Press "Enter" to skip to content

ஈலோன் மஸ்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதன் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக, அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவித்தபின் நீண்ட காலமாக நடக்கும் கதையின் சமீபத்திய திருப்பம் இது.

ட்விட்டர் ஸ்பேம்கள் மற்றும் போலி கணக்குகள் குறித்த போதுமான தகவல்களை அந்நிறுவனம் வழங்கத் தவறியதால் தான் இம்முடிவிலிருந்து பின்வாங்குவதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

“ஈலோன் மஸ்க் உடன் ஒத்துக்கொள்ளப்பட்ட தொகை மற்றும் விதிமுறைகளுடன் ஒப்பந்தத்தை செயல்படுத்த ட்விட்டர் இயக்குனர் குழு உறுதிபூண்டுள்ளது,” என ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டேய்லர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது, ட்விட்டர் நிறுவனம் மற்றும் ஈலோன் மஸ்க் என இரு தரப்புக்கு இடையில் சாத்தியமான நீண்ட சட்டப் போராட்டம் ஏற்பட உள்ளதை குறிப்பதாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் 100 கோடி ரூபாய் பிரேக் அப் கட்டணமும் (ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கினால் செலுத்தப்படும் அபராதம்) அடங்கும்.

போலி கணக்குகள் குறித்த சர்ச்சை

ட்விட்டர் உடனான இந்த ஒப்பந்தம் “தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக” மே மாதம் அறிவித்த மஸ்க், ட்விட்டர் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம்கள் குறித்த தரவுகளை அந்நிறுவனம் வழங்குவதற்காக தான் காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் மொத்த பயனாளிகளில் ஸ்பேம் மற்றும் பாட் கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவானவையே என அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்ததற்கான ஆதாரத்தை ஈலோன் மஸ்க் கேட்டிருந்தார்.

ஈலோன் மஸ்க் கேட்டிருந்த இத்தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தர தவறிவிட்டதாக, அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடிதத்தில், ஈலோன் மஸ்க்கின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

“மஸ்க்கின் வலியுறுத்தல்களை ட்விட்டர் நிறுவனம் சில சமயங்களில் புறக்கணித்துவிட்டது. சிலசமயங்களில் அவற்றை நியாயமற்றதாக தோன்றும் காரணங்களுக்காக நிராகரித்துவிட்டது. சில சமயங்களில் முழுமையற்ற அல்லது பயன்படாத தகவல்களை கொடுக்கும்போது இணங்குவதாக கூறியுள்ளது” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Reuters

ட்விட்டர் ஸ்பேம் கணக்குகள் பெரிதளவிலானோருக்கு தகவல்கள் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது, இவை ட்விட்டர் தளத்தை தவறாக கையாளும் வகையில் அமையப்பட்டது. சுமார் 10 லட்சம் ஸ்பேம் கணக்குகளை தினந்தோறும் நீக்கிவருவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

ட்விட்டரில் ஸ்பேம் அல்லது பாட் கணக்குகள் சுமார் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதாக ஈலோன் மஸ்க் நம்புகிறார்.

ஒப்பந்தத்தில் இருந்து விலகும் மஸ்க்கின் அறிவிப்புக்குப் பின் ட்விட்டர் பங்குகள் 7 சதவீதம் சரிந்தது.

அடுத்து என்ன நடக்கும்?

“ஈலோன் மஸ்க் ஏற்கெனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த கட்டத்தில் அவர் பின்வாங்க முடியுமா என்பது முற்றிலும் தெளிவாக இல்லை. ட்விட்டர் தங்கள் ஒப்பந்தத்தை மீறியதாக மஸ்க் நிரூபிக்க வேண்டும்.

மேலும், ட்விட்டர் நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், மஸ்க்கின் மற்ற நிறுவனங்களுடன் ஏற்படுத்தும் தாக்கமும் ஒரு காரனமாக உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்ததிலிருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவு சரிந்தது” என, பிபிசியின் வட அமெரிக்கா தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் எழுதிய பகுப்பாய்வில் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரராக அறியப்படும் மஸ்க், ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், எலெக்ட்ரிக் தேர் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர்.

ட்விட்டர்

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டர் நிறுவனம் தனது உரிமையின் கீழ் வந்ததும் ட்விட்டரின் விதிகளை தளர்த்துவதாக உறுதியளித்தார்.

ட்விட்டரில் சில கணக்குகளை முடக்குவது குறிப்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கை முடக்கியது உள்ளிட்டவற்றை நீண்ட காலமாக விமர்சித்துவந்தார்.

ட்விட்டர் நிறுவனம் பயனர்களுக்கு ட்வீட்களை எவ்வாறு வழங்குகிறது என்பதில் அதிக வெளிப்படைத்தன்மை வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார், இது தற்போது சிலரை விளம்பரப்படுத்தவும் பரந்த பார்வையாளர்களை வழங்கவும் அனுமதிக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »