Press "Enter" to skip to content

காமன்வெல்த் ‘லால் பவுல்’: தங்கம் வென்ற 4 இந்திய வீராங்கனைகள் – இது என்ன விளையாட்டு?

  • விதான்ஷு குமார்
  • பிபிசி ஹிந்திக்காக

பட மூலாதாரம், Getty Images

காமன்வெல்த் போட்டியில் ‘லான் பவுல்’ விளையாட்டில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா மூன்று தங்கம் வென்றிருந்தது. நான்காவது தங்கம் எந்தப்போட்டியிலிருந்து வரப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், லான் பவுல் என்ற விளையாட்டில் பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஆனால், லான் பால் விளையாட்டு என்றால் என்ன, அது எப்படி விளையாடப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா?

புராதன விளையாட்டு

லான் பால் என்பது ஒரு வகையான பந்து உருட்டும் விளையாட்டு. இது 13ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கியது. அதன் முறையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உருவாக்கப்பட்டன.இந்தியாவில் லான் பவுல் விளையாட்டின் துவக்கம், 2010 காமன்வெல்த் விளையாட்டுகளில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று இந்த விளையாட்டு சுமார் 40 நாடுகளில் விளையாடப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் லான் பவுல் இடம்பெறுகிறது. ஆனால் அது ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்னும் இடம் பெறவில்லை.

இந்த விளையாட்டு 1966 ஆம் ஆண்டைத்தவிர, மற்ற எல்லா காமன்வெல்த் விளையாட்டுகளிலும் இடம்பெற்றது.

இந்திய லான் பவுல் அணி

பட மூலாதாரம், Getty Images

விளையாட்டின் விதிகள்

புல்வெளி மைதானம் அல்லது புல்வெளியில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டை ஒற்றையர் அல்லது அணியாக விளையாடலாம். ஒற்றையர் பிரிவில், இரண்டு வீரர்கள் நேருக்கு நேர் இருப்பார்கள். குழு நிகழ்வில், இரண்டு, மூன்று அல்லது நான்கு வீரர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. நான்கு வீரர்கள்கொண்ட குழுவுக்கு ‘ஃபோர்ஸ்’என்று பெயர்.

ஆட்டம் பூவா தலையா மூலம் தொடங்குகிறது. டாஸ் வெல்லும் அணிக்கு ஜாக் பந்தை உருட்டும் வாய்ப்பு கிடைக்கும். இது பிரதான வீசும் பந்தைக் காட்டிலும் சிறிய பந்து ஆகும். டாஸ் வென்ற வீரர் அதை விளையாடும் பகுதியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு உருட்டிவிடுவார். ஜாக் பந்து எங்கு நிற்கிறதோ அது வீரர்களின் இலக்காக ஆகிறது.

இப்போது வீரர்கள் எறியும்(throwing) பந்தை ஒவ்வொன்றாக உருட்ட வேண்டும். அதை ஜாக்கிற்கு மிக அருகில் கொண்டு செல்வதே நோக்கமாக இருக்கும். பந்து எத்தனை நெருக்கமாகச்செல்கிறதோ, அத்தனை சிறந்த ஸ்கோர் கிடைக்கும். ஒற்றையர் வடிவத்தில், முதல் 25 புள்ளிகளைப் பெறும் வீரர் செட்டை வெல்வார். பந்து வீசப்படும் போது விளையாடும் வளையத்திற்கு வெளியே அது செல்லலாம். ஆனால் இறுதியில் அது விளையாடும் பகுதிக்குள் வந்து நிற்கவேண்டும். இல்லையெனில் அது விளையாட்டிற்கு வெளியே அல்லது நாட் இன் ப்ளே என்று கருதப்படுகிறது.

பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியின் ‘ஃபோர்ஸ்’ விளையாட்டில், அணியின் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு முனையிலிருந்தும் 2 பந்துகளை உருட்டும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதாவது நான்கு முனைகளின்படி அணியின் நான்கு வீரர்களும் தலா 8 முறை பந்துகளை உருட்ட வாய்ப்பு கிடைக்கும். ஆட்டம் இத்துடன் முடியாது. மொத்தம் 15 முடிவுகளுக்குப் பிறகு புள்ளிகளில் முன்னிலை வகிக்கும் அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

ரூபா ராணி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் போராட்டம்

இந்திய அணியின் ஃபோர்ஸ் குழுவில், லவ்லி சௌபே (தலைமை), பிங்கி (இரண்டாவது), நயன்மோனி சைகியா (மூன்றாவது), ரூபா ராணி (ஸ்கிப்) ஆகியோர் விளையாடுகின்றனர்.

12வருட குறுகிய பயணத்தில், இப்போது அதில் பதக்கமும் பெற்றுவிட்டனர். ஆனால் இந்த இந்திய மகளிர் அணிக்கு பர்மிங்காம் வரையிலான பயணம் எளிதாக இருக்கவில்லை.

ஸ்பான்சர்கள் இல்லாத நிலையில் அணியின் வீராங்கனைகள் தங்கள் சொந்த பணத்தில் பர்மிங்ஹாம் சென்றுள்ளனர். லவ்லி சௌபே ஜார்கண்ட் காவல்துறையில் காவலராகவும், நயன்மோனி சைகியா அசாம் காவல்துறையில் காவலராகவும் பணிபுரிகின்றனர்.

ரூபா ராணி டிர்கி ஜார்கண்ட் மாநிலம் ராம்கரில் விளையாட்டு அதிகாரியாகவும், பிங்கி டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியையாகவும் உள்ளார்.

இந்திய லான் பவுல் அணி

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் வீரர்களின் விருப்பம்

லான் பவுல் உலகம் முழுவதும் விளையாடப்படவில்லை என்றாலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்களும் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்களான ஸ்டீவ் வாக் மற்றும் மார்க் வாக் ஆகியோரும் தங்கள் சொந்த மைதானத்தில் இந்த ஆட்டத்தை விளையாடுகின்றனர்.

மகேந்திர சிங் தோனி கூட சில சமயங்களில் ராஞ்சியில் உள்ள லான் பால் பயிற்சி மைதானத்தில் விளையாடுவதை பார்க்க முடிந்தது.

அணியின் இந்த சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, அணி வீரர்களுக்கும், இந்த விளையாட்டிற்கும் அரசிடமிருந்து உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்த முடியும் .

டேபிள் டென்னிஸ்: 5 ஆவது தங்கம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது. இதுவரை 4 தங்கம் வென்றிருந்த நிலையில், இத்துடன் சேர்த்து தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட இந்திய அணி சார்பில் தமிழக வீரர்கள் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய இருவரும் விளையாடி தங்கம் வென்றனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »