Press "Enter" to skip to content

சீனா பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: வரலாற்றில் முதல்முறையாக கூட்டாக அறிவித்த பிரிட்டன் – அமெரிக்கா

  • கோர்டன் கொரேரா
  • பாதுகாப்பு நிருபர், பிபிசி

பட மூலாதாரம், UK POOL VIA ITN

பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டாக இணைந்து சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே, “நம்முடைய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நீண்ட கால பெரும் அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது” என்றும், சமீபத்திய தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களிலும் சீனா தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, பிரிட்டனின் உளவு அமைப்பான எம்.ஐ. 5-இன் தலைவர் கென் மெக்கலம், கடந்த 3 ஆண்டுகளில் சீனாவின் செயல்பாடுகளுக்கு எதிரான பணிகளை தங்கள் உளவு அமைப்பு இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும், மேலும் இரு மடங்கு அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எம்.ஐ. 5 ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தை திருடுவதற்கு தயாராவதாக சீனா மீது குற்றச்சாட்டு

தைவானை சீனா வலுக்கட்டாயமாக கைப்பற்றினால், “இந்த உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான தொழில் ரீதியான சீர்குலைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என, எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டாக தோன்றிய இந்த சந்திப்பு, லண்டனின் தேம்ஸ் ஹவுஸில் உள்ள எம்.ஐ. 5 தலைமையகத்தில் நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்படும் சவால்கள், “ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக” மெக்கலம் தெரிவித்துள்ள நிலையில், அந்த சவால்கள் “மிகப்பெரும் அதிர்ச்சி அடையும் வகையிலானவை” என கிறிஸ்டோஃபர் வ்ரே தெரிவித்தார்.

பல்வேறு தொழில்களின் தலைமை செயல் இயக்குநர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மூத்த ஆளுமைகள் அடங்கிய அந்தக் கூட்டத்தில், பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி, சீன அரசாங்கம் “உங்களின் தொழில்நுட்பத்தைத் திருடுவதற்கு தயாராக உள்ளது” என வ்ரே தெரிவித்தார்.

“பெரும்பாலான தொழிலதிபர்கள் உணர்ந்ததைவிட மேற்கத்திய நாடுகளின் தொழில்களுக்கு சீனா கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக” என்று அவர் தெரிவித்தார். பில்லியன் கணக்கிலான டாலர்கள் மதிப்பீட்டில், ஒரு தசாப்தமாக செலவிட்டு உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளை கிராமப்புற அமெரிக்காவில் சீன நிறுவனங்களுடன் தொடர்புடையோர் திருடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சைபர் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கை

மேலும், மற்ற எல்லா பெரிய நாடுகளையும்விட பெரிய ஹேக்கிங் திட்டம் மூலம், “ஏமாற்றுவதற்காகவும் பெரிதளவில் திருடுவதற்காகவும்” சீனா சைபர் உளவு வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சைபர் தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் 37 நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தில் வான்வெளிக்கு எதிரான தாக்குதல் சீர்குலைந்ததாகவும் எம்.ஐ. 5இன் தலைவர் கென் மெக்கலம் தெரிவித்தார்.

சீனா

பட மூலாதாரம், Getty Images

மேலும், சீனாவுடன் தொடர்புடைய இத்தகைய பல்வேறு உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். அதில், பிரிட்டன் விமானப் போக்குவரத்து நிபுணர் ஒருவருக்கு இணையம் வாயிலாக கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்டதும் ஒன்று. இருமுறை சீனாவுக்கு சென்ற அந்நபர் “நன்றாக உபசரிக்கப்பட்ட” பின்னர், அவரிடம் சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு முன்னோடியாக இருந்த ஒரு நிறுவனத்தால் ராணுவ விமானம் பற்றிய தொழில்நுட்பத் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

“அப்போதுதான் இந்த விவகாரத்திற்குள் நாங்கள் நுழைந்தோம்,” என்கிறார் மெக்கலம். ஒரு பொறியியல் நிறுவனத்தை சீன நிறுவனம் அணுகியதாகவும், இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் நிறுத்தப்படுவதற்கு முன்பு, அதன் தொழில்நுட்பத்தை சீன நிறுவனம் எடுக்க இது வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

“அரசியலில் நேரடி தலையீடு”

அமெரிக்காவில் நடைபெற்ற செனட் தேர்தலில் சீன அரசாங்கம் நேரடியாக தலையிட்டதாக, எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே தெரிவித்தார்.

யுக்ரேன் நெருக்கடியைத் தொடர்ந்து சீனா “எல்லா விதமான படிப்பினைகளையும்” பெறுகிறது என்று வ்ரே கூறினார். ரஷ்யா எதிர்கொண்டுள்ளது போன்ற தடைகளிலிருந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதும் இதில் அடங்கும். சீனா தைவானில் படையெடுத்தால், ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடியால் இந்தாண்டு எதிர்கொண்ட பொருளாதார சீர்குலைவுளைவிட அதன் தாக்கம் பெரிதளவில் இருக்கும் என தெரிவித்துள்ள அவர், இதனால் சீனாவில் உள்ள மேற்கத்திய முதலீடுகள் “பணயக்கைதியாகி”, விநியோக சங்கிலிகள் தடைபடும் என தெரிவித்தார்.

“தைவான் மீதான அவர்களின் ஆர்வம் எந்த வகையிலும் குறைந்துவிட்டது என்று நினைக்க எனக்கு எந்த காரணமும் இல்லை” என்று எஃப்.பி.ஐ இயக்குநர் கிறிஸ்டோஃபர் வ்ரே செய்தியாளர்களிடம் கூறினார்.

புதிய சட்டம் அச்சுறுத்தலை சமாளிக்க உதவும் என்று கூறிய எம்.ஐ. 5 இன் தலைவர், அனைத்துத் தரப்பும் இந்த அபாயங்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதை உறுதி செய்வதன் மூலம் பிரிட்டன் “கடினமான இலக்காக” மாற வேண்டும் என கூறினார். விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் சீன ராணுவத்துடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுத்ததாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »