Press "Enter" to skip to content

ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது தொடர்பாக இந்தியாவை சாடிய ஜெர்மனி

பட மூலாதாரம், Getty Images

ஆல்ட் ந்யூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது தொடர்பாக ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் ஜனநாயகத்தை கிண்டல் செய்துள்ளது. புதன்கிழமை நடந்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் முகமது ஜூபைர் கைது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா தன்னை கூறிக்கொள்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற ஜனநாயக விழுமியங்களை அந்த நாட்டிடமிருந்து எதிர்பார்க்கலாம். ஊடகங்களுக்கு தேவையான இடம் கொடுக்க வேண்டும். கருத்துச் சுதந்திரத்தின்பால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும் இது இந்தியாவிற்கும் பொருந்தும். எந்தவொரு சமூகத்திற்கும் சுதந்திரமாக செய்தி வெளியிடல் மிகவும் முக்கியமானது. செய்தித்துறை மீதான கட்டுப்பாடு கவலையளிக்கிறது. பேசியதற்காகவும், எழுதுவதற்காகவும் செய்தியாளர்களை சிறையில் அடைக்க முடியாது.”என்று கூறியது.

“இந்தியாவில் நடந்த கைது குறித்து எங்களுக்குத் தகவல் உள்ளது. புதுடெல்லியில் உள்ள எங்கள் தூதரகம் இதை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். மனித உரிமைகள் தொடர்பாக இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்கீழ்தான் கருத்துச் சுதந்திரமும் பத்திரிகைச் சுதந்திரமும் வருகிறது,”என்று அது மேலும் தெரிவித்தது.

ஜெர்மனியின் ஒலிபரப்பு சேவையான ‘DW’ வின் முதன்மை சர்வதேச ஆசிரியர் ரிச்சர்ட் வாக்கர், ஜெர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம்,” ஜெர்மனி பத்திரிக்கை சுதந்திரம் பற்றி தொடர்ந்து குரல் கொடுக்கிறது மற்றும் பத்திரிகையாளர்கள் எங்கு கைது செய்யப்பட்டாலும் அதை எதிர்க்கிறது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை இந்த விஷயத்தில் ஏன் இந்த வேறுபாடு? ஜெர்மனி ஏன் இந்தியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை? “என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர்,”சரியான நேரத்தில் விமர்சிக்கவில்லை என்று சொல்லமுடியாது. கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து நான் எப்போதும் குரல் கொடுத்து வருகிறேன்,”என்று குறிப்பிட்டார்.

ஜெர்மனியில் ஜனநாயக விழுமியங்களை வலியுறுத்திய பிரதமர் மோதி

ஜெர்மனியில் கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டார். இந்தியாவைத் தவிர, இந்தோனீஷியா, அர்ஜென்டீனா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தன.

இந்த ஐந்து நாடுகளும் ஜி-7 நாடுகளுடன் ஜூன் 27 ஆம் தேதி, ‘2022 மீட்பாற்றல் (Resilient) ஜனநாயக அறிக்கை’ யில் கையெழுத்திட்டன. இதன் கீழ், சிவில் சமூகத்தில் பன்முகத்தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, கணினிமய மற்றும் ஆஃப்லைன் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆகியவை அடங்கும்.

“நாங்கள் ஜெர்மனி, அர்ஜென்டீனா, கனடா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனீஷியா, இத்தாலி, ஜப்பான், செனகல், தென்னாப்ரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஜனநாயகத்தை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்,”என்று இந்த நான்கு பக்க அறிக்கை கூறுகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்போம், சுரண்டல் மற்றும் வன்முறைக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம், உலக அளவில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்போம், பொது விவாதம், ஊடக சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மை, ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தகவல்ளை தடையின்றி அனுமதித்தல் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், @MEA

இந்த ஜனநாயக விழுமியங்களில் ஜி-7 நாடுகளுடன் இணைந்து பணியாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த அதே நாளில், Alt News என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முகமது ஜுபைரின் 2018 ட்வீட் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் புகார் அளித்தார். முகமது ஜூபைர் மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் ஜூபைரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

முகமது ஜுபைரின் கைது, பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளை முகமது ஜுபைர் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பல இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டன. நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பின்னர் பாஜக நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது. பல மாநிலங்களில் நூபுர் ஷர்மா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. மறுபுறம், ட்விட்டர் பயனாளியின் புகாரின் பேரில் டெல்லி காவல் துறையினர் முகமது ஜூபைரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் விஷயமும் இதில் அடங்கும்.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களின் கேள்விகளை ஏற்கமறுத்த பிரதமர் மோதி

மே முதல் வாரத்தில் பிரதமர் மோதி ஐரோப்பா சுற்றுப்பயணம் சென்றார். பிரதமர் நரேந்திர மோதி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின்போது ஊடகவியலாளர்களை கேள்விகள் கேட்க அனுமதிக்காதது மற்றும் இந்தியாவின் மனித உரிமைகள் விஷயம் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து பத்திரிகையாளர்களை கேள்விகள் கேட்க அனுமதிக்காமல் பிரதமர் தனது சகாக்களுடன் கூட்டாக அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறார். ஆனால், இம்முறை ஜெர்மன் ஒலிபரப்பு அமைப்பான Deutsche Welle இன் முதன்மை சர்வதேச ஆசிரியர் ரிச்சர்ட் வாக்கர், மோதியின் ஜெர்மனி பயணம் குறித்து ட்வீட் மூலம் அனைவரின் முன்னிலையிலும் இந்த பிரச்சனையை எழுப்பினார்.

“மோதியும் ஷோட்ஸும் பெர்லினில் செய்தியாளர்களிடம் பேச உள்ளனர். அவர்கள் இரு அரசுககளுக்கிடையில் 14 ஒப்பந்தங்களை அறிவிப்பார்கள். இந்திய தரப்பின் கோரிக்கையில் பேரில் அவர்கள் கேள்விகளை அனுமதிக்கமாட்டார்கள்,” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

ஊடக சுதந்திர விஷயத்தில் இந்தியா 8 இடங்கள் சரிந்ததையும் வாக்கர் அடிக்கோடிட்டுக் காட்டினார். Reporters Sans Frontieres (RSF), பத்திரிகை சுதந்திர விஷயத்தில் 180 நாடுகளில் இந்தியாவுக்கு 150வது இடத்தை அளித்துள்ளது. சென்ற ஆண்டு இந்தியா 142வது இடத்தில் இருந்தது.

“பிரதமர் மோதி மே 4 அன்று ஜெர்மன் ஆட்சித்துறை தலைவர் ஓலாஃப் ஷோட்ஸை சந்தித்தார். ஆனால் இருதரப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு, நடைமுறைக்கு மாறாக செய்தியாளர்கள் கேள்விகளைக்கேட்க ஷோட்ஸ் வாய்ப்பளிக்கவில்லை. ஜெர்மனியிலும், இந்திய தூதுக்குழுவின் கோரிக்கையை ஏற்று, செய்தியாளர் கேள்விகளை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது,” என்று பிரதமர் மோதியின் ஐரோப்பா பயணம் பற்றி , பிரான்ஸின் செய்தி இணையதளமான பிரான்ஸ் 24, ஜெர்மன் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

முகமது ஜூபைர் கைதுக்கு ஐ.நா.வின் ஆட்சேபம் மற்றும் இந்தியாவின் பதில்

ஜூன் 29 அன்று ஐக்கிய நாடுகள் சபையும் முகமது ஜூபைர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும் பத்திரிகையாளர் என்ன எழுதுகிறார், அவர் என்ன ட்வீட் செய்கிறார் மற்றும் அவர் என்ன சொல்கிறார் என்பதற்காக அவரை சிறையில் அடைக்க முடியாது என்றும் அது கூறியது.

பேசுவதற்காகவும்,எழுதுவதற்காகவும் ஊடகவியலாளர்களை துன்புறுத்த முடியாது என ஐ.நா.வின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மக்கள் நினைத்ததை பேசுவதற்கு சுதந்திரம் இருப்பது முக்கியம் என்று நான் நம்புகிறேன், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக தங்கள் வேலையைச் செய்ய உரிமை உண்டு. இதற்காக யாரையும் மிரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது,”என்று அவர் குறிப்பிட்டார்.

முகமது ஜுபைர் குறித்த ஐ.நா.வின் கருத்து அடிப்படையற்றது என்றும் இந்தியாவின் சுதந்திரமான நீதித்துறையில் தலையிடுவதாக உள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு பதில் கூறியுள்ளது.

“இந்தியாவில் எந்த ஒரு நடவடிக்கையும் நீதித்துறை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது,”என்று இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »