Press "Enter" to skip to content

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

  • ஜாரியா கோர்வெட்
  • பிபிசி ஃபியூச்சர்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா இதுவரை குறைந்தது மூன்று அணு குண்டுகளையாவது தொலைத்துள்ளது. அவை எங்குள்ளன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது? அமெரிக்கா தொலைத்த அணுகுண்டுகள் எங்கே போயின? அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா?

அது பனிப்போர் உச்சத்தில் இருந்த ஒரு மெல்லிய குளிர்கால நாளின் காலைப்பொழுது.

ஜனவரி 17, 1966 அன்று, ஸ்பெயினில் இருந்த மீன்பிடி கிராமமான பலோமரேஸில், உள்ளூர்வாசிகள் வானத்தில் இரண்டு ராட்சத நெருப்புப் பந்துகள் அவர்களை நோக்கி வரும் காட்சியைக் கண்டனர். அடுத்த சில நொடிகளில், கட்டடங்கள் குலுங்கின. வெடிகுண்டு துண்டுகள் தரையில் விழுந்தன.

சில வாரங்களுக்குப் பிறகு, ஃபிலிப் மேயர்ஸ் டெலிபிரின்டர் மூலம் ஒரு செய்தியைப் பெற்றார். அந்த நேரத்தில், அவர் கிழக்கு சிசிலியில் உள்ள கடற்படை விமான தளத்தில் வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரியாக இருந்தார். ஸ்பெயினில் அவசரநிலை இருப்பதாகவும் சில நாட்களுக்குள் அவர் அங்கு இருக்க வேண்டும் என்றும் டெலிபிரின்டர் செய்தியில் கூறப்பட்டது.

1px transparent line
1px transparent line

இருப்பினும் ராணுவம் எதிர்பார்த்ததைப் போல் இந்தப் பணி ரகசியமாக இருக்கவில்லை. பொதுமக்களுக்கு என்ன நடக்கிறது எனத் தெரிந்திருந்தது. அன்று மாலை விருந்து ஒன்றில் கலந்துகொண்டு தனது மர்மமான பயணத்தைப் பற்றி அறிவித்தபோது, அவருடைய ரகசியத்தன்மை நகைப்புக்குரியதாக மாறியது. “அது ஒருவிதத்தில் சங்கடமாக இருந்தது. அது ரகசியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் எதற்காகச் செல்கிறேன் என்பதை என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள்,” என்கிறார் மேயர்ஸ்.

பல வாரங்களுக்கு, உலகெங்கும் உள்ள செய்தித்தாள்கள், இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்கள் நடுவானில் மோதியபோது, நான்கு பி28 தெர்மோநியூக்ளியர் குண்டுகளை பலோமரேஸில் விழுந்தன என்று சொல்லப்படுவதாகச் செய்தி வெளியிட்டன. மூன்று குண்டுகள் நிலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று மட்டும் தென்கிழக்கில் மத்திய தரைக் கடலில் தொலைந்தது. 1,100,000 டன் டி.என்.டி குண்டுகளின் வெடி திறனைக் கொண்ட, 1.1 மெகா டன் அணுகுண்டைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டை நடந்து கொண்டிருந்தது.

பாலோமரேஸில் அணு குண்டுகள் தொலைந்தபோது, 3.2 கிலோ புளூட்டோனியத்தை சிதறின

பட மூலாதாரம், Getty Images

காணாமல் போன மூன்று அணு குண்டுகள்

1. ஒரு மார்க் 15 தெர்மோநியூக்ளியர் குண்டு, ஜார்ஜியாவிலுள்ள டைபீ தீவில், பிப்ரவரி 5, 1958 அன்று தொலைந்தது. பாதுகாப்பான தரையிறக்கம் செய்வதற்கு விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக கடலில் தூக்கி எறியப்பட்டது.

2. ஒரு பி43 தெர்மோநியூக்ளியர் குண்டு, பிலிப்பைன்ஸ் கடலில், டிசம்பர் 5, 1965 அன்று தொலைக்கப்பட்டது. ஒரு குண்டுவீச்சு விமானம், விமானி மற்றும் அணு ஆயுதம் ஆகியவை, விமானங்களைச் சுமந்து செல்லும் கேரியர் கப்பலின் ஒரு பக்கத்திலிருந்து நழுவியது. அதை மீண்டும் கண்டுபிடிக்கவே இயலவில்லை.

இரண்டாவது நிலையிலிருந்த ஒரு பி28எஃப்1 தெர்மோநியூக்ளியர் அணுகுண்டு, கிரீன்லாந்து துலே விமான தளத்தில், 22 மே 1968 அன்று தொலைக்கப்பட்டது. கேபினில் தீ பற்றியதால், விமானத்தில் இருந்த குழு விமானத்தைக் கைவிட்டு தப்பித்தனர்.

சோவியத் தொலைத்த அணுஆயுத டோர்பிடோக்கள்

பலோமரேஸ் சம்பவம் மட்டுமே அணு ஆயுதத்தைக் கைவிட்ட சம்பவமல்ல. 1950ஆம் ஆண்டு முதல், பூமியில் பேரழிவை விளைவிக்கக்கூடிய இந்த குண்டுகளோடு தொடர்புடைய இத்தகைய 32 விபத்துகள் நடந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில், இவை தவறுதலாகக் கைவிடப்பட்டன அல்லது அவசரநிலையின்போது தூக்கி எறியப்பட்டு பிறகு மீட்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவின் மூன்று அணுகுண்டுகள் முற்றிலும் காணாமல் போய்விட்டன. அவை, சதுப்புநிலங்கள், பெருங்கடல் என்று எங்கு தொலைந்தனவோ அங்கேயே இன்றுவரை இருக்கின்றன. ஆனால், எங்கே என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கலிஃபோர்னியாவில் இருக்கும் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு மையத்தின் கிழக்காசிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு திட்டத்தின் இயக்குநர் ஜெஃப்ரி லூயிஸ், “அமெரிக்காவின் இத்தகைய பெரும்பாலான பிரச்னைகளைப் பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். 1980களில் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்ட முழு பட்டியல் வெளியானபோது தான் இது வெளிப்பட்டது,” என்று அவர் விளக்குகிறார்.

“பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா அல்லது சீனா பற்றி எங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது. எனவே முழு கணக்கியல் போன்ற எதுவும் எங்களிடம் இல்லையென்று நான் நினைக்கிறேன்,” என்கிறார் லூயிஸ்.

சோவியத் யூனியன், 1986-இல் 45,000 அணு குண்டுகளைக் குவித்து வைத்தது. அவர்களும் அணு குண்டுகளைத் தொலைத்த சம்பவங்கள் நடந்துள்ளன. அவையும் மீட்டெடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்க சம்பவங்களைப் போலன்றி, அவையனைத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் நிகழ்ந்தன. அவற்றின் இருப்பிடங்கள் தெரிந்திருந்தாலும் அணுக முடியாத இடத்தில் இருக்கும்.

ஏப்ரல் 8,1970-இல் சோவியத் கே-8 என்ற அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் ஏர் கண்டிஷனிங் அமைப்பில் தீ பரவத் தொடங்கியது. அது ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு அருகே, பிஸ்கே விரிகுடாவில், வடகிழக்கு அட்லான்டிக் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருந்தது. அதில் மூன்று அணு ஆயுத டோர்பிடோக்கள் இருந்தன. அவை அந்த நீர்மூழ்கிக் கப்பலோடு கடலுக்குள் மூழ்கின.

1974ஆம் ஆண்டில், ஹவாய்க்கு வடமேற்கே பசிபிக் பெருங்கடலில் மூன்று ஆணுசக்தி ஏவுகணைகளுடன் ஒரு சோவியத் கே-129 நீர்மூழ்கிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது. அதை விரைவாகக் கண்டுபிடித்து, அதிலிருந்து அணு ஆயுதங்களைத் தன்வசமாக்கிக் கொள்ள அமெரிக்கா ரகசிய முயற்சிகளை எடுக்க முடிவெடுத்தது என்கிறார் லூயிஸ்.

ஹாவர்ட் ஹியூஸ் என்ற அமெரிக்க கோடீஸ்வரர், விமானி மற்றும் திரைப்பட இயக்குநர் என்று பரவலாகப் பிரபலமானவர். அவர் ஆழ்கடல் சுரங்கங்களில் ஆர்வம் இருப்பதைப் போல காட்டிக் கொண்டார். “ஆனால், உண்மையில் அது ஆழ் கடல் சுரங்கம் இல்லை. அது, ஆழ் கடல் வரை சென்று நீர்மூழ்கிக் கப்பலைப் பிடித்து மீண்டும் மேலே கொண்டு வருவதற்கான ஒரு ராட்சத கருவியை உருவாக்குவதற்கான முயற்சி,” என்று லூயிஸ் கூறுகிறார். பிராஜக்ட் அசோரியன் என்றழைக்கப்பட்ட அது துரதிர்ஷ்டவசமாக வேலை செய்யவில்லை. நீர்மூழ்கிக் கப்பலைத் தூக்கும்போதே உடைந்துவிட்டது.

“ஆகவே அந்த அணு ஆயுதங்கள் மீண்டும் கடலுக்கடியில் விழுந்திருக்கும்” என்கிறார் லூயிஸ்.

1998ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் அவருடைய கூட்டாளியும் 1958ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள டைபீ தீவுக்கு அருகே விழுந்த அணு குண்டைக் கண்டுபிடிக்க உறுதியோடு முயன்றனர். அவர்கள் முதலில் அதைத் தொலைத்த விமானியை விசாரித்தார்கள். பிறகு வெடிகுண்டைத் தேடியவர்களையும் பேட்டி கண்டார்கள். பல தசாப்தங்களுக்கு முன்பு அட்லான்டிக் பெருங்கடலின் அருகிலுள்ள விரிகுடாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இறுதியில் அவர்களுடைய தேடல் பரப்பு சுருங்கியது. பல ஆண்டுகளாக மேவரிக் கூட்டாளிகள் படகு மூலம் அந்தப் பகுதியைத் தேடினர்.

அணுகுண்டு

பட மூலாதாரம், Getty Images

ஒருநாள் அவர்கள் கதிர்வீச்சைக் கண்டறியும் கெய்கர் கருவியைப் படகில் பொருத்தி தேடிக் கொண்டிருந்தபோது, விமானி விவரித்த சரியான இடத்தில், மற்ற இடங்களில் இருக்கும் அளவை விட 10 மடங்கு அதிக கதிர்வீச்சு இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், அது கடல் பரப்பிலுள்ள தாதுக்களில் இயற்கையாக நிகழும் கதிர்வீச்சிலிருந்து வந்துள்ளது.

ஆகவே, இப்போது வரை அமெரிக்கா தொலைத்த மூன்று அணு குண்டுகள் மற்றும் சோவியத் தொலைத்த டோர்பிடோக்கள், பெருங்கடலில் அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தல்களின் நினைவுச் சின்னங்களாகக் கிடக்கின்றன. இருப்பினும் அவை பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன. இந்த ஆபத்தான ஆயுதங்கள் அனைத்தையும் ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? அவை வெடிக்கக்கூடிய அபாயம் உள்ளதா? நாம் எப்போதாவது அவற்றைத் திரும்பப் பெற முடியுமா?

தண்ணீருக்குள் வந்த பாராசூட் சிக்கல்

இறுதியாக, 1966ஆம் ஆண்டில் பி52 குண்டுவீசும் விமானம் விழுந்த ஸ்பானிய கிராமமான பலோமரேஸுக்கு மேயர்ஸ் வந்தபோது, அதிகாரிகள் காணாமல் போன அணு குண்டை தேடிக் கொண்டிருந்தனர்.

மார்ச் 1, 1996 அன்று, சிறிய நீர்மூழ்கிக் கப்பல் வெடிகுண்டு முதன்முதலில் கடலின் அடிவாரத்தைத் தாக்கியபோது ஏற்பட்ட தடத்தைக் கண்டுபிடித்தது. பிறகு, அதுகுறித்த படங்கள் ஒரு வினோதமான காட்சியை வெளிப்படுத்தின. காணாமல் போன அணு ஆயுதத்தின் வட்டமான முனை அதில் தெரிந்தது. அணுகுண்டுக்குப் பொருத்தப்பட்டிருந்த வெள்ளை நிற பாராசூட், அது விழுந்தபோது ஓரளவுக்கு வெளியாகி அணுகுண்டின் வட்டமான முனையை மூடியிருந்தது.

அந்த அணுகுண்டை மீட்பதற்கான முயற்சிகள் ஓயவில்லை. 2,850 அடி ஆழத்தில், கடல் தளத்திலிருந்து இந்த அதை மீட்பது மேயர்ஸின் வேலையாக இருந்தது. அவர்கள் சில ஆயுரம் அடி கனரக நைலான் கயிறு, ஓர் உலோக கொக்கி ஆகியவற்றை வைத்து ஒரு வகையான மீன் பிடி தூண்டிலைப் போன்ற ஒரு கருவியை உருவாக்கினர். அந்த ஆயுதத்தின் மீது அதை மாட்டி, முக்குளிப்பவர் அதற்கு அருகே செல்லக்கூடிய தொலைவுக்கு அதை மேலே இழுப்பதும், பிறகு முக்குளிப்பவர்கள் அதை மேலே கொண்டு வருவதும் “திட்டமாக” இருந்தது. ஆனால், அது வேலை செய்யவில்லை.

“அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் மெதுவாகவே செய்யப்பட்டன. நாங்கள் காத்திருந்தோம். அந்தத் தூண்டில் போன்ற கருவியை அணுகுண்டில் இணைக்க முடிந்தது. ஆனால், அதைத் தண்ணீரிலிருந்து மேலே உயர்த்தத் தொடங்கியபோது, அதிலிருந்த பாராசூட், கடலின் அடியில் விரிந்துகொண்டது. இதனால், அது ஒருபுறம் அணுகுண்டை கீழ்நோக்கி இழுக்கவே, நாங்கள் ஒருபுறம் மேல்நோக்கி இழுக்கவே, அதைத் தூக்குவது கடினமானது,” என்கிறார் மேயர்ஸ்.

“பாராசூட்கள் நிலத்தில் செயல்படுவதைப் போலவே தண்ணீரிலும் நன்றாக வேலை செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்கிறார் மேயர்ஸ். பாராசூட் ஒருபுறம் கீழ்நோக்கி மிகவும் கடினமாக இழுத்ததால், தூண்டிலின் கொக்கி உடைந்து அணு குண்டு கீழே விழுந்தது. இந்த முறை அது முன்பை விட இன்னும் ஆழத்தில் விழுந்தது. மேயர்ஸ் உடைந்து போனார்.

1px transparent line
1px transparent line

ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் வேறு வகையான ரோபோடிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். அதன்மூலம் பாராசூட்டையே பிடித்து இழுத்து, அணு குண்டை நேரடியாக மேலே இழுக்க முயன்றனர். அந்த முறையில் அதைச் செய்தும் முடித்தார்கள்.

தொலைந்துபோன அணு குண்டுகளின் அபாயம்

துரதிர்ஷ்டவசமாக, காணாமல் போன மூன்று அணு குண்டுகளில் இத்தகைய வெற்றிகரமான மீட்பு முயற்சிகள் சாத்தியப்படவில்லை. இருப்பினும் அந்த அணு குண்டுகள் வெடிக்கும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

அபாயம் ஏன் குறைவு என்பதைப் புரிந்துகொள்ள, அணு குண்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

செப்டம்பர் 1905ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது அறிவியல் கட்டுரையின் பக்கங்களில் தனது ஃபவுன்டைன் பேனாவை வைத்து, உலகின் மிகவும் பிரபலமான சமன்பாடாக மாறவிருந்த, ஒரு பொருளின் நிறையை ஒளியின் வேகத்தால் பெருக்கினால் கிடைப்பதே ஆற்றல், E = mc2 என்ற தனது கோட்பாட்டை எழுதினார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டை, நாஜிக்கள் தனது கோட்பாட்டை ஓர் ஆயுதமாக மாற்ற முயல்கிறார்கள் என்று எச்சரித்தார். அதற்குப் பிறகு விரைவாக மேன்ஹாட்டன் திட்டம் உருவாக்கப்பட்டதும் அமெரிக்கா அணு குண்டை பயன்படுத்தியதும் வரலாறு.

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் பயன்படுத்தப்பட்டவை அசல் அணு குண்டு வகை. இவை கதிரியக்க தனிமங்களின் அணுக்களை ஒன்றுக்கொன்று மோத வைத்து, அவற்றைப் பிரித்து வெவ்வேறு தனிமங்களை உருவாக்குகின்றன. இந்த “பிளவு” செயல்முறை அதிக ஆற்றலை வெளியிடுகிறது.

இந்த அணுக்கரு பிளவை அடைவதற்கு, அணு குண்டுகள் பொதுவாக துப்பாக்கி போன்ற செயல்முறையைப் பயன்படுத்தியது. அது கதிரியக்க தனிமங்களை உடைக்க வழக்கமான வெடிபொருட்களைப் பயன்படுத்தியது.

இதற்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப்பட்ட தெர்மோநியூக்ளியர் அல்லது ஹைட்ரஜன் குண்டுகள் – 1950கள் மற்றும் 60களில் நிறைய அணு ஆயுதங்கள் தொலைக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை – அதைவிட ஆயிரக்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்தவை.

இவை, முதலில் அணுகுண்டுகளைப் போலவே வழக்கமான பிளவு நடந்து அளப்பறிய ஆற்றலை வெளியிடும். இது இரண்டாவது மையத்தைப் பற்ற வைக்கும். அதில், ஹைட்ரஜன் ஐசோடோப்புகள், டியூட்டீரியம் (கனமான ஹைட்ரஜன்) மற்றும் டிரிடியம் (கதிரியக்க ஹைட்ரஜன்) ஆகியவை ஒன்றாக உடைந்து, முன்பைவிடப் பல மடங்கு அதிக ஆற்றலை வெளியிடுகின்றன.

தொலைந்து போன டைபீ தீவு அணுகுண்டை எடுத்துக்கொண்டால், அது இன்னும் எங்கோ கடலுக்கடியே மண்ணில் புதையுண்டு கிடக்கிறது. பிப்ரவரி 5, 1958-இல், இந்த 3,400-கிலோ மார்க் 15 தெர்மோநியூக்ளியர் ஆயுதம் பி-47 குண்டுவீச்சு விமானத்தில் ஏற்றப்பட்டது. இதுவொரு நீண்ட பயிற்சிப் பணியிலொரு பகுதி. மக்கள் விரும்பத்தக்கதுகோ போல, விர்ஜீனியாவின் ராட்ஃபோர்ட் நகரத்தை உருவகப்படுத்தி, சோவியத் யூனியன் மீதான தாக்குதலை உருவகப்படுத்துவது தான் திட்டம். விமானிகள் ஃப்ளோரிடாவில் இருந்து புறப்பட்டு பல மணிநேரங்கள் கனரக ஆயுதங்களுடன் கப்பலில் பறக்கும் திறனைப் பரிசோதிக்கும் ஒரு வழியாக, தங்கள் இலக்கை நோக்கிச் சென்றனர்.

அணு குண்டுகளைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால், திரும்பும் வழியில், விமானங்கள் தெற்கு காரோலினாவில் ஒரு தனி பயிற்சிப் பணியை எதிர்கொண்டது. இந்தப் பயிற்சியின் திட்டம், பி47 விமானத்தில் ஒன்றை இடைமறிப்பது. ஆனால், அந்த வழியில் வந்த அணு ஆயுதம் ஏந்தியிருந்த வேறு பி47 விமானத்தை அவர்கள் இடைமறித்தது தெரியவில்லை. அதைத் தொடர்ந்து நடந்த விபத்தில் அணுகுண்டை ஏற்றிச் சென்ற பி47 ரக விமானம் சேதமடைந்தது.

அணுகுண்டை தண்ணீரில் வீசிவிட்டு, அவசரமாகத் தரையிறக்க விமானி முடிவெடுத்தார். வெடிகுண்டு 30,000 அடி ஆழத்தில், டைபீ தீவு கடல் பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த தாக்கத்தில் கூட அது வெடிக்கவில்லை. உண்மையில் முன்பு கூறிய இத்தகைய 32 விபத்துகளில் எதுவுமே அணு குண்டுகளை வெடிக்க வைக்கவில்லை. ஆனால், இரண்டு குண்டுகள், கடல் பரப்பை கதிரியக்கப் பொருட்களால் மாசுபடுத்தியுள்ளன.

பிளவு வினை நடக்கத் தேவையான அணுக்கருப் பொருளை ஆயுதத்திலிருந்து தனித்தனியாக வைத்திருப்பது, அணு குண்டு வெடிக்காததற்குரிய காரணிகளில் ஒன்று என்று லூயிஸ் கூறுகிறார்.

சுமார் 10 வாரங்கள் தேடியபிறகு, டைபீ தீவு வெடிகுண்டு 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று தொலைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரின் உதவியாளர் எழுதிய ஒரு கடிதத்தில், அவர் வெடிகுண்டு “முழுமையானதாக இருந்தது” என்று விவரித்தார். அதாவது அதில் புளூட்டோனியம் கோர் இருந்தது. இது உண்மையாக இருந்தால், மார்க் 15 இன்னமும் முழு வெடி திறன் கொண்டதாக இருக்கலாம்.

இன்று இந்த வெடிகுண்டு 5-15 அடிக்கு கடல் தரை மண்ணின் அடியில் புதைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், விமானப்படை அணு ஆயுதங்கள் மற்றும் எதிர்ப்புப் பரவல் நிறுவனம், அதனுள்ளே இருக்கும் வெடிபொருட்கள் அப்படியே இருந்தால், அது “தீவிரமான வெடிப்பு அபாயத்தை” ஏற்படுத்தக்கூடும் என்று முடிவு செய்தது.

அணு ஆயுதம் நீருக்கடியில் வெடிக்குமா?

சாத்தியமுண்டு. 25 ஜூலை 1946இல் அமெரிக்கா பிகினி அட்டோல் என்ற பகுதியில் அணுகுண்டை வெடிக்கச் செய்தது. பன்றிகள் மற்றும் எலிகளால் நிரப்பப்பட்ட கப்பல்களுக்குக் கீழே 90 அடி ஆழத்தில் அணு குண்டை வெடிக்க வைத்தனர். பல கப்பல்கள் உடனடியாக மூழ்கின. அதிலிருந்த உயிரினங்கள், ஆரம்ப வெடிப்பிலும் பிறகு தொடர்ந்த கதிர்வீச்சிலும் உயிரிழந்தன. வேற்று கிரக வானிலையைப் போல, ராட்சத வெள்ளை காளான் மேகம் எழுவதை அந்த நாளில் மேற்கொள்ளப்பட்ட அணு குண்டு வெடிப்பு காட்டியது.

அணு குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சோதனை மற்றும் பிற சோதனைகளின் விளைவாக, அந்தத் தீவுச் சங்கிலி மிகவும் கதிரியக்கம் கொண்டதாக மாறியது. அது இன்றுவரை கதிர்வீச்சு கொண்டதாக உள்ளது. செர்னோபில் போல, மனிதர்களற்ற காட்டுயிர்களின் சோலையாக அது மாறிவிட்டது.

அணுகுண்டுகளின் கதிரியக்கத் தன்மை

காணாமல் போன மூன்று அணுகுண்டுகள் எப்போதாவது மீண்டும் கண்டுபிடிக்கப்படுவது சாத்தியமில்லை என்று லூயிஸ் கருதுகிறார்.

விமானங்கள் கடலில் விழுந்து நொறுங்கும்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய உதவும் கறுப்புப் பெட்டி பெரும்பாலும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் இதைக் கண்டுபிடிக்க, “நீருக்கடியில் இருப்பிடத்தைக் காட்டும் பீக்கன்” பயன்படுத்தப்படும். அது தேடல் குழுக்களை கறுப்புப் பெட்டி இருக்கும் இடத்தை நோக்கி வழிநடத்தும்.

ஆனால், தொலைந்துபோன அணு ஆயுதங்கள் இருந்த விமானத்தில் அத்தகைய தொழில்நுட்பங்கள் எதுவுமில்லை. அதற்குப் பதிலாக, தேடல் குழுக்கள் கடலை சிறிது சிறிதாகத் தேட வேண்டும்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டெரெக் டியூக் டைபீ வெடிகுண்டை தேடியதைப் போல, கதிர்வீச்சு உள்ள பகுதிகளைத் தேடுவது ஒரு மாற்றாக இருக்கலாம். ஆனால், இது மிகவும் சிக்கலானது. அணு குண்டுகள் உண்மையில் கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல.

“அவற்றைக் கையாளும் மக்களுக்குக் கதிரியக்க அச்சுறுத்தல் இல்லாத வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றில் கதிரியக்கத் தன்மை இருந்தாலும் அதைக் கண்டறிய மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்,” என்கிறார் லூயிஸ்.

லூயிஸை பொறுத்தவரை, தொலைந்துபோன அணு ஆயுதங்கள் மீதான ஈர்ப்புக்குக் காரணம், அவை இப்போது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான அபாயங்கள் இல்லை. அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதுதான் அதற்கான காரணம். அது, ஆபத்தான கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பாகக் கையாளும் அதிநவீன அமைப்புகளில் இருக்கும் பலவீனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

அணு குண்டு மீட்பு

பட மூலாதாரம், Getty Images

லூயிஸ், “பொதுவில், அணு ஆயுதங்களைக் கையாளும் நபர்கள் நமக்குத் தெரிந்த மற்றவர்களைவிட வித்தியாசமானவர்கள், மிகக் குறைவான தவறுகளைச் செய்கிறார்கள் அல்லது அவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற கற்பனை உள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனால், உண்மை என்னவென்றால், அணுசக்தியைக் கையாள வேண்டிய அமைப்புகள் மற்ற மனித அமைப்புகளைப் போன்றவை தான். அவை குறைபாட்டற்றவை அல்ல. அவை தவறுகள் செய்கின்றன,” என்று கூறுகிறார்.

அனைத்து அணுகுண்டுகளும் இறுதியில் மீட்கப்பட்டுவிட்ட பாலோமரேஸில் கூட, நிலம் இன்னமும் முன்பு நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளின் கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது. ஆரம்ப துப்புரவு முயற்சிகளுக்கு உதவிய அமெரிக்க ராணுவப் பணியாளர்களில் சிலருக்கு மர்மமான முறையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கும் இந்தத் துப்புரவு முயற்சிக்கும் தொடர்பு உள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள். 2020ஆம் ஆண்டில், உயிர் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் முன்னாள் படைவீரர்கள் விவகார செயலாளருக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். இதில் பலரும் 70 மற்றும் 80 வயதின் பிற்பகுதியில் உள்ளனர். உள்ளூர் மக்கள் பல தசாப்தங்களாக கதிர்வீச்சை முழுமையாகச் சுத்தம் செய்யுமாறு பிரசாரம் செய்து வருகிறார்கள். பாலோமரேஸ் “ஐரோப்பாவின் மிகுந்த கதிரியக்கம் கொண்ட நகரம்” என்று அழைக்கப்பட்டது. மேலும் உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தற்போது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் அப்பகுதியில் விடுமுறை விடுதி கட்டத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து வருகின்றனர்.

1968ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை குரோம் டோம் முடிவுக்கு வந்ததால், பனிப்போரின் போது ஏற்பட்ட இழப்புகள் மீண்டும் நிகழ வாய்ப்பில்லை என்று லூயிஸ் நம்புகிறார்.

இதற்கு விதிவிலக்காக, இன்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றிலும் இது மாதிரியான, கிட்டத்தட்ட தவறுதலாகக் கைவிடக்கூடிய நிலைமைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் தற்போது 14 பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. அதேநேரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் ஒவ்வொன்றிடமும் அத்தகைய நான்கு கப்பல்கள் உள்ளன.

அணுசக்தி தடுப்புகளாக வேலை செய்ய, இந்த நீர்மூழ்கிக் கப்பகள் கடலில் செயல்படும்போது இவை கண்டறியப்படாதவாறு இருக்க வேண்டும். மேலும் அவை எங்குள்ளன என்பதைக் கண்டறிய மேற்பரப்புக்கு எந்த சமிக்ஞையையும் அனுப்ப முடியாது. முக்கியமாக, நீர்மூழ்கிக் கப்பல் கடைசியாக எந்த நேரத்தில், எங்கு இருந்தது, எந்தத் திசையில் சென்றது, எவ்வளவு வேகமாகப் பயணித்தது என்பதைக் கணக்கிடுவதற்கு கைரோஸ்கோப்கள் பொருத்தப்பட்ட இயந்திரங்களைச் சாந்துள்ளனர். இந்தத் துல்லியமற்ற அமைப்பு, பல சம்பவங்களை விளைவித்துள்ளது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் எஸ்.எஸ்.பி.என். நீர்மூழ்கிக் கப்பல் கிட்டத்தட்ட ஒரு கப்பலின் மீது மோதியிருக்கும்.

அணு ஆயுதங்களைத் தொலைக்கும் சகாப்தம் இன்னும் முடிவடையாமல் கூட இருக்கலாம்.

1px transparent line

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »