Press "Enter" to skip to content

தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலி

பட மூலாதாரம், Twitter

(இன்று 03/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)

கேரள மாநிலத்தில் தம்பிக்கு ஏற்பட்ட அபூர்வ நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலம் ரூ.47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு உயிரிழந்ததாக ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அச்செய்தியில், “கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபீக் – மரியம்மை தம்பதிகளின் மகள் அப்ரா (வயது 15). இவருக்கு சிறுவயதில் எஸ்.எம்.ஏ. எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால் அந்த சிறுமி சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை கழித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அப்ராவின் தம்பி முகமதுவுக்கும் (இரண்டரை வயது) தசை சிதைவு நோய் ஏற்பட்டது. இதை குணப்படுத்த ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டதும் சிறுமி அப்ரா தனது தம்பியை காப்பாற்ற கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.47.5 கோடி கிடைத்தது.

இந்த பணத்தின் மூலம் அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே மருத்துவமனையில் அப்ராவும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 1) காலையில் அப்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க சென்னையில் ‘சூப்பர் குட்டி காவல் துறை’ திட்டம்

சூப்பர் குட்டி காவல் துறை

பட மூலாதாரம், @chennaipolice_

போக்குவரத்து விதிமீறல் குறித்து மாணவர்கள் கண்காணிக்கும் வகையில் யங் இந்தியன் (சென்னை) அமைப்புடன் சென்னை காவல் துறை இணைந்து முன்னெடுக்கும் ‘சூப்பர் குட்டி காவல் துறை’ திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் தொடங்கி வைத்ததாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

சென்னை, செனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், நிகழாண்டுக்கான சாலை பாதுகாப்பு ரோந்துப் பிரிவு (ஆர்எஸ்பி) மற்றும் ‘சூப்பர் குட்டி காவல் துறை’ ஆகிய திட்டங்களை, காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “வழக்கமாக 7 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குதான் சாலைப் பாதுகாப்பு ரோந்துப் பிரிவில் பயிற்சி அளிக்கப்படும். இந்த முறை 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான சுமார் ஒரு லட்சம் மாணவர்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்துகளைப் பெற உள்ளோம்.

மாணவர்களின் பயணத்தின்போது போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படுகிறதா என அவர்களுக்கு வழங்கப்பட்ட சூப்பர் குட்டி காவல் துறை அட்டையில் டிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு 12 கேள்விகளுக்கு, 12 முறை பயணத்தின்போது கிடைக்கும் கருத்துகளைக் கொண்டு, சாலைப் பாதுகாப்பு கல்வி மற்றும் அமலாக்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களைச் செயல்படுத்துவோம். இந்த கருத்துகள் உண்மையாகவும், நடுநிலையாகவும் இருக்கும்.

இதேபோல் அரசின் உதவியுடன், 50 மாணவர்களுக்கு ஒரு வார காலத்துக்கு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம்” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சர்வகட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்”

டக்ளஸ் தேவானந்தா

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட காணிப் பிணக்குகள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பிரதான பிரச்னைகளுக்கான தீர்வுகளும் சர்வகட்சி அரசாங்கத்தின் பொது வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வகட்சி அரசொன்றை அமைப்பதற்கான பொது வேலைத்திட்டத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பங்களிப்பை கோரிக்கையாக விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்கு பதிலளித்து, தமிழ் மக்களின் சார்பில் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது குற்றம்சாட்டப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்தல்.

பாதுகாப்புப் படைகள் மற்றும் போலிஸ் சேவை ஆகியவற்றில் நாட்டின் இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டத்தை உருவாக்குதல், அரச விழாக்களில் இரு மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) தேசிய கீதத்தைப் பாடுவது, தனிநபர்கள், புலம்பெயர் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்.

18 வயதை அடைந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசிப்பவர்கள் மற்றும் வேலைக்காக வெளிநாட்டில் இருப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருதல்” உள்ளிட்ட மேலும் சில காரணிகளை அக்கடிதத்தில் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக்கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மீனாக்ஷி கங்குலி

பட மூலாதாரம், Human rights watch

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டுமே தவிர அவசரகாலநிலையின் மூலமான அதிகாரங்களைப் பயன்படுத்தி விமர்சகர்களைப் பழிவாங்குவதில் கவனம் செலுத்தக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளதாக, ‘வீரகேசரி’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மீனாஷி கங்குலி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்பதிவில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் ஏற்கெனவே இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. அந்த வலுவான கோரிக்கையே மிகவும் உயர்மட்டத்திலிருந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்வதற்கு வழிவகுத்தது.

எனவே அவர்களை வெற்றிகண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமே தவிர, விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்காக அவசரகால நிலை பிரகடனத்தின் கீழான அதிகாரங்களைப் பயன்படுத்தி பழிவாங்குவதில் கவனம் செலுத்தக்கூடாது” என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »