Press "Enter" to skip to content

யுக்ரேன் போர்: உலகளவில் உணவு நெருக்கடியை உருவாக்கியதா ரஷ்யா?

  • ராபர்ட் பிளம்மர்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், RUSSIAN FOREIGN MINISTRY/EPA

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாதான் காரணம் என்று கூறப்படுவதை, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், செர்கே லாவ்ரோவ், எகிப்தில் மறுத்துள்ளார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் தூதர்களிடம் அவர் ஆற்றிய உரையின்போது, “உலக உணவுப் பாதுகாப்பில் பொருளாதாரத் தடைகளின் தாக்கம் குறித்த உண்மையை மேற்கத்திய நாடுகள் திரித்துக் கூறுகின்றன” என்றார்.

மேலும், மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

யுக்ரேன் ரஷ்யா போரால் ஏற்பட்ட தானியப் பற்றாக்குறையால், அரபு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று யுக்ரேனின் ஒடேசா துறைமுகத்தை ரஷ்யா தாக்கியதால், நிறுத்தப்பட்ட யுக்ரேனின் தானிய ஏற்றுமதியை, மீண்டும் தொடங்கும் விதமாக ஒரு முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டது.

அத்துடன், போரால் உருவான கோபத்துக்கு மத்தியில், தங்களுக்கான (ரஷ்யாவுக்கான) ஆதரவைத் திரட்ட மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்குச் செல்லவுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ்.

உலக ஒழுங்கும் விதிகளும்

“ரஷ்யா மீது தடைகளை விதிப்பதில் இருக்கும் ‘தீவிரத்தன்மை’ ஒரு எளிய முடிவைக் குறிக்கிறது. அதாவது “இது யுக்ரேனைப் பற்றியது அல்ல, உலக ஒழுங்கின் எதிர்காலம் பற்றியது” என்று அவர் பேசினார்.

மேலும், “விதிகளின் அடிப்படையிலான உலக ஒழுங்கை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால், மேற்குலக நாடுகளின் விருப்பத்தின் பேரில் அவை விரும்பும் சூழ்நிலையைப் பொறுத்தே அந்த விதிகள் எழுதப்படுகின்றன” என்றும் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக, லாவ்ரோவ், எகிப்திய வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எகிப்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த பிணைப்புகள் உள்ளன. குறிப்பாக, கோதுமை, ஆயுதங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை (யுக்ரேன் படையெடுப்பு தொடங்கும் முன்பு வரை) ரஷ்யாவுக்கு வழங்கியது எகிப்து.

ஷோக்ரியுடனான தனது பேச்சுகளுக்குப் பிறகு, லாவ்ரோவ் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, “என்ன முடிவு என்பதும் , யாருடைய கையில் அது இருக்கிறது” என்பதை புரிந்து கொண்டாலும், மேற்குலகம் இந்த மோதலை நீட்டிக்கிறது என்று கூறினார்.

எத்தியோப்பியா, உகாண்டா மற்றும் காங்கோ-பிராஸ்ஸாவில்லே ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு சுருக்கமான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் லாவ்ரோவின் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுதான்.

தனது நாடு எப்போதும் “ஆப்ரிக்கர்களின் காலனித்துவ நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை உண்மையாகவே ஆதரிப்பதாக” லாவ்ரோவ் கூறியிருந்தார் என்று அவரது சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக உள்ளூர் செய்தித்தாள்களால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தக்வல வெளியாகியிருந்தது.

அத்துடன், யுக்ரேன் விவகாரத்தில் ஆப்ரிக்கர்களின் “சமநிலையான நிலைப்பாட்டை” ரஷ்யா பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

யுக்ரேன் போர்

பட மூலாதாரம், STATE EMERGENCY SERVICE OF UKRAINE

ஆப்ரிக்காவின் 40% க்கும் அதிகமான கோதுமையை யுக்ரேன் மற்றும் ரஷ்யா வழங்குகின்றன என்று ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி கூறுகிறது.

யுக்ரேனிய கோதுமையின் பெரிய வாடிக்கையாளர் எகிப்து. 2019 ஆம் ஆண்டில், அது எந்த நாட்டையும் விட அதிகமாக சுமார் 3.62 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்தது.

ஆனால், ரஷ்யா “பஞ்சத்தை ஏற்றுமதி செய்கிறது” என்ற குற்றச்சாட்டை தனது கட்டுரையில், லாவ்ரோவ் நிராகரித்ததோடு, அதற்காக மேற்கத்திய பிரசாரத்தின் மீதும் குற்றம் சாட்டினார்.

“ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுநோயிலிருந்து உருவான சர்வதேச உணவு சந்தையில் “எதிர்மறையான போக்குகளை” அதிகரித்து சிக்கலாக்கியுள்ளன” என்றும் அவர் கூறினார்.

நம்ப வைக்க முயற்சி

ஆனால், “மேற்கு நாடுகளை விட ரஷ்யாவுடன் சாய்வது நல்லது என்று ஆப்பிரிக்க நாடுகளை நம்ப வைக்க முயற்சிக்கிறார் செர்ஜி லாவ்ரோவ்” என்கிறார் பிபிசி உலக சேவையின் ஆப்பிரிக்க பிராந்திய ஆசிரியர் வில் ரோஸ்.

“காலனித்துவமயமாக்கல் செயல்முறையை முடிக்க நாங்கள் உங்களுக்கு உதவுவோம்” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி அதைச் செய்ய முயற்சிக்கிறது ரஷ்யா.

ஆனால், யுக்ரேனில் நடக்கும் போரில், ஏதாவதொரு தரப்புக்கு சார்பை எடுப்பதில் கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் தயக்கம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்போது, ​​உணவு மற்றும் எரிபொருளின் விலைசுழற்சி மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆப்ரிக்காவின் 40% க்கும் அதிகமான கோதுமை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.

மக்கள் தட்டுக்கு உணவு வரமுடியாத சூழ்நிலையில், தங்கள் பதவி அதிகாரங்களுக்கு பாதுகாப்பு குறைவு என்பதை சில ஆப்பிரிக்க தலைவர்கள் அறிந்திருப்பார்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »