Press "Enter" to skip to content

தைவான் எல்லையைக் கடந்த சீனாவின் கப்பல்கள்; படைகளைத் திரட்டும் தைவான்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் விமானங்களும், கப்பல்களும் தைவானின் கடல் எல்லையைக் கடந்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக படைகளைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது தைவான்.

ஏவுகணை அமைப்புகளை தைவான் தனது எல்லையில் நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கிறது. விமானங்களும் கப்பல்களும் எல்லையை ஒட்டி கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றன.

எனினும் சண்டைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் போரிட தங்களுக்கு விருப்பமில்லை எனவும் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தைவானைச் சுற்றி சீனக் கப்பல்களும் விமானங்களும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

பெலோசியின் வருகைக்காக சீனா எடுத்துவரும் நடவடிக்கை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்திருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கென் கூறியுள்ளார். கம்போடியாவில் நடக்கும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் அவர் பேசினார்.

அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி இரு நாள்களுக்கு முன்பு தைவான் சென்றிருந்தார். நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று சீனா எச்சரித்த பிறகும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தபடி தைவானைச் சுற்றி போர்ப்பயிற்சிகளை சீனா தொடங்கியது. நேற்றிலிருந்து நடைபெற்று வரும் இந்தப் பயிற்சிகள் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.

வரைபடம்

ராணுவ விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் போன்றவை இதில் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான குண்டுகளைக் கொண்டு இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாக சீனா கூறியிருக்கிறது.

தற்போது தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானுக்குச் சென்றிருக்கும் நான்சி பெலோசி, தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என்று பேசியுள்ளார்.

11 ஏவுகணைகளை வீசிய சீனா

தனது போர்ப்பயிற்சியின் ஒரு பகுதியாக 11 ஏவுகணைகளை தைவானைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதியில் சீனா ஏவியது. அதிக உயரத்துக்குச் சென்று இலக்கி நோக்கி விழும் பாலிஸ்டிக் ரகத்தைச் சேர்ந்தவை இந்த ஏவுகணைகள்.

தைவானின் நிலப்பரப்புக்கு மேலே சில ஏவுகணைகள் சென்றதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக சீனா எதுவும் கூறவில்லை.

சீனா

பட மூலாதாரம், Getty Images

தைவான் மட்டுமல்லாமல் அருகேயிருக்கும் ஜப்பானுக்கு சீனாவின் போர் ஒத்திகை கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 4 ஏவுகணைகள் தைவானுக்கு மேலே பறந்ததாகவும், 5 ஏவுகணைகள் ஜப்பானின் எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதிக்குள் விழுந்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான எல்லை எப்படிப்பட்டது?

சீனாவின் பெரு நிலப்பரப்புக்கும் தைவான் தீவுக்கும் இடையேயான தைவான் நீரிணையில் ஒரு மத்திய எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. இதை மீடியன் லைன் என்று கூறுகிறார்கள். சிலர் டேவிஸ் கோடு என்று குறிப்பிடுகிறார்கள்.

1955-ஆம் ஆண்டு இந்த எல்லையை அமெரிக்க கடற்படை வரையறுத்தது. இரு தரப்பும் அந்த எல்லையைத் தாண்டக்கூடாது என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அந்த எல்லைப்பகுதியை தற்போது சீன விமானங்களும் கப்பல்களையும் தாண்டியிருக்கின்றன.

தைவான் எங்கே அமைந்திருக்கிறது?

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான “முதல் தீவு சங்கிலி” (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனா, தைவான்

தைவான் சீனா ஏன் பிரிந்தன?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

தைவானிய ராணுவ வீரர்

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

தைவானான் சீனாவைச் சமாளிக்க முடியுமா?

ராணுவ மோதல் என்று வரும்போது, அது எந்த வகையில் இருந்தாலும், சீனாவின் படைகள் தைவான் படைகளை எளிதில் தோற்கடித்துவிடும்.

அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காகச் செலவழிக்கிறது. கடற்படையிலிருந்து ஏவுகணை தொழில்நுட்பம், விமானம், சைபர் தாக்குதல்கள் வரை பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா செலவு செய்கிறது.

சீனா மற்றும் தைவானின் ராணுவ பலம்

சீனாவுடைய ராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள பணியாளர்களைப் பொறுத்தவரை, இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஒரு வெளிப்படையான மோதலில், தைவான் சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தைவானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும்போது கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றைச் செய்ய முடியும் என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவிடம் இருந்து அந்த உதவி வரலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »