட்டுமானத்துக்கும் நடைமுறை செயல்பாட்டுச் செலவுகளுக்காகவும் சிங்கப்பூர் சுமார் 300 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவிட்டுள்ளது.

விலையை உயர்த்திய மகாதீர் மொஹம்மத்

1962 தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சில ஆண்டுகளிலேயே, அதற்குரிய விலை தொடர்பான முணுமுணுப்புகள் மலேசியாவில் தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டாலும், முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் ஆட்சிக் காலத்தில்தான் இந்த விஷயம் விவகாரமானது.

2000ஆம் ஆண்டில் தண்ணீர் பகிர்வு தொடர்பாக மலேசியா தனது கருத்தையும் கோரிக்கையையும் வலுவாக முன்வைத்தது.

ஒவ்வொரு ஆயிரம் கேலன் நீருக்கும் 3 காசுகள் (சென்) விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை 45 காசுகளாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியது மலேசியா.

அதே ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவை சந்தித்தார் மகாதீர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பும் இந்த விலை மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டன. 1962ல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் சுமார் நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டதையும், அக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட பண வீக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மலேசியா சுட்டிக்காட்டியது. அப்போதுதான் தண்ணீர்பகிர்வுக்கான விலை நியாயமானதாக இருக்கும் என்றும் மலேசியா கூறியது.

மகாதீர் மொஹம்மத்

பட மூலாதாரம், Getty Images

எனினும், 2001ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான நீரின் விலையை ஒவ்வொரு ஆயிரம் கேலனுக்கும் 60 காசுகளாக (சென்) உயர்த்த மலேசியா பரிந்துரைத்தது.

ஆனால், சிங்கப்பூர் உடனடியாக அந்த விலையேற்றத்தை ஏற்க இயலாது என்றும், 2011ஆம் ஆண்டு வேண்டுமானால் இதுகுறித்து பரிசீலிக்கலாம் என்றும் திட்டவட்டமாக கூறியது. எனினும், மலேசியா தன் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.

2002 மார்ச் மாதம் இந்த விலை நிர்ணய விவகாரம் உச்சத்தை அடைந்தது. இரு தரப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக ஆயிரம் கேலன் தண்ணீருக்கு 60 காசுகள் என்று விலையை நிர்ணயித்ததுடன், இந்தக் கட்டண விகிதத்தை பின்தேதியிட்டு, 1986 முதல் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது மலேசியா.

மேலும், 2007 முதல் 2011 வரை ஆயிரம் கேலன் மூன்று ரிங்கிட் என விலையை நிர்ணயித்தது. அதன் பின்னர் வரும் ஆண்டுகளில் பண வீக்கத்துக்கு ஏற்ப விலையை மாற்றி அமைக்கலாம் என்றும் கூறியது.

இந்நிலையில், மலேசிய, சிங்கப்பூர் அதிகாரிகள் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களையும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இந்நிலை நீடித்தது. இச்சமயம் தண்ணீர் விலையை மறு ஆய்வு செய்யப்போவதாக ஜோகூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு நோட்டீசை அனுப்பியது.

இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும், இரு அரசுகளும் கலந்து பேசி பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.

ஊடகங்களில் வெளியான கடிதப் பரிமாற்றங்கள்

மலேசியா தனது புதிய விலையில் பிடிவாதமாக இருந்த போதிலும், சிங்கப்பூர் இது நியாயமற்றது என தொடர்ந்து கூறியது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தண்ணீர் பகிர்வு-விலை சர்ச்சை குறித்து இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான கடிதப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை ஊடகங்களில் வெளியிட்டது சிங்கப்பூர். இதேபோல் மலேசிய அரசும் தனது நிலைப்பாட்டை விவரிக்கும் விதமாக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொண்டது.

இதற்கிடையே 2003, அக்டோபரில் மலேசிய பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகாதீர்.

அதன் பின்னர் தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் தலைதூக்கவில்லை. நாள்களின் போக்கில் மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரில் தண்ணீர் இருப்புப் பகுதிகள் 4 விழுக்காடாகக் குறைந்துவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே, சிங்கப்பூர் புதிய வாதத்தை முன்வைத்தது. 1961, 1962ஆம் ஆண்டுகளில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் விலையை மறு வரையறை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய சிங்கப்பூர், அதன்படி 1986 அல்லது 1987ஆம் ஆண்டுகளிலேயே விலையை மாற்றி அமைத்திருக்க வேண்டும் என்றும், இனிமேல் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியது.

ஆனால், மலேசிய தரப்பிலோ, 25 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போதுமே வேண்டுமானாலும் விலையை மாற்றி அமைக்கலாம் என்றுதான் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

தண்ணீர் பகிர்வுக்கான விலை அதிகரிப்பு: கறார் காட்டிய மகாதீர்

இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக 2018 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் மலேசியப் பிரதமரானார் மகாதீர். அடுத்த ஆண்டிலேயே தண்ணீர் விலை விவகாரம் மீண்டும் தலைதூக்கியது.

ஜோகூர் மாநிலத்தில் தண்ணீர் இருப்புப் பகுதிகள் வெகுவாக குறைந்துவிட்டதை அடுத்து, 1962ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, தண்ணீருக்கான விலையை உயர்த்துவதில் சிங்கப்பூர் ஒத்துழைக்க வேண்டும் என மலேசியா வலியுறுத்தியது.

இவ்விஷயத்தில் மகாதீர் உறுதியாக இருந்தார். எனினும், இரண்டு ஆண்டுகளில் அவரது ஆட்சி கவிழ்ந்து, புதிய அரசாங்கம் அமைந்துள்ளது. கொரோனா நெருக்கடியில் இருந்து இரு நாடுகளும் முழுமையாக விடுபட்ட பின்னர் தண்ணீர் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக நடப்பு மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.

சார்லஸ் சந்தியாகு

பட மூலாதாரம், Facebook/Charles Santiago

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரைப் பொறுத்தவரை சிங்கப்பூர் உடனான தண்ணீர் ஒப்பந்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் கறாராக இருந்தார். 2002ஆம் ஆண்டு கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சிங்கப்பூருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்கள் பலமுறை சில நாடுகளால் மீறப்பட்டுள்ளதாகவும், அதுபோன்ற காரணங்களால் சில நாடுகள் போர் தொடுக்கும் முடிவுக்குச் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், மகாதீரின் இந்த நிலைப்பாட்டை ஏற்க இயலாது என்கிறார் கடந்த 2018-19ஆண்டுகளில் மலேசியாவின் தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தண்ணீர் கொடுக்கும் மாநிலத்துக்கே இப்போது தண்ணீர் பிரச்னை

இதற்கிடையே, 2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வறட்சி, மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜோகூர் மாநில அணைகளில் உள்ள நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. அச்சமயம் சிங்கப்பூரில் இருந்து மூன்று முறை கூடுதலாக குடிநீர் வரவழைத்து நிலைமையைச் சமாளித்தது அம்மாநில அரசு.

மேலும், 2015 – 16ஆம் ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை சிறிதும் பெரிதுமாக ஜோகூர் நதி மாசடைந்துள்ளது. உரிய சுற்றுச்சுழூல் பாதுகாப்பு இல்லாததே இந்த மாசுபாடுக்கு காரணம் என்று சிங்கப்பூர் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள மலேசிய குடிமக்களுக்கே போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், சிங்கப்பூருக்கு எவ்வாறு தினந்தோறும் தண்ணீர் வழங்க இயலும் என்று மலேசிய முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த மருத்துவர் சேவியர் ஜெயகுமார் கேள்வி எழுப்புகிறார்.

சேவியர் ஜெயகுமார்

பட மூலாதாரம், Twitter/Xavier Jayakumar

மேலும், மலேசியாவில் இருந்து பெறும் தண்ணீருக்கு சிங்கப்பூர் நியாயமான விலையைக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவின் சிலாங்கூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் ஒன்றுவிட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

தண்ணீர் பெறும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளது

மலேசியா, சிங்கப்பூர் இடையேயான தண்ணீர் பகிர்வு விவகாரத்தை பெரிதுபடுத்தக் கூடாது என மலேசியாவின் தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மலேசியாவிடம் இருந்து தண்ணீர் பெறும் உரிமை சிங்கப்பூருக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“உலகில் உள்ள இயற்கை வளங்களுக்கு எந்த நாடும் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடக்கூடாது. தண்ணீருக்கும் இது பொருந்தும்.

“தண்ணீர் இயற்கை அளித்த கொடை. சிங்கப்பூர் தண்ணீர் கேட்கிறது எனில், அது அந்நாட்டின் உரிமை. மனித நேயத்தின் அடிப்படையில் மலேசியா இதைப் பரிசீலிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் தேவையற்றவை. அவர் கூறும் கருத்துகளுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

“மலேசியாவும் சிங்கப்பூரும் அண்டை நாடுகள். இரு தரப்பும் ஒத்துழைத்தால்தான் நல்லது. மலேசியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். எனவே இருதரப்பு நல்லுறவை பாதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்,” என்கிறார் சார்லஸ் சந்தியாகு.

சிங்கப்பூர் தண்ணீருக்குரிய நியாயமான விலையை அளிக்க வேண்டும்

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

சிங்கப்பூருக்கு தண்ணீர் வழங்கும் மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலும் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகச் சொல்கிறார் மலேசிய முன்னாள் நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த மருத்துவர் சேவியர் ஜெயகுமார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், மலேசியா வழங்கும் தண்ணீருக்கு ஏற்ற நியாயமான விலையை சிங்கப்பூர் அளிக்க வேண்டும் என்றார்.

“இந்தப் பிரச்சினை நீண்டகாலமாகவே உள்ளது. ஆனால் தற்போதைய நிலை என்னவென்றால், ஜோகூர் மாநிலம் தனது சொந்த மக்களின் தண்ணீர் தேவையை ஈடுகட்டவே சிரமப்படுகிறது.

“இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு நாட்டுக்கு நம் தண்ணீரை விற்க வேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் ஜோகூரில் உள்ள மலேசிய குடிமக்களின் தேவையை முதலில் பூர்த்தி செய்வதற்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்போம். அதற்கும் மேல் உள்ள தண்ணீர் இருப்பைப் பொறுத்து, சிங்கப்பூருக்கு விற்பனை செய்யலாம்.

“இனிமேலும் சிங்கப்பூருக்கு மிகக் குறைவான விலையில் தண்ணீரை விற்க இயலாது. சந்தை விலைக்கு விற்பதுதான் சரியாக இருக்கும்.

“மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்வை ஊக்குவித்து வருகிறோம். நான் அமைச்சராக இருந்தபோதே இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக பகாங் மாநிலத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடக்கும்போது, ஜோகூரில் கூடுதல் நீர் இருக்கக்கூடும். அப்போதும்கூட நியாயமான விலைக்கு ஒப்புக்கொண்டால் சிங்கப்பூருக்கு தண்ணீர் கொடுப்போம்,” என்கிறார் மருத்துவர் சேவியர் ஜெயக்குமார்.

அடுத்து என்ன நடக்கும்?

தண்ணீருக்கு என்ன விலை?: சிங்கப்பூர் - மலேசியா இடையே நீடிக்கும் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

இரு நாடுகளும் 1962, 1990 ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் 2061இல் முடிவுக்கு வரும். அதற்குள் தண்ணீர் தேவைக்காக மலேசியாவைச் சார்ந்திருப்பதை முற்றிலுமாக மாற்றி அமைக்க விரும்புகிறது சிங்கப்பூர்.

இதற்காக பல்வேறு திட்டங்களை அந்நாடு செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் கழிவுநீரை குடிநீராக மாற்றும் திட்டம் முக்கியமானது.

மேலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதற்காக இத்தீவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் 2061க்குள் தண்ணீர் விவகாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே அந்நாட்டின் இலக்கு.

இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார், விமானப் போக்குவரத்து, வான்வெளி எல்லை சார்ந்த சிக்கல்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் அமைந்துள்ள சில தீவுப் பகுதிகளுக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்குகளும் உள்ளன.

தண்ணீருக்கான புதிய விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை எனில், அனைத்துலக நடுவர் மன்றத்துக்குச் செல்ல மலேசியா நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

தண்ணீர் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என மலேசியா வலியுறுத்தும் நிலையில், வருங்காலத்தில் இதற்கு உடன்படத் தயார் எனும் தனது நிலைப்பாட்டில் சிங்கப்பூர் உறுதியாக நிற்பதாக துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில், இருதரப்பு உறவில் உறுத்தலாக நீடித்து வரும் இந்த விவகாரத்துக்கு நேரடிப் பேச்சுவார்த்தை அல்லது நடுவர் மன்றம் மூலம் இணக்கமான தீர்வை மிக விரைவில் எட்டுவதே இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் என அந்நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »